விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி, இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், ‘குட்டி புலி’ தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது பட குழுவினருடன் ‘ மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து படத்தின் இசையை விஜய் சேதுபதி வெளியிட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
தயாரிப்பாளர் மேத்யூ பேசுகையில்,
”மிகவும் உணர்வுபூர்வமான மேடை இது. 23 வருஷம் எனக்கு மட்டுமே உரிமையான சொத்தை எழுதிக் கொடுப்பது போன்றது. 23 வருஷம் வரைக்கும் எனக்கு அண்ணனாக இருந்த ஏகன்- செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு ஏராளமானவர்களுக்கு அண்ணனாகி விடுவார். அந்த அளவிற்கு படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நான் அவனை என்றுமே பாராட்டியதில்லை. அவனும் என்னை எப்பொழுதும் பாராட்டியதில்லை. இதுதான் என்னுடைய முதல் பாராட்டாக இருக்கும். படத்தை நான் பார்த்து விட்டேன். பார்த்ததால் தான் இப்படி பேசுகிறேன்.
எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, யோகி பாபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
‘வாழ்க்கை என்பது முடிவை நோக்கி செல்வது’ என்பதை இந்தப் படத்தில் சீனு ராமசாமி சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது. அதனை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய செய்தியும் இருக்கிறது. அதனை இப்போதே நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த படத்தின் மூலம் நான் ஒரு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொண்டேன். இதற்காக இயக்குநர் சீனு ராமசாமிக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று தம்பியாக என்னை என் அண்ணன் ஏகன் பெருமை படுத்தி விட்டார். இன்று எங்கு சென்றாலும் ஏகனின் தம்பி என்று என்னை அடையாளப்படுத்தி அழைக்கிறார்கள். இதுவும் எனக்கு பெருமிதமாக இருக்கிறது. 20ம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் நிறைய பேர் ஏகனை அண்ணனாக கொண்டாடுவார்கள்,” என்றார்.
நடிகர் யோகி பாபு பேசுகையில்,
”மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் தயாரிப்பாளர் அருளானந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பிறந்த நாளின் போது என்னை சந்தித்து ‘நல்லதொரு கதை. நடித்துக் கொடுக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமியுடன் நிறைய நேரம் பேசி இருக்கிறேன். அவருடன் பேசும் போது இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேசி இருக்கிறேன். அவரும் சரியான தருணம் அமையட்டும் என சொன்னார். இந்த திரைப்படத்தில் நல்லதொரு வேடம் இருக்கிறது, வாருங்கள் என அழைத்தார். ஒரு ஜிப்பாவும் வேஷ்டியும் வந்தது. அவரிடம் வேடிக்கையாக இதை யார் போட்டு கொண்டிருந்தது என கேட்டேன். அவரும் வி கே ராமசாமி என்றார்.
இந்தப் படத்தில் ஏகன் சொன்னது போல் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏகனுடைய பெரியப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். படங்களில் நான் லோக்கலாக ‘கவுன்ட்டர்’ அடித்து கொண்டிருப்பேன். ஆனால் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட என்னை ‘கவுன்ட்டர்’ அடிக்க விடாமல் முழுவதுமாக கட்டுப்படுத்தி விட்டார் இயக்குநர் சீனு ராமசாமி. படமாக பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
அதன் பிறகு தம்பி ஏகன்- படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது காட்சி நிறைவடைந்த உடன், ‘நான் நன்றாக நடித்தேனா..!’ என என்னிடம் கேட்பார். அவரிடம், ‘நானே சரியாக நடித்தேனா.. இல்லையா..! என தெரியாது. அமைதியாக இருந்து விடு’ என்றேன். ஏனெனில் இயக்குநர் எந்த தருணத்தில் எந்த வசனத்தை எப்படி மாற்றுவார் என்று யாருக்கும் தெரியாது. அதனால் இதெல்லாம் ஆண்டவன் கட்டளை என அவரிடம் சொல்வேன். யார் என்ன சொன்னாலும் யாரை எந்த உயரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும். படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலிருந்து நானும் விஜய் சேதுபதியும் தொடர்ந்து பயணிக்கிறோம். அந்தப் பயணம் தற்போது வரை இனிமையாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசுகையில்,
”சகோதரன் ஏகனுக்கு முதலில் வாழ்த்துகள். இதுபோன்ற மேடையில் 11 ஆண்டுகளுக்கு முன் நிற்கும்போது உங்கள் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. நான் மிகவும் நடுக்கத்துடன் தான் இருந்தேன். ஆனால் உங்கள் முகத்தில் நல்லதொரு நம்பிக்கை தெரிகிறது. பாடல்களிலும் காட்சிகளிலும் உங்களுடைய நடிப்பு நன்றாக இருக்கிறது. தயாரிப்பாளர் மேத்யூ. 21 வயது தான் ஆகிறது. ஆனால் மேடையில் தெளிவாக பேசுகிறார். நான் மேடையில் பேசுவதற்கு இன்றும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறேன். இதற்காக அவருடைய தந்தையான தயாரிப்பாளர் அருளானந்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏகன் பார்ப்பதற்கு லட்சணமாகவும் நம் மண்ணின் மைந்தனாகவும் இருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த அனைவரும் திரையில் அழகாக இருக்கிறார்கள். படத்தின் கதையும் அழகாக இருக்கிறது. சீனு ராமசாமியிடம் எனக்கு மிகவும் பிடித்தது… எத்தனை முறை இந்த தேனியில் அவர் படம் எடுத்தாலும், அவர் நூறு படம் எடுத்தாலும் ஒவ்வொரு படத்திலும் தேனியை வித்தியாசமான கோணங்களில் காண்பிப்பார். புதிதாக காண்பது போல் இருக்கும். அதுதான் அவருடைய பலம்.
