‘லாந்தர்’ – விமர்சனம்!

‘எம் சினிமா புரொடக்‌ஷன்’ தயாரிப்பில், விதார்த் ,ஸ்வேதா டோரதி , விபின், சஹானா, பசுபதிராஜ், கஜராஜ் ,மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘லாந்தர்’. இப்படத்தினை சாஜி சலீம் எழுதி இயக்கி உள்ளார். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்க, எம் எஸ் பிரவீன் இசையமைத்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த விதார்த், நேர்மையான காவல் உதவி ஆணையர். இவர், அதிக சத்தம் கேட்டால் மயங்கி விழும் குறைபாடுடைய  ஸ்வேதா டோரதியோடு வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில், மர்ம மனிதர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொடூரமாக தாக்குகிறார். இதில் சிலர் மரணமும், படுகாயமும் அடைகின்றனர். அந்த நபரை மடக்கி பிடிக்க முயலும் போலீசாரும் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். விஷயம் அறிந்து, காவல் உதவி ஆணையர் விதார்த், அந்த மர்ம மனிதனை பிடிக்க முயற்சிக்கிறார். அந்த மர்ம மனிதன் யார்? போலீசிடம் சிக்கினாரா, இல்லையா? என்பது தான் ‘லாந்தர்’ படத்தின் கதை.

விதார்த், ஒரு காவல் உதவி ஆணையர் எப்படி இருக்க வேண்டும். என்பதை தனது நடிப்பின் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு பொறுப்பான போலீஸாகவும், கணவனாகவும் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு தக்கபடி நடித்திருப்பது சிறப்பு.  நள்ளிரவு நேரத்தில், குறைபாடுள்ள மனைவியை வீட்டில் தனியாக விட்டு விட்டு, தவித்தபடியே பணிக்கு செல்லும் காட்சிகளில், காவலர்களின் இக்கட்டான சூழலை வெளிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது.

சஹானா, ஸ்வேதா டோரத்தி என இரண்டு நாயகிகள். இதில், மஞ்சுவாக நடித்திருக்கும் சஹானாவிற்கு காதல், மன அழுத்தம், கோபம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தி  நடிப்பதற்கு அதிக காட்சிகள் கிடைத்திருக்கிறது. அவரும் வெளிப்படுத்தி நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஸ்வேதா டோரத்தி, விபின் மற்றும் சஹானா, பசுபதிராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் ஆகியோரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு செய்துள்ளனர்.

கவர்ந்திழுக்கும் ‘லாந்தர்’ எனும் தலைப்பு. தொடர்ந்து, வித்தியாசமான கதைகளில் நடிக்கும் விதார்த். இந்த இரண்டும் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினை உருவாக்கியது. இந்தப்படத்தின் கதை, ஒரே இரவில் நடந்து முடிகிறது. படம் ஆரம்பித்தவுடன், சில சம்பவங்களுடன் பரபரப்பாக கதை நகர்கிறது. ஆனால், அதன்பிறகு வரும் காட்சிகள் சுவாரசியமின்றி நகர்கிறது. இருந்தும், இடைவேளை வரை கொஞ்சம் பரவாயில்லை. இடைவேளைக்குப் பிறகு, அய்யோடா! சீரியசாக படமாக்க வேண்டிய சேஸிங் காட்சிகள், விளையாட்டுத்தனமாக எடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.

கதை முழுவதும் இரவு நேரத்தில் நடக்கிறது. இந்த இரவு நேரக்காட்சிகளுக்கு, ஒளிப்பதிவாளர் ஞான சவும்தாரின் ஒளிப்பதிவு பெரிதும் உதவியிருக்கிறது. இதுவே, படத்தின் பலமாகவும் இருக்கிறது.

இசையமைப்பாளர் எம்.எஸ்.பிரவீனின் இசை, கொஞ்சம் காட்சிகளை மேம்படுத்துகிறது.

சண்டைப்பயிற்சி இயக்குநர் விக்கியின் அமெச்சூர்த் தனமான காட்சியமைப்புகள், படத்தின் ஆகப்பெரும் பலவீனம். அதிலும், க்ளைமாக்ஸில் இடம்பெறும் சேஸிங் காட்சிகள் மகா மட்டம்! படத்தின் மொத்த உழைப்பும் வீண்!

சண்டைப்பயிற்சி இயக்குநரைப் போலவே, படத்தின் இன்னொரு பெரும் பலவீனம் எடிட்டர் பரத் விக்ரமன். ரிப்பீட்டகும் காட்சிகளைக் கூட கவனிக்காமல் விட்டுள்ளார்!

பரபரப்பான த்ரில்லர் படத்திற்குரிய அனைத்து அம்சங்களும் இருந்தும், படமாக்களில் அதை கோட்டை விட்டுள்ளனர்.

இயக்குநர் சாஜி சலீம், இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், ‘லாந்தர்’ பிரகாசமாக இருந்திருக்கும்!