குடிகாரனிடம் சிக்கித்தவிக்கும் சிறுவன்! – ‘கூழாங்கல்’ விமர்சனம்!

94-வது ஆஸ்கர் விருதுகளுக்கான, இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘கூழாங்கல்’. இப்படத்தை அறிமுக இயக்குனர், பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். கருத்தடையான், சிறுவன் செல்லப்பாண்டி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஒரு குடிகாரனிடம், அவனது மனைவியும், குழந்தைகளும் எதிர்கொள்ளும் துன்பங்களையும், துயரங்களையும் ஆவண மற்றும் அவார்டு படங்களுக்கே உரித்தான வகையில் விவரிக்கிறது.

கருத்தடையான் (குடிகாரன்), தன்னிடம் கோபித்து கொண்டு, தந்தை வீட்டுக்கு சென்ற மனைவியை மீண்டும் அழைத்துவர முயற்சிக்கிறான். இதற்கு பகடைக்காயாக பள்ளியில் படித்து கொண்டிருக்கும் சிறுவனை பாதியில் சிறைப்படுத்தி, தன்னுடன் இழுத்து வருகிறான். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், கூழாங்கல்.

கூழாங்கல் படத்தின் இயக்குனர், பி எஸ் வினோத்ராஜ், வல்லரசாக துடித்து கொண்டிருக்கும் இந்தியாவின் கண்டு கொள்ளப்படாத, ஒரு கிராமத்து மக்களின் வாழ்க்கையை சொல்ல முயன்றிருக்கிறார். பஞ்சத்தின் காரணமாக எலி’க் கறி தின்பது. ஊத்து தண்ணீரை நம்பி வாழும் ஊரில், பெட்டிக்கடையில் சாராயம் (அரசால் விற்கப்படும் மது) சுலபமாக கிடைப்பது. பேருந்தில் தண்ணீர் குடங்களுக்கு கட்டணம் வசூலிப்பது என அரசை கடுமையாக சாடியிருக்கிறார்.

‘குடிகார’ தந்தை வேடத்தில் நடித்திருக்கும் கருத்துடையான், கதாபாத்திரமாகவே காட்சியளிக்கிறார். அவரது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் செல்லப்பாண்டி சிறப்பாக நடித்திருக்கிறான். குறிப்பாக கொளுத்தும் வெயிலில், கீழே கிடைத்த கண்ணாடித் துண்டினை கொண்டு, தன்னுடைய அப்பாவின் முதுகில் சூரிய ஒளியைப் பாய்ச்சி, சுடவைக்கும் காட்சியில், சிரிப்பினையும் பரிதாபத்தினையும், ஒரு சேர வரவழைக்கிறான்.

சிறுவன் தனது வீட்டில் கூழாங்கற்களை சேர்த்திருப்பது எதை உணர்த்துவதற்கு? அடிக்கடி நடக்கும் சம்பவங்களை உணர்த்தவா? இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், வசனங்களை தவிர்த்து, அவரவர் பார்வைக்கேற்றபடி புரிந்து கொள்ளும்படி காட்சிகளை அமைத்திருப்பதாகவே தோன்றுகிறது.

மொத்தத்தில், கூழாங்கல், திரைப்பட விழாக்களில் வெளியிடப்படும், படங்களை கண்டு ரசிப்பவர்களுக்கான படம்.