Connect with us

India

மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா? – இயக்குநர் தங்கர் பச்சான்

Published

on

மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா? – இயக்குநர் தங்கர் பச்சான்

 விடிய விடிய உறக்கத்தை இழந்து அமைதியற்ற மனநிலையில்தான் இதை எழுத அமர்கிறேன். தேர்தல் முடிந்து  வாக்கு எண்ணிக்கை அறிவிப்பின் போது எதிர்கொள்ளும் பரபரப்பான பதட்டமான மனநிலையில்தான் ஊடகச்செய்திகளைப் பார்க்கிறேன். உலக நாடுகளும்,உலக சுகாதார நிறுவனமும்,மருத்துவத்துறை வல்லுனர்களும் கூட கோவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்துவது குறித்து நமது அரசை பாராட்டி வரவேற்றார்கள். இந்நிலையில்தான் கோயம்பேடு காய் கனி வளாகம் தொற்று பரப்பும் மையமாக மாற்றம் கண்டு அனைவரும் அதிர்ந்து கிடக்கின்றோம்! மதுக்கடைகளை திறக்கிறார்கள் எனும் செய்தி வெளியான போது பதட்டம் மேலும் அதிகமானது. இப்போது நீதிமன்றம் கட்டுப்பாடு நிபந்தனைகளை விதித்து கடைதிறக்கப்பட்டுள்ளது. இந்தக்கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும்  மீறப்படும் போது  மீதமிருப்பவர்களுக்கும் மதுக்கடைகள்  கிருமியை கொண்டு சேர்த்துவிடுமே எனும் கவலை அனைவரையும் சோர்வடையச் செய்திருக்கிறது. 

இதிலிருந்து மீண்டு விடலாம் என 43 நாட்கள் குடிக்காமல் தான் மக்கள் இருந்தார்கள். ஆனால் அரசாங்கத்தால் தான் மதுக்கடை திறக்காமல் இருக்க முடியவில்லை. எல்லையில் கடை திறந்து விட்டார்கள் என காரணம் கூறி பழியை மக்களிடத்தில் போடுகிறது. இன்னும் மூன்று மாதங்கள் மதுக்கடைகளை மூடி வைத்திருந்தால் குடியை மறந்து வருமானம் முற்றிலுமாக நின்றுவிடும் என்று நினைத்து இப்போது திறக்கிறார்களோ எனும் எண்ணம் எழுகிறது!

நான் சிறுவனாக இருந்தபோது அரசாங்கத்திற்குத் தெரியாமல் சாராயம் காய்ச்சி விற்பவர்களை  கைகளைக்கட்டி தலையில் குடத்தை வைத்து வீதி வீதியாக அடித்து இழுத்துக் கொண்டு போவதை பல முறை பார்த்திருக்கிறேன். அதைப்போல் அதை வாங்கி குடிப்பவர்களுக்கும் அடி உதை சிறை தண்டனை எல்லாம் உண்டு. ஆனால் இந்த 40 ஆண்டுகளுக்குள் சாராயம் விற்கின்ற வேலையை அரசாங்கமே செய்வதால் குடிப்பழக்கம் இல்லாதவர்கள்  எல்லாம் குடிக்கத்தொடங்கி அடிமையாகி அலைகிறார்கள். மக்களை காக்க வேண்டியவர்கள் இந்தபேரழிவு காலத்தில்கூட இப்படி செய்யலாமா எனக்கேட்டால் ‘ஆட்சி நடத்த பணம் இல்லை; அதற்காகத்தான் மதுக்கடைகளை திறக்கிறோம்’ எனச் சொல்வது எவ்வளவு பெரிய கேடு விளைவிக்கும் அவமானத்திற்குரிய செயல்?  

மக்களை வாழ வைப்பதற்காகவே தான் அரசியலுக்கு வருகிறேன்! என் வாழ்க்கையை தியாகம் செய்கிறேன்! எனக்கூறிவிட்டு அரசியலுக்குள் நுழைந்து ஊழலை அறிமுகப்படுத்தினார்கள். தான் மட்டும் திருடினால் தானே கேள்விகள் கேட்பார்கள் என்பதற்காக தன் கீழ் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடைநிலை வரை உள்ள கட்சிக்காரர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் ஊழல் செய்ய அனுமதித்தார்கள். இந்த திருடர்கள் பணக்காரர்களாக மாறுவதை கண்ட மக்கள் கேள்வி கேட்க தொடங்கியபோது, அவர்களின் வாயையும் அடைப்பதற்காகவே பணம் கொடுத்து வாக்குரிமையை விலைக்கு வாங்கி தங்களின் திருட்டை நியாயப்படுத்திக் கொண்டார்கள்.

