Connect with us

Cinema News

கி.ராவும் நானும்- தங்கர் பச்சான் உருக்கமான பதிவு!

Published

on

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டி அருகில் உள்ள ‘இடைசெவல்’ கிராமத்தைச் சேர்ந்தவர்.

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது  உள்ளிட்ட தமிழின் முக்கிய பல இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தனது இறுதி காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார்.

 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 97ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

கி.ராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த இயக்குனர் தங்கர் பச்சான், அவருடனான நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார். அது உங்கள் பார்வைக்கு…

கி.ராஜநாராயணன் 98 ஆண்டு காலங்கள் வாழ்ந்திருக்கிறார். இதில் 60 ஆண்டுகள் தமிழுக்காக மட்டுமே வாழ்ந்திருக்கின்றார். எனது திரைத்துறை அறிமுக ஆண்டிலிருந்து இன்றுவரை 33 ஆண்டுகளும் அவர் குறித்தே அதிகமாகப் பேசியிருக்கிறேன்.

சரியாக 40 ஆண்டுகளுக்கு முன் கி.ரா வின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய “பிஞ்சுகள்” குறுநாவல் இல்லையென்றால் இன்றைக்குள்ள நான் இல்லை. எனது இலக்கிய படைப்புகள் திரைப் படைப்புகளை வடிவமைத்தது அவரின் எழுத்துக்கள்தான். எனது ஆசான்,குடும்பத்தலைவர்,எதையும் ஒளிவில்லாமல் பேசி கலந்துரையாடும் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.

திரைத்துறைக்கு வரும் முன்பே எனது அப்பாவை நான் இழந்துவிட்டதால் அவரை “அப்பா” என்றே அழைத்தேன். எனது திருமண அழைப்பிதழைக்கூட அப்பாவின் கையினாலேயே எழுத வைத்து நகல் எடுத்து உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் வழங்கினேன்.

 கடிதத்தொடர்பிலேயே எங்களின் உறவு வளர்ந்தது. கி.ரா நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் மட்டுமே இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. கடிதங்களை இலக்கியமாக்கியவர் கி ரா. அப்பா எனக்கு எழுதியக்கடிதங்கள் எனது சொத்துக்களை விடவும் மதிப்பு வாய்ந்தவை.

எனது முதல் இலக்கிய நூலான “வெள்ளை மாடு” கையெழுத்துப்படிகள் அவர் படித்தப் பின்பே நூல் வடிவம் பெற்றது. “ஒன்பது ரூபாய் நோட்டு” நாவலின் கையெழுத்துப் படிவங்களைப் படித்துவிட்டு அதற்கு தலைப்பு சூட்டியவரும் அப்பாதான். எந்தக்காரியத்தை தொடங்கினாலும் அவரிடம் கூறி கருத்தை அறிந்தபின்தான் செயல்படுத்துவேன்.

இறுதிக்காலத்தில் அம்மாவும் அப்பாவும் சென்னையிலேயே என்னுடன்தான் இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்காக என் வீட்டின்  கீழ்த்தளத்தில் ஒரு அறையும் அமைத்தேன். சென்னை வாழ்க்கை அவருக்கு விருப்பமில்லை. புதுச்சேரி அந்தப்பெருமையை எடுத்துக்கொண்டது.

மிகச்சிறந்த படைப்புகளுக்கு மிக அரிதாகவே ‘சாகித்ய அகாடெமி’ விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் இனி இவர் எழுத மாட்டார். வயதாகி விட்டது அல்லது இவருக்கு விருது வழங்கப்படாமல் இருந்ததற்காக இப்பொழுது கொடுத்து விடுவோம் என கொடுத்து விடுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

 கி.ராவுக்கும் அப்படித்தான் ‘கோபல்ல கிராமம்’ நாவலுக்குத் தரவேண்டியதை ‘கோபல்லபுரம் மக்கள்’ நாவலுக்குத் தந்தார்கள். இதே துயர சம்பவம்தான்  சா.கந்தசாமி,நாஞ்சில் நாடன் போன்ற பலருக்கும் நிகழ்ந்தது.

