இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார்.பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர், திருமதி பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விஜய பிரபாகரன் பேசுகையில்,
”இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஹீரோவோட அண்ணனாக இல்லாமல் சண்முக பாண்டியனின் ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன். தயாரிப்பாளர் முகேஷ் சார், சண்முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று இயக்குநர் பொன்ராம் ஆர்வத்துடன் இருக்கிறார், என்று எங்களிடம் சொன்னதும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.
நான் கல்லூரி படிக்கும்போது சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவான படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அந்த அளவிற்கு பெரிய இயக்குநரின் இயக்கத்தில் சண்முகம் நடிக்கப் போகிறான் என்றவுடன் சந்தோஷப்பட்டேன். வேறு யார் நடிக்கிறார்கள் என்று பார்த்தபோது பொன்ராம் இந்த படத்தில் சரத் சார் நடிக்கிறார் என்று சொன்னவுடன் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்ற போது நானும், அம்மாவும் சென்றிருந்தோம். அப்போது இந்த ‘உசிலம்பட்டி..’ பாடல் ஒலித்த போது அனைவரும் ரசித்தனர். இதை பார்த்த உடன் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நான் நினைத்தேன். படம் வெளியான பிறகு இதற்காகவே நிறைய ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருவார்கள். இது சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான் நம்புகிறேன். அத்துடன் இது ஒரு புது கூட்டணி என்பதாகவும் பார்க்கிறேன். டிசம்பர் 19ம் தேதி அன்று கொம்பு சீவி மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில்,
” நான் இந்த மேடையில் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேச வேண்டும். நான் குழந்தை பருவத்தில் இருந்து கேப்டனின் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். கேப்டன் எனக்கு மிகவும் இன்ஸ்பயரிங்கான பர்சன். கேப்டன் திருமணம் ஆகி முதல் முறையாக தம்பதிகளாய் எங்களது வீட்டிற்கு விருந்திற்காக வருகை தந்தார்கள். அப்போது நான் , என்னுடைய உறவினர்கள் அனைவரும் அப்பாவின் இசையை ஒலிக்க விட்டு நடனமாடிக் கொண்டிருந்தோம்.
இயக்குநர் பொன்ராம் என்னை சந்தித்தபோது, யார் ஹீரோ என கேட்டேன். சண்முக பாண்டியன் என்று சொன்னது ஒரு வினாடி கூட தாமதிக்காமல் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன். கேப்டன் சார், ஏராளமானவர்களுக்கு பில்லராக இருந்திருக்கிறார். என்னுடைய சகோதரரான சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் நிச்சயமாக ஒரு பெரிய இடம் உண்டு. சரத் சாரிடமிருந்து தொடங்கி இன்று சண்முக பாண்டியனுக்கும் பணியாற்றுகிறேன். இந்தப் படத்தின் திரைக்கதையை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதிலும் பொன்ராமின் டிரேட் மார்க் காமெடி காட்சிகள் சூப்பராக இருந்தன. அவருடன் பணியாற்றிய அனுபவம் ஜாலியாக இருந்தது.
கேப்டன் சார் நடித்த ‘தென்னவன்’ படத்திற்கு நான் இசையமைத்தேன். ‘அரவிந்தன்’ படத்திற்கு இசையமைப்பதற்கு முன் அண்ணன் கார்த்திக் ராஜா இசையமைத்த ‘அலெக்சாண்டர்’ படத்திற்கு நான் பின்னணி இசையமைத்தேன். அப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு , தான் அந்தப் படத்திற்கு பின்னணி இசையமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த படத்தில் ஒரு பாடலையும், பின்னணி இசையும் அமைத்தேன். இந்த வகையில் என்னுடைய திரையுலக பயணம் ‘அலெக்ஸாண்டர்’ படத்திலிருந்து தான் தொடங்கியது. இன்று கேப்டன் மகன் நடிக்கும் படத்திற்கு இசை அமைத்திருப்பது அவரின் ஆசியாகவும், எங்களுடைய குடும்பத்தினருக்கு பணியாற்றுவது போலும் இருக்கிறது,” என்றார்.