 இந்நிலையில் யார் யாரைப்பார்த்து கேள்வி கேட்க முடியும்? அரசியலுக்குள் நுழையும்போது கடந்த காலங்களில் அவர்கள் எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் எவ்வளவு சொத்து வைத்திருந்தார்கள் என்பதெல்லாம் மக்களுக்கு தெரியாமல் இல்லை. அனைத்து தொழில்களையும் ஒழித்துவிட்டு அரசியல் தொழில் மட்டுமே இன்றைக்கு கொடி கட்டி  சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பது  மக்கள் எல்லோருமே தெரிந்ததுதான். வாழ்வாதாரத்தை இழந்து வருமானத்தை இழந்து மூன்று வேளை உணவை இரண்டு வேளையாக சுருக்கி, இருப்பதைக்கொண்டு ஊரடங்கில் உயிர் வாழும் மக்களிடமே நன்கொடை கேட்கும் அரசாங்கத்தை உலகத்தில் எங்கேயாவது கண்டிருக்க முடியுமா? 

உயிர் பற்றிய கவலையை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஐந்து கிலோ அரிசிக்காக அதிகாலையே வந்து வரிசையில் இடம்பிடித்துக் காத்திருக்கிற மக்களைப் பார்த்தபிறகும் கூட எவ்வாறு ஈவு இரக்கமில்லாமல் இவ்வாறு செயல்பட முடிகிறது. ஒரே இரவில் பணமதிப்பிழப்பு சட்டத்தை உருவாக்கி மக்களின் சேமிப்பையெல்லாம் எடுத்துக்கொண்டவர்களுக்கு தேவைக்கு அதிகமான பணமும், மக்களிடமிருந்து ஊழல் செய்து திருடி கொள்ளையடித்த பணமும் எங்கெங்கே இருக்கிறது எனத்தெரியாதா? அவற்றையெல்லாம் அதே மாதிரி ஒரு சட்டம் இயற்றி பிடுங்கினால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு மக்களிடமிருந்து வரி வாங்காமலேயே சிறப்பான ஆட்சி நடத்தலாமே! மக்கள் பணம் 68 ஆயிரம் கோடியை பணக்கார முதலாளிகளுக்கு கடனாக கொடுத்துவிட்டு அந்த கடனை ஒரே அறிவிப்பில் தள்ளுபடி செய்து அதற்கு காரணமும் கூறுபவர்களை எந்த அரசியல்வாதிகளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லையே!  கல்வி செலவுக்காக சிறுமி சேர்த்து வைத்திருந்த உண்டியலை உடைத்து நன்கொடை கொடுத்ததை  தலைப்புச் செய்தியாக்கி நாட்டுப்பற்றை விதைக்க முனைகின்றவர்களின் செயல்கள் எவ்வளவு அவமானத்திற்குரியவை?

வருவாய் குறைந்து விட்டதற்காக முதலில் ஆந்திர அரசு தனது ஊழியர்களுக்கு இனி பாதி தொகை மட்டுமே மாத ஊதியம் என அறிவித்தது. அதை பின்பற்றி ராஜஸ்தான், ஒடிசா போன்ற மாநிலங்களும் அறிவித்தன. ஏற்கனவே ஜிஎஸ்டி பணம் மாநிலங்களுக்கு இல்லாமல்  மத்திய அரசுக்கு சென்று விட்டது. அத்துடன் மத்திய அரசு  அறிவித்த குறைந்த அளவிலான  கோவிட் 19 உதவித்தொகையும் கூட முறையாக இன்னும் வந்து சேரவில்லை என்பதால் தமிழக அரசு பணப்பற்றாக்குறையால் திண்டாடுகிறது என்பதையும் தமிழக  மக்கள் நன்கு அறிவார்கள். வேறு வழியில்லாத  இந்த இக்கட்டான நிலையில் பிற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் ஊழியர்களுக்கான மாத ஊதியத் தொகையை ஏன் பாதியாக அறிவிக்க தயங்குகிறது எனபது புரியவில்லை.

