Connect with us

Latest News

கீழணைக்கு ஆபத்து: கனரக ஊர்திகள் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்! – ராமதாஸ்அறிக்கை

Published

on

திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேலணையின் 9 மதகுகள் உடைந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணையின் தூண்களில் ஏற்கனவே ஏற்பட்ட விரிசல்கள் வெள்ளத்தால் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், கீழணையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

கொள்ளிடம் தொடங்கும் இடத்தில் 1836-ஆம் ஆண்டு மேலணையை கட்டிய அதே ஆர்தர் காட்டன் என்ற அதிகாரி தான் அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து 1840-ஆம் ஆண்டில் அணைக்கரையில் கீழணையைக் கட்டினார். தஞ்சாவூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் 1.32 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழும் இந்த அணையும் முறையான பராமரிப்பு இல்லாமல் கடந்த 2002-ஆம் ஆண்டு வலுவிழந்தது. அதன்பின் 16 ஆண்டுகளாகியும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்க தமிழக ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்பது தான் வேதனை.

கீழணை வலுவிழந்ததற்கான காரணங்களை கடந்த 2002-ஆம் ஆண்டில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் மோகனகிருஷ்ணன் ஆய்வு செய்தார். கீழணை அமைந்துள்ள பாலம் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல என்பதைக் கண்டறிந்த அவர், அப்பாலத்தில் கனரக ஊர்திகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். ஆனால், அப்பரிந்துரையை அப்போதைய ஜெயலலிதா அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து கனரக ஊர்திகள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் 2009-ஆம் ஆண்டில் பாலத்தின் 13-ஆவது மதகில் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி பாலத்தை மீண்டும் ஆய்வு செய்த மோகனகிருஷ்ணன் கீழணை அமைந்துள்ள அணைக்கரை பாலத்தில் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்த பரிந்துரைத்தார்.

அதன்படி அணைக்கரை பாலத்தில் சில ஆண்டுகளுக்கு பேருந்துகள் உள்ளிட்ட கனரக ஊர்திகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், சில மாதங்களில் அணைக்கரைப் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் அணை மீண்டும் பாதிக்கப்பட்டது. கீழணையில் 5 முதல் 18 வரையிலான 14 நீர்வழி மதகுகள் சேதமடைந்துள்ளன. காவிரிப் பாசன மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பயணம் மேற்கொண்டுள்ள நான், அங்குள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளிடம் இதுகுறித்து விசாரித்தேன். அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கீழணை தூண்களிலும், மதகுகளிலும் ஏற்பட்ட விரிசல்கள் அதிகரித்திருப்பதாகவும், மேலணை இடிந்த பிறகு கீழணைக்கு எந்த நேரத்தில் எத்தகைய ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தாங்கள் வாழ்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

கீழணையில் தொடர்ந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் அதற்கு எந்த நேரமும் ஆபத்து நேரலாம் என்பது தான் அப்பகுதியில் உள்ள உழவர்களின் கருத்தாக உள்ளது. மேலணை உடைந்து நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கீழணையின் வலிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுவரை எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளவில்லை. கீழணை உள்ளிட்ட தமிழ்நாட்டு அணைகளின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் அரசின் அக்கறை என்ன என்பதை இதிலிருந்தே அறியலாம்.

கீழணையில் கனரக ஊர்திகள் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று 16 ஆண்டுகளுக்கு முன்பும், அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று 9 ஆண்டுகளுக்கு முன்பும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அப்பரிந்துரைகளை செயல்படுத்தாததன் மூலம் கீழணையின் பாதுகாப்புக்கு திராவிடக் கட்சிகளின் அரசுகள் பெரும் துரோகம் செய்துள்ளன. அணைக்கரையிலிருந்து கும்பகோணம் செல்லும் ஊர்திகளை மதனத்தூர் – நீலத்தநல்லூர் கொள்ளிடம் பாலம் வழியாக இயக்குவதன் மூலம் கீழணையில் ஊர்திப் போக்குவரத்தை தவிர்க்க முடியும். கடந்த காலங்களில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். ஆனால், இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது தான் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகளை விரைந்து நிறைவேற்றி முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர கீழணைக்கு மாற்றாக அதே பகுதியில் வலிமையான புதிய அணை கட்டுவதற்கான வாய்ப்புகளையும் அரசு ஆராய வேண்டும்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

India

‘இல்லம் தேடிக்கல்வி’ திட்டத்தை எதிர்த்து சீமான் கண்டன அறிக்கை!

