‘வீனஸ் இன்போடெய்ன்மெண்ட்’ சார்பில், கே.ஜே.கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தினை, எழுதி இயக்கியிருக்கிறார், பாலாஜி வேணுகோபால். ஒளிப்பதிவு, ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி. இசை, அச்சு ராஜாமணி.
இப் படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, குமரவேல், ஜி.எம்.குமார், வினோத் சாகர், பாலசரவணன், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, , சிவா அரவிந்த், கௌதம் சுந்தர்ராஜன், அர்ஜய், சார்லஸ் வினோத், விஜய் ஜாஸ்பர், கே.சரவணன், கே.கோபால், டெலிபோன் ராஜ், சக்தி பாலாஜி கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைப்படத்துறையில், இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்துடன் வலம் வருபவர், நாயகன் குமரன். இவர்களது மாடியில் குடியிருந்து வரும் சமூக சேவகர் குமரவேல் மூலமாக குமரனுக்கு பல தொல்லைகள் வருகிறது. இதனால், அவர் மீது கடும் கோபம் கொள்கிறார். இந்நிலையில் ஒரு நாள் சமூக சேவகர் குமரவேல், மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இதற்கு காரணத்தைத் தேடி போலீஸ் விசாரித்து வருகிறது. குமரன் மீதும் போலீஸின் சந்தேகப் பார்வை விழுகிறது. சமூக சேவகர் குமரவேல் இறப்புக்கு காரணமானவர்கள் யார்? என்பதை, டார்க் காமெடியுடன் சொல்லும் திரைக்கதை தான், ‘குமார சம்பவம்’.
‘குமார சம்பவம்’ என்ற படத்தின் தலைப்பு, கதைக்கு வெகு பொருத்தம். முதலில், தூக்கம் வரவழைக்கும் காட்சிகளால் படம் நகர்கிறது. அதன் பிறகு, தூக்கம் கலைந்து சிரிக்க தயாராகி விடுகிறோம். குறிப்பாக வில்லன்களைத் தேடி சிபி ஐ அதிகாரியாக செல்லும் வினோத் சாகர் மூலம் படம் கலகலப்பாக நகர்கிறது. ஆனால், இது டார்க் காமெடி வகையறா ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும்! நாடகத்தனமான காட்சிகளை தவிர்த்து, ஒரு ரெகுலரான கமர்ஷியல் படமாக தயாரித்திருந்தால் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருந்திருக்கும்.
‘பாண்டியன் ஸ்டோர்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானவர் தான், இந்தப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் குமரன் தங்கராஜன். தன்னால் முடிந்த வரை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார். நாயகியாக பாயல் ராதாகிருஷ்ணா, வழக்கமான சினிமா கதாநாயகியாக வந்து போகிறார். பால சரவணன், சில இடங்களில் கலகலப்பூட்டுகிறார். குமரவேல், வழக்கமான ஒரு சமூக சேவகராக வருகிறார். இவர் குறித்த காட்சிகள் பெரிதாக எதுவும் கவரவில்லை. ஆனால், அவர் சாகும் தருவாயும், அதற்கு காரணமானவரையும் நினைக்கும் போது சிரிப்பு வரும்!
நாயகன் குமரனின் தாத்தாவாக ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, சிவா அரவிந்த், கெளதம் சுந்தர்ராஜன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர். அச்சுராஜா மணியின் இசையும், ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும் ஓகே! மற்றபடி, குமார சம்பவம் ஓகே தான்!