தேவைக்கு அதிகமான ஊழியர்கள் பலதுறைகளில் பணியில் இருக்கிறார்கள். சுழற்சி முறையில் இரவு பகலாக பல துறைகள் இயங்குகின்றன. இரு பிரிவினருக்குமே ஒரே மாதிரியான ஊதியம் என்பதெல்லாம் சரியானது தானா? மொத்த வரிப்பணத்தில் முக்கால் பகுதி அரசு ஊழியர்களுக்கே ஊதியமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் நிலைமை சீராகும் வரைக்குமாவது ஊதியத் தொகையை வரைமுறை படுத்தினால் எவ்வளவோ தொகையை மிச்சப்படுத்தி அந்தப்பணத்தில் மக்களுக்கு இந்நேரத்தில் உதவலாமே!

இதைச் செய்யாமல் வருமானம் இல்லாததால் தான் மதுக்கடைகளை திறக்கிறோம் எனக் கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? அரசு மருத்துவமனைகள் மட்டுமே கொரோனா நோயாளிகளை கையாளும் நிலையில் மேலும் 750 திருமணக்கூடங்கள்  மருத்துவமனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் வரிப்பணத்தில் மாத ஊதியம் பெறும் கடைநிலை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் முதற்கொண்டு முதலமைச்சர்கள், நீதிபதிகள், ஆளுநர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் வரை அவர்களின் குடும்பங்கள் உட்பட எவருமே அரசு மருத்துவமனைகளை திரும்பிக்கூட பார்ப்பதில்லை! ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே தான் அவைகள் என்பதால் பெயரளவிற்கு  இயங்கி வருகின்றன. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைய காத்திருக்கும் கொரோனா கிருமி இனி ஒருவரையும் விட்டு வைக்கப் போவதில்லை. எத்தனையோ குடும்பங்களில் புதிதாக பிறந்த குழந்தைகள் சிறுவர்கள் முதியோர்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இனி மேல் அவர்களெல்லாம் நோய்த் தொற்றுக்கு ஆளாவார்கள். ஏற்கனவே நம்மிடம் முறையான மருந்தும் இல்லை, மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், ஊழியர்களுக்குமே பற்றாக்குறை. இவர்களை  எல்லாம் இனி எங்கே கொண்டு போய் படுக்க வைக்கப் போகிறார்கள்? 

அலங்கரிக்கப்பட்ட சாராயக்கடை

 கடந்த நாட்களில் மதுக்கடைகளை மூடச் சொல்லி முதலில் அரசியல் கட்சிகள் போராடின. பின் அமைப்புகளும்,  இயக்கங்களும் போராடின. இறுதியாக வேறு வழியின்றி மக்களே வீதியில் இறங்கினார்கள். குடும்பம் நடத்த பணம் இன்றி, குடிநோயாளிகளாகி  துன்புறுத்தும் கணவன் மற்றும் பிள்ளைகளால் பெண்களே களத்தில் இறங்கி போராடினார்கள். இனி அவர்களின் நிலை என்னவாக போகிறது? சமையல் எரிவாயு வாங்குவதற்கே அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் சரியாகிப் போனது. அரசு தந்த விலையில்லா பண்டங்கள் இந்த குடும்பங்களுக்கு எந்த மூலைக்கு எத்தனை நாட்களுக்கு உதவப்போகிறது?

வேலையிழந்து  பணம் இல்லாத இந்த நடுத்தர ஏழை எளிய மக்களிடமிருந்து சுரண்டி வசம் கண்ட 30,000 கோடி தானே இப்பேர்ப்பட்ட கொலைக்கு சமமான  செயலைச் செய்ய வைக்கிறது? ஏற்கனவே பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் காவல்துறை கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, விபத்துக்கள் போன்றவற்றையெல்லாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை?

பசியுடன் நாட்களை கடத்த போகும் இந்த தாய்மார்களை பிள்ளைகளை முதியோர்களை குடிநோயாளிகள் பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவார்கள். குடித்துவிட்டு கொரோனாவை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு அதன்பிறகும் துன்புறுத்துவார்கள். பண்ட பாத்திரங்கள் அடகு கடைக்கு போகும், கதறும் பெண்களின் தாலிகள் மஞ்சள் கயிறாக மாறும்! 

மருத்துவத்திற்கும், வாழ்க்கை நடத்தவும் மக்களை அலையவிட்டு எத்தனை பிணங்கள் ஒரு நாளைக்கு விழுகிறது. எவ்வளவு பேருக்கு நோய் பரவி இருக்கிறது என்ற செய்தியைத்தான் நாள்தோறும் ஊடகங்கள் கொடுத்துக் கொண்டிருக்க போகின்றன?  

