‘ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ்’ சார்பில், தருண் விஜய் தயாரித்துள்ள திரைப்படம், குற்றம் புதிது. தமிழகத்தில் இப்படத்தினை, ‘உத்ரா புரொடக்ஷன்ஸ்’ சார்பில், ஹரி உத்ரா வெளியிட்டுள்ளார். நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கியிருக்கிறார். தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
காவல் துறையில், அசிஸ்டென்ட் கமிஷனர் இருப்பவர் மதுசூதன் ராவ். இவரது மகள் நாயகி சேஷ்விதா கனிமொழி. திரைப்பட இயக்குநராக ஆவதற்கு முயற்சிகள் செய்து வருகிறார். ஒரு நாள் இரவு நேரத்தில் வீடு திரும்பும் வழியில் கடத்தப்பட்டு, நாயகன் தருண் விஜய்யால் கொடூரமாக வெட்டப்பட்டு, கொலை செய்யப்படுகிறார். கொலை செய்த குற்றத்தினை ஒப்புக்கொள்ளும் தருண் விஜய், தானாக முன் வந்து போலீஸில் சரணடைகிறார்.
போலீஸ் கமிஷனரின் நேரப்பார்வையில் விசாரணை நடக்கிறது. அப்போது சேஷ்விதா கனிமொழியைத்தவிர்த்து மேலும் இரண்டு கொலைகளை செய்ததாக வாக்குமூலம் தருகிறார். போலீஸார் அதிர்ச்சியடைகின்றனர். விசாரணை மேலும் துரிதப்படுத்தப்படுகிறது.
தருண் விஜய் ஏன் இந்தக்கொலைகளை செய்தார், அதற்கு என்ன காரணம்? இதுவே படத்தின் கதை.
அறிமுக நாயகன் தருண் விஜய், ஒரு ஹீரோவுக்கன தகுதிகளுடன், நல்ல உடற்கட்டுடன் மிடுக்கான இளைஞராக காட்சித்தருகிறார். முதல் படத்திலேயே அவருக்கு பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம். அவரும் அதை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார். எதிர்காலத்தில் ஒரு நல்ல ரொமேன்டிக் ஹீரோவாக வலம் வரலாம்!
நாயகி சேஷ்விதா கனிமொழி, சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கண்கள் அவருக்கு பெரிய பலமாக இருக்கிறது. அனைத்து உணர்வுகளையும் எளிதில் கடத்துகிறார்.
அசிஸ்டென்ட் கமிஷனர் மதுசூதனன் ராவ், நாயகனின் அப்பாவா நிழல்கள் ரவி, ராம்ஸ், பாய்ஸ் ராஜன் ஆகியோர் கதாபாத்திரத்திகேற்றபடி நடித்துள்ளனர்.
எழுதி இயக்கியிருக்கும் நோவா ஆம்ஸ்ட்ராங், யூகிக்க முடியாத திருப்பங்கள் வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால், அதை விறுவிறுப்பாக சொல்வதில் கோட்டை விட்டுள்ளார்.
திரைக்கதை மோசமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக காவல் துறை குறித்த அத்தனைக்காட்சிகளும் கேலிப் பொருளாக காணப்படுகிறது. கதாபாத்திரங்களின் சித்தரிப்பும் சொல்லிக்கொள்ளும்படியில்லை.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் கரண் பி.க்ருபா இசையும் ஓகே!
மொத்தத்தில், ‘குற்றம் புதிது’ ஒரு ஓகேவான கிரைம் த்ரில்லர்!