கதை சொல்லும் போதும் அதை படமாக்கும் போதும் எந்த தருணத்திலும் அவர் சிறிது யோசித்தோ அல்லது தடுமாறியோ நான் பார்த்ததே இல்லை. தன்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் பணத்தை முதலீடு செய்தால் அதனை எவ்வளவு சிக்கனமாக செலவு செய்து படத்தின் தரத்தை குறைக்காமல் ரசிகர்களுக்கு தெளிவாக புரியும் வகையில் படத்தை நிறைவு செய்ய முடியுமோ, அதனை நேர்த்தியாக செய்யக்கூடியவர் சீனு ராமசாமி. அந்த வகையில் நான் பார்த்து வியந்த இயக்குநர் சீனு ராமசாமி. இதுவரை அவரது இயக்கத்தில் நான் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திலிருந்து ‘மாமனிதன்’ வரை அவருடன் இணைந்து பணியாற்றும் போது எங்களுக்கான பட்ஜெட் அதிகமாக கிடைத்தாலும் படத்திற்கு என்ன தேவையோ அதை பொறுப்புணர்ந்து செயல்படுபவர் சீனு ராமசாமி. அதனால் சீனு ராமசாமி போன்ற ஒரு இயக்குநர் மூலம் ஏகன் அறிமுகமாவதற்கு ஏகன் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். நேரம் கிடைக்கப்போதெல்லாம் தான் கற்றுக் கொண்ட விஷயத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடியவர் சீனு ராமசாமி. நிச்சயம் படப்பிடிப்பு தளத்தில் அவர் ஏகனுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருப்பார்.” என்றார்.
நடிகர் ஏகன் பேசுகையில்,
”விஜய் சேதுபதி வருகை தந்து என்னைப் பற்றி இங்கு குறிப்பிட்ட வார்த்தைகள் எனக்கான சுமையை அதிகரித்து விட்டது என நினைக்கிறேன். அவர் தனக்கான பொறுப்புணர்வை என்னிடம் திருப்பி விட்டு சென்று விட்டார். அதனால் அவர் என்னிடம் கொடுத்த பொறுப்பை நேர்த்தியாக செய்து அவரது பெயரை காப்பாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். எனக்காக இங்கு வருகை தந்தமைக்கும், வாழ்த்தியதற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இங்கு வருகை தந்த உடன் என்னுடைய பதற்றத்தையும், பரபரப்பையும் பார்த்துவிட்டு ‘பழகிக்கோ’ என ஆறுதல் படுத்தினர். அந்த ஆறுதல் தான் இந்த மேடையில் என்னை இயல்பாக நிற்க வைத்திருக்கிறது.
யோகி பாபு- கல்லூரியில் படிக்கும் போது நமக்கு ஒரு சீனியர் இருப்பார். அவர் சீனியர் என்று நமக்கு தெரியாது. எப்போதும் நம்முடனேயே இருப்பார். அதேபோல் தான் யோகி பாபு. படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய சீனியாரிட்டியை ஒருபோதும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இயல்பாகவும், மகிழ்ச்சியாகவும் உடன் இருந்து வழி நடத்தினார். இதற்காக யோகி பாபுவிற்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்லதுரை யார் என்றால், நம் எல்லோருடைய வாழ்விலும் ஒருவர் இருப்பார். நம்முடைய குடும்பத்திற்காக அவர் கஷ்டப்படுவார், அனைத்தையும் இழப்பார். அவருக்கு என்ன வேண்டும் என்பதை சிந்திக்க மாட்டார். ஆனால் குடும்பத்திற்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே யோசிப்பார்.
