“கடவுளின் தேசத்தை மனித நேயம் மீட்டு கொடுக்கும் ” – நடிகர் நிவின் பாலி

இடை விடாத கடுமையான மழை கேரளா வாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது என சொல்லலாம். தனிப்பட்ட ஓவ்வொரு குடிமகனும், தங்களால் இயன்ற முறையில் வெளி உலகிற்கு தங்களது அவலத்தை சொல்லி , அதன் மூலம் தங்கள் மக்களுக்கு உதவி கோருகிறார்கள். நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான  அறிக்கை மூலம் கேரளா மக்களுக்கு உதவி கோருகிறார்.

” குழந்தை பருவத்தில் இருந்தே நான் “கடவுளின் தேசம்” எனப்படும் கேரளாவில் பிறந்தவன் என்பதிலும், அந்த கேரளா “இந்தியா” என்கிற மாபெரும் தேசத்தின் ஒரு பகுதி என்பதில் மிக மிக பெருமை கொண்டிருந்தேன், என்றும் பெருமை பட்டு கொண்டே  இருப்பேன் என்பதில் ஐயமில்லை.

ஆனால் இன்று அந்த அழகிய கேரளா வெள்ளத்தாலும், நில சரிவினாலும் கடுமையான பாதிப்பில் உள்ளது.பல நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்து உள்ளனர். எண்ணற்ற மக்கள் தங்கள் உடமையை இழந்து கூரை இன்றி, உணவின்றி, அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.  என் மாநிலத்தின் மக்கள் நிலைமை என் மனதை பிசைகிறது.இந்த நேரத்திலும் ஒரு நம்பிக்கை கீற்றாய் என் மனதில் ஒளி பாய்ச்சுவது என் தேசத்தின் ஒற்றுமை தான்.  வேற்றுமையிலும் ஒற்றுமை  என்கிற தத்துவத்தில் நம்பிக்கை உள்ள என் தேசத்து மக்கள் என் மாநிலத்தையும், என் மாநில மக்களையும் கைவிட மாட்டார்கள் என நம்புகிறேன்.

இந்த வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து   வீறு கொண்டு எழுந்து மீண்டும் கேரளா ராஜநடை போடும் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் உடனடியான தேவைகள் அவசியம் என்பதால் தான் இந்த கோரிக்கை. உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவய பொருட்களை  உடனடியாக கேரளா மக்களுக்கு அனுப்புங்கள். யார்  மூலமாக என்பது முக்கியம் இல்லை, உடனடியாக  வந்து சேர வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். “கடவுளின் தேசத்தை மனித நேயம் மீட்டு கொடுக்கும் ” என்கிற நம்பிக்கையில் நான் உள்ளேன். நம்புகிறேன். பிராத்திக்கிறேன். கை கூப்பி வேண்டுகிறேன்.

 

Leave A Reply

Your email address will not be published.