ஏகன், பிரிகிடா சகா, சத்யா தேவி, யோகி பாபு, ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவகுமார் , நவீன், ரியாஸ்,பவா செல்லதுரை உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், கோழிப்பண்ணை செல்லதுரை. எழுதி இயக்கியிருக்கிறார், தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி.
இயக்குநர் சீனுராமசாமியின் படங்கள் எல்லாமே மனிதம் போற்றி வாழச்செய்யும், அன்பை முன்னிறுத்தும் படங்களாக இருக்கும். இந்த கோழிப்பண்ணை செல்லதுரையும் அதையே முன்னிறுத்துகிறது.
சிறுவன் செல்லதுரைக்கு (ஏகன்) ஒரு தங்கை (சத்யா தேவி). இவர்களது அம்மா (ஐஸ்வர்யா தத்தா) கணவரையும் பிள்ளைகளையும் விட்டு விட்டு, இன்னொருவருடன் ஏற்பட்ட தகாத தொடர்பினால் ஓடிவிடுகிறார். ஐஸ்வர்யா தத்தாவின் கணவரும் பிள்ளைகளை விட்டு விட்டு போய் விடுகிறார்.
சிறுவன் செல்லதுரை, தங்கை மீது பாசமாக இருக்கிறான். நிர்கதியாய் விடப்பட்ட இவர்களுக்கு கோழிப் பண்ணை வைத்திருக்கும் (யோகிபாபு) பெரியசாமி பாதுகாவலராய் இருந்து கவனித்து வருகிறார். செல்லதுரை அவரது கோழிப்பண்ணையில் வேலை செய்வதுடன், கிடைத்த அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். இருவரும் வளர்ந்து வாலிப வயதினை அடையும்போது தங்கைக்கு இன்னொருவருடன் காதல் வருகிறது. இது சிறு வயதினில் ஓடிப்போன அம்மாவை ஞாபகப்படுத்துகிறது. தங்கை மீது கோபம் வருகிறது. செல்லதுரையை இன்னொரு பெண் காதலிக்கிறார். ஆனால் செல்லதுரை ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் கோழிப்பண்ணை செல்லதுரையின் கதை. இதை கிராமிய பின்னணியில் எளிமையான முறையில் சொல்லியிருக்கிறார், இயக்குநர் சீனு ராமசாமி.
‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்திற்கான நடிகர்கள் தேர்வு நன்றாக இருக்கிறது. ஏகன் அந்தச் ‘செல்லதுரை’ கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். அவரது தங்கையாக நடித்திருக்கும் சத்யா தேவி, செல்லதுரையை விரும்பும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரிகிடா சகா, கோழிப்பண்ணை நடத்தி வரும் யோகிபாபு சில இடங்களில் செண்டிமென்ட், காமெடிகாட்சிகளில் கவர்கிறார்.
அசோக் ராஜின் ஒளிப்பதிவு, என் ஆர் ரகுநந்தனின் இசை, வைரமுத்து , கங்கை அமரன், பா. விஜய் ஆகியோரின் பாடல் வரிகள் என அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது.
சிறுவயதிலேயே தவிக்கவிட்டுச் சென்ற பெற்றோர்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில், பிள்ளைகள் உதவும் அந்த நேரம் மகத்தானது. அது குறித்து ஏகன் பேசும் வசனங்களும் நச்சுன்னு இருக்கிறது.
மற்றபடி, சீனு ராமசாமியின் படங்களில் ஒரு அழுத்தமான, சுவாரசியமான திரைக்கதை இருக்கும். அது, இந்தப்படத்தில் மிஸ்ஸிங்!
‘கோழிப்பண்ணை செல்லதுரை’ போன்ற படங்களும் சமூகத்திற்கு தேவையானதே!