நான் பிளாக் ஷீப் எனும் யூட்யூப் சேனல் மூலமாகத்தான் சினிமாவை கற்கத் தொடங்கினேன். அதன் பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் ‘கனா காணும் காலங்கள்’ இணைய தொடரில் நடிக்க தொடங்கினேன். அதன் பிறகு ‘ஜோ’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தேன். தற்போது சீனு ராமசாமி எனும் பல்கலைக்கழகத்திலிருந்து கோழிப்பண்ணை செல்லத்துரையாக அறிமுகமாகிறேன். அவரிடமிருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். அத்துடன் அவருக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். மேலும் இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இந்நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில்,
”சினிமாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை என்ன என்பது குறித்து நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். ஒரு திரைப்படம் தயாராகிறது, திரையரங்கத்தில் திரையிடப்படுகிறது, வசூல் செய்கிறது. அதன் பிறகு அந்த திரைப்படத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். அப்படி என்றால் இது வணிகம் மட்டும் தானா..! இது சந்தை மதிப்புள்ள பொருள் மட்டும் தானா..! இந்தக் கேள்வி.. எனக்குள் நீண்ட நாட்களாக இருக்கிறது. இதற்கு மாற்றாக என்ன செய்யலாம், என்ன மாதிரியான விஷயங்களை முன்னிலைப்படுத்தலாம் என நான் சிந்திக்கும்போது எனக்கு இருப்பது நிலம், அது என் நிலம், என் ஊர், என் மண், நான் வாழ்ந்த வாழ்க்கை. நான் வாழ விரும்பும் ஒரு வாழ்க்கை. கதை என்றால் அது என் நிலம் தான். என் மண்ணுடன் தொடர்புடையது.
இணையத் தொடர்கள் அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் அதற்கு தமிழில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இணைய தொடர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் அவர்கள் முழு நீள திரைப்படத்தை பார்த்து பழக்கப்பட்டவர்கள். அவர்கள் பாகம் பாகமாக படைப்பை பார்ப்பதை விரும்புகிறார்கள். ஆனால் நாம் இரண்டு பாகமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல் பாதி – இரண்டாம் பாதி என இரண்டு பாகமாகத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் கூடுதலாக மூன்று அல்லது நான்கு பாகங்கள் இணைத்தால் நமக்கு பிடிப்பதில்லை.
சினிமா என்பது முழு உடல். அதனை அரை மணி நேரம் பார்த்துவிட்டு அப்படியே நிறுத்திவிட்டு, இதற்கு முன் எப்படி இருக்கும் எனக் கேட்பது தவறு. முழு உடல், முழு தரிசனம். அப்படி ஒரு முழு தரிசனம் இந்த ‘கோழிப்பண்ணை செல்லதுரை’யில் கிடைக்கும்.
ஏகன், ஏற்கனவே சின்னத்திரையில் அறிமுகமானவர். அத்துடன் நடனம், உடற்பயிற்சி, நடிப்பு என அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தார். நான் அவரை ஆடிஷனுக்காக வரவழைத்தேன். ஆனால் ஏகனை நான் ஆடிஷன் செய்யவில்லை. அவரை வரும்போது கவனித்தேன். உட்காரும்போதும் கவனித்தேன். பேசும் போதும் அவனுடைய கண்களை கவனித்தேன். அவ்வளவுதான். அவனை அனுப்பி வைத்து விட்டேன். இந்த இளைஞன் எதிர்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான் என்று எனக்கு அப்போதே தெரிந்து விட்டது. சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார் என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.
சிறந்த நடிப்பு என்றால் என்ன? நான் நடிப்பை சொல்லி கொடுக்கும் ஆசிரியர் அல்ல. நடிப்பை வாங்கும் ஆசிரியர். இசைஞானி இளையராஜா மிகச்சிறந்த இசைக் கலைஞர்களை தேர்வு செய்கிறார். அவர்களிடமிருந்து சிறந்த முறையில் ராகங்களை வாசிக்க செய்து அதனைப் பெற்றுக் கொள்கிறார். அதைப்போல் ஏகன் என்னிடம் வரும்போது ஒரு நடிகருக்கான முழு தகுதியுடன் வருகை தந்த ஒரு இளைஞன்.
‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படம் ஒரு முக்கியமான விஷயத்தை பேசி இருக்கிறது. வாழ்க்கை என்னை கைவிட்டு விட்டது, இந்த வாழ்க்கையை வாழவே பிடிக்கவில்லை, இந்த வாழ்க்கையில் எனக்கென்று யாரும் இல்லை என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு இந்த படத்தில் ஒரு செய்தி இருக்கிறது. இந்த பிரபஞ்சம் எந்த ஒரு தனி மனிதனையும் கைவிடுவதில்லை. ஏதேனும் ஒரு ரூபத்தில் வருகை தந்து உங்களை அரவணைத்து காக்கும்.
யோகி பாபு கதையை கேட்காமல் என்னை நம்பி வந்து இந்த திரைப்படத்தில் ஏகனின் பெரியப்பாவாக பெரியசாமி எனும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். ஏகன்-யோகி பாபு கூட்டணியில் படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்று இருக்கிறது. உணர்வுபூர்வமாகவும், மௌனமாகவும் இருக்கும் இந்த காட்சியில் ஏகன் மற்றும் யோகி பாபுவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவரும். இந்த காட்சியில் ஏகனின் நடிப்பை பார்த்து பார்வையாளர்கள் வியப்படைவார்கள். அந்த வகையில் ஏகனுக்கு தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் காத்திருக்கிறது.
‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ உள்ளூர் மக்களுக்கும் மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பிடித்த செல்லதுரையாகவும் இருக்கும்,” என்றார்.