‘லாரா’ – விமர்சனம்!

அசோக் குமார், கார்த்திகேசன் ,அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி,பாலா,எஸ். கே. பாபு, திலீப்குமார்,இ .எஸ் . பிரதீப் உள்ளிட்டோர் நடித்திருக்க, கதை எழுதி இயக்கியிருக்கிறார், மணி மூர்த்தி . ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார். கார்த்திகேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு படத்தினை தயாரித்துள்ளார்.

அடையளம் தெரியாத ஒரு இளம் பெண்ணின் உடல், கடற்கரையில்  ஒதுங்கிக் கிடப்பதாக காரைக்கால் பகுதியில் உள்ள நிரவி காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் வருகிறது. இன்ஸ்பெக்டர் கார்த்திகேசன் அங்கு செல்கிறார். அந்த இளம் பெண்ணின் உடல் முற்றிலும் சிதைந்த நிலையில், முகம் வைத்து அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. அதே வேளையில், லாரன்ஸ் என்பவர் தனது மனைவி ஸ்டெல்லாவைக் காணவில்லை! என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இறந்த பெண் லாரன்ஸின் மனைவி என போலீசார் உறுதி செய்ய, அதற்கு லாரன்ஸ் மறுப்பு தெரிவிக்கிறார்.

இதனால், போலீஸ் லாரன்ஸை சந்தேகித்து அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறது. அப்போது பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவருகின்றன. அது என்ன என்பது தான், பல திருப்பங்களுடன் தொடரும்  லாரா படத்தின் கதை.

பல படங்களில் கதாநாயகனாக நடித்த  நடிகர் அசோக் குமார் வரும் காட்சிகள் குறவானதாக இருந்த போதும், நிறைவான நடிப்பினை கொடுத்திருக்கிறார்.

லாரா படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேசன் விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டராக வருகிறார் . அவரது தோற்றம் கதாபாத்திரத்திற்கு பலம் கொடுக்கிறது.

கதையை நகர்த்திச் செல்லும் லாரா கதாபாத்திரத்தில் அனுஷ்ரேயா ராஜன் நடித்திருக்கிறார். ரசிகர்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை அள்ளுகிறார்.

மேலும் ஸ்டெல்லாவாக நடித்திருக்கும் வெண்மதி, ஜெயாவாக நடித்திருக்கும் வர்ஷினி, பரூக் யாசின் என்கிற எம் எல் ஏ பாத்திரத்தில் நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ் ஆகியோர் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.  இவர்களோடு பாலா, எஸ் கே பாபு,  திலீப்குமார், இ .எஸ் . பிரதீப்  ஆகியோரும்  நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவண் குமார். இருவரும், ஒரு க்ரைம் திரில்லருக்குத் தேவையான ஒளிப்பதிவையும் இசையையும் கொடுத்துள்ளனர்.

லாராவின் பற்றிய பரபரப்பான புலனாய்வுக் கதையில் இடையே வரும் ஒரு சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி, ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லருக்கு என்ன வேண்டுமோ அது இருக்கிறது. திரைக்கதையில் இன்னும் வேகம் ஏற்படுத்தியிருநதால் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில்,  கிரைம் திரில்லர் படம் பார்ப்பவர்களை கவரும்!