கி.ரா வின் எழுத்துக்களை அனுபவிக்காதவர்களைப்பார்த்து நான் பரிதாபப்படுவதுண்டு. இதையெல்லாம் வாசிக்காமல் இந்தப்பிறவியை வீணாக்குகிறார்களே எனத்தோன்றும். ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு இட்லி காபியைப்பற்றி எழுதி இலக்கியம் படைத்தவர்களுக்கிடையில் எழுத்தறிவில்லாத உழைக்கும் எளிய உழவுக்குடி கிராமத்து மக்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே படைப்புக்களாக்கியவர் கி.ரா. அது மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வியலோடு கலந்து உறவாடுகின்ற நாட்டுப்புறக் கதைகளையும்,விடுகதைகளையும் அலைந்து தேடிப்பிடித்து பதிவு செய்து ஆவணமாகவும் இலக்கியப்படைப்புக்களாகவும் மாற்றியவர்.

கி.ரா வின் நாட்டுப்புற சொல்லகராதியை இனி எவராலும் உருவாகிவிட முடியுமா அல்லது அதை அழித்துவிட முடியுமா. அவருடைய எழுத்துக்கள்தான் நகரம் நோக்கி ஓடி வந்த என்னை மீண்டும்  கிராமத்திற்கே இழுத்துக்கொண்டுப் போனது.

நாடக வடிவிலான சொல்லாடல்களையும் உரையாடல்களையும் கொண்டு இலக்கியம் படைத்த வேளையில் மக்களின் இயல்பான சொற்களால் தமிழின் தற்கால இலக்கியத்தை மக்களின் மனதுக்கு மிக நெருக்கமாக்கியவர். கொண்டாடித்தீர்த்த எழுத்தாளர்களெல்லாம் காலப்போக்கில் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களெல்லாம் எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக எழுதியவர்கள். வெறும் நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்ற கி ராஜநாராயணன் “மழைக்காகத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். அப்பொழுதுகூட மழையையே பார்த்துக்கொண்டிருந்து விட்டேன்” எனக்கூறினார். மழையும் மண்ணும் மக்களும் ஆடு மாடுகளும்தான் அவரை எழுத்தாளனாக்கியது.

அசல் வாழ்க்கையையும்,தன் மொழியையும் இழந்து கொண்டிருக்கும் இத்தலைமுறையும், எதிர்காலத்தலைமுறைகளையும் இழுத்துக்கொண்டுபோய் கி. ரா போன்றவர்களின் படைப்புகளிடம் சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆண்டுகொண்டிருக்கும்,இனி எதிர் காலங்களில் ஆளப்போகும் ஆட்சியாளர்களுக்கும் உண்டு.  

குறிப்பு: கி.ராஜநாராயணன் குறித்த ஆவணப்படம்.

இயக்கம்: தங்கர் பச்சான்  

Advertisement

Cinema News

ஹாரர் மற்றும் த்ரில்லர் திரைப்படப் பிரியர்களை மிரட்ட வருகிறது ‘3:33’ .

Published

on

By

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல  நடன இயக்குனர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘3:33’.  முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலம் கதையின் வில்லனாக இருக்கும் கதையில்,  டைமை மையமாக கொண்ட ஹாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதுவரையிலான சினிமா வரலாற்றில் இறந்து போன ஆத்மாக்கள், கொலையுண்ட ஆவிகள் தான் பேயாக வந்து பயமுறுத்தும். இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட டைம் பயமுறுத்துகிறது. அந்த குறிப்பிட்ட நேரம் நாயகனை பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும், அந்த நேரத்தில் மாட்டிக்கொள்ளாமல் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை.

படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டில் நடப்பதாக கதை நடப்பதால் ஒரு  வீட்டின்  செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் ஆவிகளை மர்ம சக்திகளை ஆராயும் ஒரு ஆய்வாளராக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல், காமெடி இல்லாமல் முழுமையான ஹாரர் அனுபவத்தை தரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. என்கிறார், இயக்குனர் நம்பிக்கை சந்துரு.