இயக்குநர் பொன் ராம் பேசுகையில்,
”இந்தப் படத்தின் கதையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை படமாக்கி கொண்டிருந்தபோது வைகை அணையின் உள்பகுதிக்கு சென்றேன். அங்கு மோட்டார் வைத்த கிணறு மூலம் பாசனம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அணையின் உள் பகுதிக்குள் யாரேனும் விவசாயம் செய்வார்களா என்ற ஆச்சரியத்துடன் பார்த்தேன். அதைப்பற்றி விசாரித்த போது அணையில் நீர் வற்றி விட்டால் எங்களுடைய நிலம், விவசாயம் இதெல்லாம் தெரியும். என்றனர்.
அணை முழுவதும் நீர் நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரியவர் கையில் குடையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வை எனக்குள் எதையெதையோ உணர்த்தியது. அதுதான் எனக்கு இந்தப் படத்திற்கான உந்துதல். இப்படி ஒரு சீரியஸான கதையில் எப்படி காமெடி என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். இதுதான் எனக்கான சவால். இதில் தான் ‘ரொக்க புலி’ என சரத் சாரும், ‘பாண்டி’ என சண்முக பாண்டியனையும் கதாபாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் இந்த படம் ஆக்ஷனும் காமெடியும் கலந்த என்டர்டெய்னராக இருக்கும்.
யுவன் ஷங்கர் ராஜா உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என எனக்கு நீண்ட நாளாக ஆசை இருந்தது. என்னை முதன் முதலாக துபாய்க்கு அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு மட்டும் தான் உண்டு. இந்தப் படத்தில் இடம்பெறும் அம்மா பாடலை பாடியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு மிகப்பெரிய நன்றி.
சரத் சாரிடம் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். நாட்டாமை நடித்த படத்தில் ஆசிரியை வேடத்தில் நடித்த நடிகை ராணியின் மகள்தான் தார்னிகா. சண்முக பாண்டியன் இந்தப் படத்தில் நடிக்கும் போது கேப்டனை பார்த்தது போலவே இருந்தது. பகல், இரவு என்று பாராமல் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இந்த படத்திற்காக பின்னணி குரல் கொடுத்திருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் சண்முக பாண்டியன் பேசுகையில்,
”இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். நீண்ட கால அனுபவமிக்க பலர் என்னுடன் நடித்தார்கள். அப்பாவின் நெருங்கிய நண்பரான சரத்குமார் சார் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றியதிலிருந்து எனக்கும் அவர் நெருங்கிய நண்பராகி விட்டார். அவருடன் பழகிய நாட்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை பார்த்த பிறகு, நானும் இயக்குநர் பொன்ராமின் ரசிகனாகி விட்டேன். அவருடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.
என்னிடம் இருக்கும் நகைச்சுவை நடிப்பையும், எதிர்வினையையும் அவர்தான் வெளிக்கொண்டு வந்தார். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் ஒத்திகையும், பயிற்சியும் செய்தோம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை அளித்தார். குறிப்பாக நான்- சரத் சார் -கல்கி- மூவரும் லாரி தொடர்பான காட்சி ஒன்றில் நடித்தோம். அந்த காட்சியில் நாங்களாக தான் ஒரு எல்லைக்கு மேல் நிறுத்திக் கொண்டோம். இந்தப் படம் சீரியஸான கதை. அதை இயக்குநர் பொன்ராம் நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இதை நீங்கள் அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று ரசித்து அனுபவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில்,
”இந்த விழா கொம்பு சீவி படத்தின் இசை வெளியீட்டு விழாவாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இது ஒரு உணர்வுப்பூர்வமான விழாவாக கருதுகிறேன். சண்முக பாண்டியன் எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராவார். அதில் எந்த மாற்றமும் இல்லை. கேப்டன் விஜயகாந்த் எப்படி இருப்பாரோ அதேபோல் இவரும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்.இந்தப் படத்தில் மாமன்- மச்சினனாக நாங்கள் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த ‘கொம்பு சீவி’ படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் திரையரங்கத்திற்கு சென்று இந்த படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. இந்தத் திரைப்படம் விவசாயத்தை பற்றியும், விவசாயம் சிறப்பாக இல்லாத தருணத்தில் விவசாயிகள் என்ன செய்தார்கள் என்பது குறித்தும் ஒரு சிறிய விஷயத்தை எடுத்துக் கொண்டு இயக்குநர் அதனை நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.