‘கும்பாரி’ திரைப்பட விமர்சனம்!  

விஜய் விஷ்வா, மஹானா சஞ்சீவி, பருத்திவீரன் சரவணன், நலீப் ஜியா, ஜான் விஜய் ,சாம்ஸ் ,மதுமிதா, மீனாள், ராயன் மற்றும் பலர் நடித்துள்ள படம், கும்பாரி. இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார், கெவின் ஜோசப்.

கும்பார் திரைப்படத்தினை ‘ராயல் எண்டர்பிரைசஸ்’ சார்பில் டி. குமாரதாஸ் தயாரித்துள்ளார். இப்படத்தினை  ‘9Vஸ்டுடியோஸ்’ வெளியிட்டுள்ளது.

கன்னியாகுமரிப் பகுதியில், கேபிள் டிவி ஆபரேட்டரான விஜய் விஷ்வாவும், மீன் பிடித் தொழில் செய்பவரான நலீப் ஜியாவும்  சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். ஒருவரின் மீது ஒருவர் அளவற்ற பாசம் கொண்டிருப்பவர்கள்.

யூடியுப் நடத்தி வரும் ஒரு நாள் நாயகி மஹானாவுக்கும் நாயகன் விஜய் விஷ்வாவுக்கும் ஒரு மோதலுக்கு பிறகு காதல் பிறக்கிறது. காதலுக்கு அடுத்தபடியாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பதிவு திருமணம் செய்து கொள்ள பதிவாளரிடம் செல்கின்றனர்.  நாயகி மஹானாவுக்கு சட்டப்படி போதியத் திருமண வயது ‘21’ வருவதற்கு இன்னும் 7 நாட்கள் இருப்பதால் பதிவாளர் திருமணம் செய்து வைக்க மறுக்கிறார். அந்த 7 நாட்கள் கழித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க நண்பர் ஜியா உதவுகிறார்.

இந்நிலையில் நாயகி மஹானாவின் அண்ணன் ஜான் விஜய்  அடியாட்களின் துணையோடு இவர்களை துரத்துகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், கும்பாரி படத்தின் கதை.

வழக்கமான அண்ணன் – தங்கை சென்டிமென்ட், காதல் இவற்றை முன்னிறுத்தி நகைச்சுவையாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர், கெவின் ஜோசப்.

அருண் பாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகன் விஜய் விஷ்வாவும்,அவரது நண்பனாக ஜோசப் பாத்திரத்தில் நடித்துள்ள நலீப் ஜியாவும் நன்றாக நடித்துள்ளார்கள்.

தர்ஷினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மஹானா அளவான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

நகைச்சுவை நடிகை மதுமிதா ஆர்த்தி கதாபாத்திரத்தில் வருகிறார். சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

ஒரு பரபரப்பான காதல் கதையாக இருக்க வேண்டியதை ஆங்காங்கே அறுவை ஜோக்குகளுடன் அசட்டுத்தனமான காட்சிகளை வைத்து இது தான் நகைச்சுவை என நம்ப வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். நமக்கு தான் சிரிப்பு வரவில்லை. இருப்பினும் சாம்ஸ் அந்த குறைய போக்கி நம்மை சிரிக்க வைக்கிறார்.

படத்தில் நட்பு ,காதல், அண்ணன் தங்கை பாசம் என மூன்றையும் சொல்ல முயன்றுள்ளார்கள். ஆனால் அதை எப்படி சொல்ல வேண்டுமென்பதில் குழம்பி இருக்கிறார்கள்.