 

Continue Reading

Cinema News

அதிகாரமில்லாத காவலர்கள், அடியாட்கள் தான்! – இயக்குநர் ஃப்ராங்க்ளின்.

Published

on

By

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும். இதை உறுதி படுத்துவது வெளியாகி இருக்கிறது “ரைட்டர்” திரைப்படத்தின் டீசர்.

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் இப்படத்தை இயக்கி இருப்பவர் ஃபிராங்க்ளின் ஜேக்கப். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இனியா, போஸ் வெங்கட், சுப்ரமணியம் சிவா, ஹரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை “லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ்” மற்றும் “கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ்” ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் கட்டற்ற அதிகார பலத்துடன் விளங்கும் காவல்துறையின் உள்ளே இருக்கிற அதிகார கட்டுமானத்தின் அடுக்குகளையும், அதன் சொல்லப்படாத பக்கங்களையும் விவிரிக்கும் விதமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது.

Continue Reading

Cinema News

“சதுரங்க வேட்டை 2” திரைப்படம் ஜனவரியில் திரைக்கு வருகிறது.

Published

on

By

அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா  நடித்துள்ள படம் ‘சதுரங்க வேட்டை 2 ‘. இந்தப்படத்தினை NV நிர்மல் குமார் இயக்கியிருக்கிறார். இவர் விஜய் ஆண்டனி நடித்த  ‘சலீம்’  படத்தினை இயக்கியவர்.

‘சதுரங்க வேட்டை 2 ‘ படத்தின் வெளியீட்டு உரிமையை ‘ONSKY Technology PVT. LTD’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் வாங்கியுள்ளார். வருகின்ற ஜனவரி மாதம் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது !

இது குறித்து ‘ONSKY Technology PVT. LTD’ நிறுவனர் திரு.முத்து சம்பந்தம் கூறியதாவது…

“அடிப்படையில், நான் ஒரு தீவிரமான சினிமா ரசிகன், கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களையும் தவறவிடாமல் தீவிரமாகப் பார்க்கிறவன். சதுரங்க வேட்டை திரைப்படம் இந்திய திரைத்துறையில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று. இதன் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 வெளிவருவதைப் பற்றி கேள்விப்பட்டபோது, ​​மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது.  குறிப்பாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் காட்சி துணுக்குகளை கண்டபிறகு, என்னுள் மிகப்பெரும் ஆர்வம் குடிகொண்டது.

எதிர்பாராத சூழ்நிலைகளால் படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, நான் பெரிதும்  ஏமாற்றமடைந்தேன். நான் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியபோது, சிறந்த  திரைப்படங்களைத் தயாரிப்பது மட்டும் அல்லாமல், மொழியியல் தடைகள் மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் படங்களை உருவாக்க வேண்டும்  என்று நான் பெரிதும் விரும்பினேன். அப்படியான ஒரு படைப்பு, ரிலீஸாகமல் இருப்பது கண்டு வேதனையுற்றேன்.

இறுதியில் சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட  முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனோபாலா சார், Cinema city கங்காதரன் மற்றும் படம் வெளியாவதைப் பார்க்க  ஆர்வமாக இருந்த பல உன்னத உள்ளங்களுக்கு நன்றி. திரு அரவிந்த் சாமி அவர்களுக்கு அவர் கொடுக்கும் ஒத்துழைப்புக்கு கோடானு கோடி நன்றி. இப்படத்தை வெளியிடும் வாய்ப்பை வழங்கியதற்காக இப்படம் சம்மந்தப்பட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு பிரபலமான பழமொழி உள்ளது – சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில், சரியான விஷயம் நிகழும். சதுரங்க வேட்டை 2 படத்தில் அது நடப்பதைக் கண்டு, நான் மனமார மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது, ​​பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் விமர்சனப் பாராட்டுகளையும் வெல்லும் அனைத்து கூறுகளும இப்படத்தில் இருப்பதை, என்னால் எளிதாக உணர முடிந்தது. இப்போது, ​​படத்தை வெளியிட முயற்சியில்இறுதி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும்  ஜனவரி 2022 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இபடவெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.