‘கொட்டுக்காளி’  படத்தில் அன்னா பென்னுக்கு ஒரே ஒரு டைலாக் தான்!

நடிகர் சூரியின் தொடர் வெற்றிக்குப் பிறகு அவரது நடிப்பினில், வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம், ‘கொட்டுக்காளி’. இப்படத்தினை ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கிறார். SK புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். சூரியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அன்னா பென் நடித்திருக்கிறார்.

கொட்டுக்காளி பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்றதுடன் பல விருதுகளையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூரி, அன்னா பென் மற்றும் இப்படத்தின் இயக்குநர் ஆகியோர் படம் குறித்து கூறியதாவது..

நடிகர் சூரி கூறுகையில்,

‘விடுதலை’ மற்றும் ‘கருடன்’ படங்களில் கிடைத்த நல்ல பெயரினை, கொட்டுக்காளியும் பெற்றுத்தரும். இது ஒரு புது மாதிரியான கதைக்களம். பல விஷயங்களை பேசியிருக்கிறது. மக்களின் மனதில் இடம் பிடிக்கும் முக்கியமான படமாக இருக்கும். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் அனைவரும் சந்தித்ததாக இருக்கும். இந்தப்படத்தின் கதையை இயக்குநர் சொன்னவுடன் கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

கொட்டுக்காளி படத்தினை சிவகார்த்திகேயன் பார்த்துவிட்டு விடுதலை படத்தினை போல் இந்தப்படம் மிகப்பெரிய அடையாளத்தினை கொடுக்கும் என்றார். அதோடு படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜை வெகுவாக பாராட்டினார். என்றார்.

அன்னா பென் கூறுகையில்…

இயக்குநர் வினோத்ராஜ் கொட்டுக்காளி படத்தின் கதையினை கூறியவுடன், அதில் நடிப்பதற்கு எனக்கு நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்தேன். மதுரை வட்டாரத்து மொழி கலச்சாரம் பற்றி பேசியிருக்கிறது. இருந்தாலும், இந்தப்படத்தின் கதை அனைவரின் உணர்வுகளுக்குமானதாக இருந்தது, இன்னொரு பெரிய ப்ளஸ்!

எனது கதாபாத்திரத்தின் பெயர் மீனாட்சி. பிடிவாதக்காரப் பெண்ணாக நடித்திருக்கிறேன். படத்தில் எனக்கு ஒரே ஒரு டைலாக் தான். இந்தக் கதாபாத்திரம் உடல் மொழி, முகபாவனை, பார்வை ஆகியவற்றின் மூலம் அழுத்தமாக பேசும் கதாபாத்திரம். நடிப்பதற்கு சவாலாக இருந்தது. முடிந்தவரை கதாபாத்திரதிற்கேற்றவாறு நடித்திருக்கிறேன், என்றார்.

கொட்டுக்காளி படத்தின் கதை..!

சூரிக்கும் அன்னா பென்னுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் நிச்சயிக்கின்றனர். ஆனால் அன்னா பென் தாழ்த்தப்பட்ட ஒரு இளைஞரை விரும்புகிறார். இதன் பிறகு என்ன நடந்து என்பது தான் கொட்டுக்காளி படத்தின் கதை. பேய் ஓட்டுதல், சடங்கு சம்பிரதாயம், பெண்ணடிமைதனம் என எல்லாவற்றையும் பேசுகிறது! இந்தப்படம்.