Published

on

By

தமிழக அரசின் புதிய திட்டமான இல்லம் தேடிக்கல்வி திட்டத்தை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

ஆரியத்திட்டத்தைத் திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள் இனியும் இருக்க மாட்டார்கள் – சீமான் கண்டனம் .

தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘இல்லம் தேடிக்கல்வி’ எனும் திட்டமானது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், பொத்தாம் பொதுவாகப் பார்க்கிறபோது அது மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டுக்கானத் திட்டம் எனக்கூறப்பட்டாலும், அது கல்வியைக் காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டத்துக்குத்  துணைபோவதேயாகும். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைபபதற்காகக் கொண்டு வரப்பட்டத் திட்டமெனக் காரணம் கற்பிக்கப்பட்டாலும், இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரினைத் தன்னார்வலர் எனும் போர்வைக்குள் கல்விக்கூடங்களில் நுழையவே வழிவகை செய்திடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் கல்வியை இல்லத்திற்கே கொண்டு செல்வதை நோக்கமாகக்கொண்டதென்றால், அது உழைக்கும் மக்களின் உறைவிடமாக விளங்கும் சேரிப்பகுதிகளுக்கும் செல்லுமா? என்பதற்குப் பதிலில்லை.

ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ்.ஸின் உட்பிரிவான சேவா பாரதியை கொரோனாவுக்கு எதிரான தன்னார்வலர்களின் கூட்டத்துக்காகத் தலைமைச்செயலகத்துக்கு அழைத்து அங்கீகரித்த திமுக அரசு, தற்போது தன்னார்வலர்கள் எனும் பெயரில் ஆர். எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களை உள்நுழைந்திட ஏற்பாடு செய்வது வன்மையானக் கண்டனத்திற்குறியது.  5 ஆம் வகுப்பினருக்குப் பாடம் கற்பிக்க, 12 ஆம் வகுப்புப் படித்தவர்களையும், 6 முதல் 8 ஆம் வகுப்பினருக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களைப் பயன்படுத்தலாம் என இத்திட்டத்தில் கூறப்பட்டிருப்பது பாஜகவின் புதியக்கல்விக்கொள்கையிலுள்ள ஒரு செயல்திட்டமாகும். புதியக் கல்விக்கொள்கையை எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசு, அதன் செயல்திட்டங்களை வெவ்வேறு வடிவங்களில் அனுமதித்து, நடைமுறையில் செயல்படுத்தி வருவது மிகப்பெரும் மோசடித்தனமாகும்.

இக்கற்பித்தல் பணிகளில், இரு அமைச்சகத்தைக் கொண்டு, கல்வித்துறைக்கென தனி நிதிஒதுக்கீடு செய்து, பெரும் கட்டமைப்பில் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை இருக்க தன்னார்வலர்களைப் பயன்படுத்த வேண்டியதன் தேவையென்ன? அதன்மூலம், சாதி,மத அமைப்புகள் உள்நுழைந்து, மாணவர்களின் மனதினில் நஞ்சை விதைக்கக்கூடும் என்பது அரசுக்குத் தெரியாதா? பெரியளவில் கல்வித்தகுதியோ, அனுபவமோ இல்லாத தன்னார்வலர்களைக் கொண்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது எந்தவிதத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும்? மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க அரசின் நிர்வாகக்கட்டமைப்பில் ஆசிரியர் பெருமக்களே இல்லையா? அவர்கள் இருக்கும்போது, தன்னார்வலர்களை நாடுவது யார் வசதிக்காக? அது, ஆர். எஸ். எஸ்., பாஜக போன்ற மதவாத அமைப்புகளின் சூழ்ச்சிக்குத்தானே வழியேற்படுத்தும்?

திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி. வீரமணி அவர்களும், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச்செயலாளர் ஐயா முத்தரசன் அவர்களும் இத்திட்டத்தின் பேராபத்தை உணர்ந்து, எதிர்ப்புத்தெரிவித்தும் அதனைத் துளியும் பொருட்படுத்தாது திமுக அரசு முனைப்போடு செயல்படுத்தி வருவது பாஜகவின் வேர்பரப்பும் படுபாதக முயற்சிக்குத் துணைபோவதேயாகும். இவ்வாறு கல்வியைக் காவிக்கூடமாக்கும் ஆர். எஸ்.எஸ்.ஸின் திட்டத்தைச் செயல்படுத்திவிட்டு, அதனையே ‘திராவிடம்’ எனப் பெருமிதத்தோடு கூறி, புளங்காகிதம் அடைவது  வெட்கக்கேடானது.

