பல சர்வதேச விருதுகளை வென்ற ‘கூழாங்கல்’ திரைப்படத்தை, இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘கொட்டுக்காளி’. சிவகார்த்திகேயனின் SK புரொடக்சன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில், சூரி மற்றும் அன்னா பென் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘கொட்டுக்காளி’ திரைப்படம் 53வது டிரான்சில்வேனியா, சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதையும், 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில், ஃபோரம் பிரிவின் கீழ், தேர்வான முதல் தமிழ்ப்படம், என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘கொட்டுக்காளி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.
‘கொட்டுக்காளி’ திரைப்படம் குறித்து, இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் கூறியதாவது..,
‘கொட்டுக்காளி’ என்ற சொல், பிடிவாதக்காரியாக இருக்கும் ஒரு பெண்ணை குறிப்பிடும் சொல்லாக, தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில், ஒரு முறையேனும் இந்த சொல்லை பயன்படுத்தியிருப்பார்கள். படத்தை பார்த்த பிறகு உங்களுக்கு இந்த சொல்லின் அர்த்தம் புரியும். அன்னா பென்னின் கதாபாத்திரம், இதற்கு பொருத்தமாக இருந்தது.
பாண்டி கதாபாத்திரத்திற்காக சூரியை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தோம். சூரி போன்ற மண் சார்ந்த ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவரிடம் கதையை சொன்ன போது, ‘’பாண்டி என்ற கதபாத்திரத்தில் வாழ்ந்துவிட வேண்டும்.’’ என்று கூறினார். அது எனக்கு மேலும் உற்சாகத்தினை கொடுத்தது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை! லைவ் சவுண்டில் தான் டமாக்கப்பட்டிருக்கிறது. காட்சிகளின் நகர்வு, இசை இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தாது. இசை வேண்டாம் என முன்னரே திட்டமிடப்படவில்லை! நான் பார்த்த மக்களை, அனுபவித்த வாழ்க்கையை படைப்பாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே படங்களை இயக்குகிறேன். ‘கூழாங்கல்’ படத்தை, மக்களும், ஊடகங்களும் அங்கீகரித்ததால் எனக்கு பொறுப்பு அதிகமானது. தைரியமும் அதிகமானது.
‘கொட்டுக்காளி’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தினை கொடுக்கும் என்று உறுதியுடன் கூறுகிறேன்.’ என்றார்.