‘லவ் சப்ஸ்கிரைப் ஷேர்’ – விமர்சனம்!

‘லவ் சப்ஸ்கிரைப் ஷேர்’ திரைப்படத்தில், ஆதவ் கிருஷ்ணா ,சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன் ,ரோஹித், தனஞ்செயன், முத்து பவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆர் .மகாலட்சுமி முருகன் எழுதி இயக்கியுள்ளார். என்.எஸ். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் என்.பி. படத்தொகுப்பு செய்துள்ளார். ரஜினி சேகர் கலை இயக்கம். பி.ரகு தயாரித்துள்ளார்.

சீனியர் மாணவரான ஆதவ் கிருஷ்ணாவும்,  ஜூனியர் மாணவி சிம்ரனும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். எப்போதும் படிப்பு..  படிப்பு என்றிருக்கும் ஆதவ் கிருஷ்ணா, சக மாணவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களுக்கு  பாடம் எடுத்து வருகிறார். அப்படியான சூழலில் சிம்ரனும் அவரிடம் பாடம் கற்று வருகிறார். இருவருக்கும் காதல் உருவாகிறது. சிம்ரனின் அம்மா தனித்து வாழ்ந்து வரும் சூழலில், அப்பா கடுமையாக காதலை எதிர்க்கிறார். எதையும் கண்டு கொள்ளாத சிம்ரன், தனது காதலன் ஆதவ் கிருஷ்ணாவுடன் சேர்ந்து அம்மாவை சந்திக்க காசிக்குச் செல்கிறார்கள். அங்கே சிம்ரன் மாயமாகிறார். சிம்ரனின் அப்பாவும், காதலனும் அவரைத் தேடுகிறார்கள். சிம்ரன் கிடைத்தாரா, அவரது காதல் என்ன ஆனது? இதுவே லவ் சப்ஸ்கிரைப் ஷேர் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

அறிமுக நடிகரான, நாயகன் ஆதவ் கிருஷ்ணா, தடுமாற்றமின்றி நடித்திருக்கிறார். அவருக்கு இது முதல் படம் போல் தெரியவில்லை! காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.  நாயகி சிம்ரன், ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமாக காட்சி தருகிறார். கதலுனுக்காக அப்பாவிடம் சண்டையிடுவது, அம்மாவிடம் உருக்கத்துடன் பேசுவது. காதலனுடன் சந்தோஷமாக வலம் வருவது என அனைத்து காட்சிகளிலும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார். நாயகன் ஆதவ் கிருஷ்ணாவின் அப்பா, அம்மாவாக, முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக நடித்திருக்கும் படவா கோபி, வினோதினி இருவருமே ஓகேவான நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள். இவர்களால்,  திரைக்கதையில் எந்த சுவாரசியமும் ஏற்படவில்லை. மற்றபடி சிம்ரனின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்டவர்கள் நடிப்பும் ஓகே தான்.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார், சென்னை மற்றும் காசியை அழகாக படம்பிடித்துள்ளார். அஸ்வமித்ராவின் இசையில் பாடல்கள், பின்னணி இசையில் பெரிதாக குறைகளில்லை. திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் R.மகாலட்சுமி முருகன், ஆபாசமின்றி, அருவருப்பின்றி, குடும்பப் பாசம், உறவுகளின் வெவ்வேறு உணர்வுகளை முன்னிறுத்தி ஒரு காதல் கதையை சில திருப்பங்களுடன் கொடுத்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டலாம். இயக்குநரின் பெரிய மைனஸ், லாஜிக்கும் நம்பகமில்லாத திரைக்கதையும் தான். அதை சரி படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.