திராவிடமென்றால், என்னவென்று கேட்பது கோமாளித்தனமென்கிறார் ஐயா ஸ்டாலின். திராவிடம் குறித்துக் கேள்வியெழுப்புவதும், அதனைப் பகுப்பாய்வு செய்வதும் கோமாளித்தனமா? இல்லை! ‘ஆரியத்திற்கு முற்றிலும் எதிரானது திராவிடம்’ எனக்கூறிவிட்டு, ஆரியத் திட்டத்தைத் திராவிடமென அடையாளப்படுத்தலை செய்வது கோமாளித்தனமா? என்பதை நாட்டு மக்களே முடிவுசெய்து கொள்ளட்டும்! ஆனால், ‘திராவிடம்’ எனும் பெயரால் செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பிக்கொண்டு, தமிழர்கள் ஏமாளிகளாக இனியும் இருக்க மாட்டார்கள் என உறுதியோடு உரைக்கிறேன்!

அரசுப்பள்ளிகளில் உட்கட்டமைப்பையும், அடிப்படை வசதிகளையும் உருவாக்கி, அதனை மேம்படுத்தி, கற்றல் வாய்ப்புகளை பெருக்கி, அருகாமைப்பள்ளிகள் மூலமாகத்தான் மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க முடியுமே ஒழிய,’, ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் மூலமாக அல்ல. ஆகவே, பாஜக அரசின் புதியக் கல்விக்கொள்கையின் கூறுகளுள் ஒன்றான ‘இல்லம்தேடி கல்வி’ திட்டத்தைக் கைவிட்டு, மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Continue Reading

India

குலாப் புயல் – தமிழ் நாட்டில் மழை நிலவரம்

Published

on

By

‘குலாப்’ புயல் இன்று காலை 0830  மணி நிலவரப்படி  கோபால்பூருக்கு கிழக்கு தென் கிழக்கே 180  கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஓடிசா கடலோர பகுதிகளில் கலிங்கபட்டினம் – கோபால்பூருக்கு இடையே இன்று  நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மேற்கு பருவ காற்று காரணமாக  இன்று  தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென்  மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

27.09.2021:  தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென்காசி, கன்னியாகுமரி,  நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

28.09.2021:  நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

29.09.2021, 30.09.2021: வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மரக்காணம் (விழுப்புரம்) 13, நெய்வேலி (கடலூர்) 8, குறிஞ்சிப்பாடி  (கடலூர்)  கடலூர் தலா  7, வாலாஜா  (ராணிப்பேட்டை), புதுச்சேரி  தலா 6, காட்பாடி (வேலூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 6, சிவகங்கை,  தாம்பரம்  (செங்கல்பட்டு), ஆனந்தபுரம்  (விழுப்புரம்) தலா   5,  வடபுடுபட்டு (திருப்பத்தூர்), செந்துறை (அரியலூர்), வெம்பாக்கம்  (திருவண்ணாமலை), தலா  4, பள்ளிப்பட்டு  (திருவள்ளூர்),  உத்திரமேரூர்  (காஞ்சிபுரம்), கடவனுர் (கள்ளக்குறிச்சி), தணிகைமங்கலம் (மதுரை)  தலா  3, மன்னார்குடி (திருவாரூர்) 2, தேவலா (நீலகிரி), சென்னை விமான நிலையம், விளாத்திகுளம் (தூத்துக்குடி), ராமநாதபுரம், சின்னக்கல்லார்  (கோவை) தலா 1,

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக் கடல் பகுதிகள்

26.09.2021 ,27.09.2021: குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் .

அரபிக்கடல் பகுதிகள்:

26.09.2021, 27.09.2021: கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று_ மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தகவல்: புவியரசன் இயக்குனர்,

சென்னை வானிலை ஆய்வு மையம்.

Continue Reading

India

விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்!

Published

on

By

‘தேமுதிக’ தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக, உடல் நலம் குன்றிய நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னை திரும்பினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்தது.

தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக தொண்டர்களுக்கு, ‘தேமுதிக’ தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும், பூரண குணம் அடைந்தவுடன் தொண்டர்களை சந்திப்பாகவும் கூறியிருந்தார்.

அதனையடுத்து, இன்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி  காலை 9.50 மணிக்கு சென்னையில்  இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார்.

இதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 8.15 மணியளவில் விஜயகாந்த் காரில் வந்து இறங்கினார். பின்னர் காரிலிருந்து வீல் சேர் மூலம் அவருடைய உதவியாளர்கள் குமார், சோமு ஆகியோர் விமான நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.

விஜயகாந்த்துடன் அவருடைய மகனும், நடிகருமான சண்முகபாண்டியனும் சென்றுள்ளார்.

முன்னதாக அங்கே திரண்டிருந்த தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நலம் பெற வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

 

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.