எது நடந்தாலும் எதைச் செய்தாலும் மக்கள் மறந்து விடுவார்கள்! அதனால் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என அரசியல்வாதிகள் கணக்கு போடலாம். அதற்கும் மக்கள் உயிரோடு இருந்தால்தான் முடியும்.  ஒரு வேளை அவர்களின் கணக்கு இப்படியும் இருக்கலாம்! பதிவாகின்ற வாக்குகளின் எண்ணிக்கையின்  வித்தியாசத்தில் தானே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்பதால் மக்கள் தேர்தலில் வாக்களிக்கத் தேவையில்லாமல் போனாலும் பரவாயில்லை.  வேட்பாளர்களின் குடும்பம் மட்டுமே வாக்களித்து  மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா? நிதி நெருக்கடியிலுள்ள தமிழகத்தை தனிப்பகை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து  தயவு செய்து மதுக்கடைகள் இயங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்! மக்களைக் காப்பாற்றுங்கள்!

இயக்குநர் தங்கர் பச்சான்

 07/05/2020

Advertisement

India

‘மாநாடு பேசும் அரசியல் சுவைமிக்கக் கலைப்படைப்பு’  – சீமான்!

Published

on

By

‘வி ஹவுஸ் புரடக்‌ஷன்’ சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம்,’மாநாடு’. . இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி, எஸ்.ஏ.சி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மஹேந்திரன், பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப்படம் வெளியாகி அனைத்து தரப்பினரிடையே வரவேற்பினை பெற்ற நிலையில், நிலையான வசூலையும் வாரிகுவித்து வருகிறது.

‘மாநாடு’ படம் குறித்த தனது கருத்தினை ‘நாம் தமிழர் கட்சி’யின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது…

அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது. மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்கக் கலைப்படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட்பிரபு.

இசுலாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிறபோக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறானப் பிம்பத்தை தகர்த்தெரியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும். சொல்ல வந்த செய்தியை மிகச்சரியாகக் காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட்பிரபுவின் கலைத்திறன் இத்திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெருகேறியிருக்கிறது.

எனது தம்பி சிலம்பரசன் அவர்கள் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம்கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல்மொழியாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொரு முறை முத்திரைப்  பதித்திருக்கிறார். கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறைகொள்கிறேன்! அவரது உயரத்தை எண்ணி மன மகிழ்வடைகிறேன்!

அன்புச் சகோதரன் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழி நடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத்திறனாலும் படத்தினையே தாங்கி நிற்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன்! தம்பி யுவன் சங்கர்ராஜாவின் பலமிக்க பின்னணி இசையும், தம்பி கே.எல்.பிரவீண் நேர்த்தியான படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணைநிற்கின்றன. இத்திரைப்படத்தில் நடித்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், ஐயா ஒ.ஜி.மகேந்திரன், தம்பி மனோஜ் பாரதிராஜா, தம்பி சுப்பு அருணாச்சலம், தம்பி பிரேம்ஜி அமரன், தம்பி கருணாகரன், தங்கை கல்யாணி பிரியதர்ஷன் என யாவரும் தங்களது பங்களிப்பினைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச்சிறந்தப் படைப்பாகவும், மாறுபட்ட திரைக்கதை அமைப்புகொண்ட நல்லதொரு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கும் இதனைத் தயாரித்து, பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்டபோதும் சற்றும் தளராது நின்று வென்றுகாட்டி, வெற்றிப்படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் எனது பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் காமாட்சி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வேண்டுமென எனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவிக்கிறேன்!

எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம்பூரிப்பு அடைகிறேன்!

நானே வெற்றிபெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்! இப்படைப்புக்காக உழைத்திட்ட அத்தனை பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

என்று ‘நாம் தமிழர் கட்சி’யின் ஒருங்கிணைப்பாளர், சீமான் கூறியிருக்கிறார்.

Continue Reading

India

‘ஜெய் பீம்’ சர்ச்சை! பா.ம.க, அன்புமணிக்கு சூர்யாவின் பதில்!

Published

on

By

‘2டி என்டர்டெயின்மென்ட்’சார்பில் சூர்யா தயாரித்து, நடித்துள்ள படம் ‘ஜெய் பீம்’. பத்திரிக்கையாளர் த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார். ‘அமேசான் ப்ரைமில்’ வெளியாகியுள்ள இந்தப்படம், மக்களிடம் பலத்த வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்நிலையில் ‘ஜெய் பீம்’ படத்தில் சில காட்சிகள் தவறாக, உள்நோக்கத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, பா.ம.கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு கடிதம் வாயிலாக சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அக்கடிதத்திற்கு சூர்யா பதிலளித்து வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது…

‘மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.

நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது’ என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில்  சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச  முயற்சித்திருக்கிறோம்.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி  சரி செய்யப்பட்டதைத்  தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன்.

‘படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை’என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல,  ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை,  குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார்.  எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக  கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘பெயர் அரசியலால்’ மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி.

அன்புடன், சூர்யா. இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பா.ம.கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு விடுத்த கடிதத்தின் முழு விபரம்.

படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது: மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்!

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்: நடிகர் சூர்யாவுக்கு கடிதம்

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை; ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக 9 வினாக்களை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், அந்த வினாக்கள் அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடிதத்தின் விவரம்:

அன்புள்ள நடிகர் சூர்யா அவர்களுக்கு

வணக்கம்!

தமிழ்த்திரையுலகில் இளம் நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது நடிகர், தயாரிப்பாளர் என பன்முக அவதாரம் எடுத்திருப்பதற்கு வாழ்த்துகள். அனைவரும் நேசிக்கும் கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் சிவக்குமார் அவர்களின் பெயருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தாங்களும், சகோதரர் கார்த்தியும் தமிழ்த் திரையுலகில் முன்னேறி வருகிறீர்கள்.

தங்களின் தயாரிப்பில், தங்களைக் கதாநாயகனாகக் கொண்டு இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள ‘ஜெய்பீம்’ என்ற தலைப்பிலான திரைப்படம் தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் மத்தியில் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எந்த அளவுக்கு திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆயிரக்கணக்கான மக்களும், இளைஞர்களும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே உணர்வும், மன நிலையும் மேலோங்கியுள்ள நிலையில், தங்களிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் தான் தங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுத வேண்டியிருக்கிறது.

அடக்குமுறை யார் மீது கட்டவிழ்க்கப்பட்டாலும், அவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் கொடூர மனநிலையும், மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் போக்கும் கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது, உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும் தான் தமிழ்நாட்டில் வாழும் மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை.

திரைப்படம் என்பது அழகையும், கலையையும் அவற்றுடன் கலந்து சமூகத்திற்குத் தேவையான நல்லக் கருத்துகளையும் வெளியிட வேண்டிய சிறந்த ஊடகம் ஆகும். ஆனால், ஜெய்பீம் திரைப்படத்தில் அத்தகைய சிறப்பு மிக்க ஊடகம் வன்மத்தை வெளிப்படுத்தவும், அமைதியை சிதைத்து சமூக மோதலை ஏற்படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய திரைப்படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது; மனசாட்சியுள்ளவர்களால் ஏற்க முடியாதது.

‘ஜெய்பீம்’ திரைப்படம் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு பல ஐயங்கள் உள்ளன. அவர்களின் நியாயமான ஐயங்களைப் போக்க அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் கீழ்க்கண்ட வினாக்களுக்கு நீங்கள் விடையளிக்க வேண்டும். அந்த வினாக்கள்:

  1. ‘ஜெய்பீம்’ உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தானா?
  2. உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்றால், உண்மை நிகழ்வு நடந்த இடம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த முதனை கிராமமா? அல்லது விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கோணமலை கிராமமா?
  3. உண்மை நிகழ்வில் முதனை கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த இராஜாக்கண்ணு என்ற இளைஞரை கம்மாபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கொடூரமாக அடித்து படுகொலை செய்த காவல்துறை சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது தங்களுக்குத் தெரியுமா? இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் ஜெய்பீம் திரைப்படத்தை உருவாக்கியிருக்க முடியாது.
  4. இராஜாக்கண்ணுவை படுகொலை செய்த காவல் அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி என்பதை அறிந்திருந்தும் கூட, கொலையான பழங்குடி இளைஞருக்கு இராஜாக்கண்ணு, அவருக்காக போராடும் வழக்கறிஞருக்கு சந்துரு, விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜிக்கு பெருமாள் சாமி என்று உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டிய தாங்களும், இயக்குனரும், சார்பு ஆய்வாளர் பாத்திரத்திற்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன்? நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?
  5. காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட இராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில் தமது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஊராட்சித் தலைவரும், ஊர் மக்களும் தான் தமக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். அவ்வாறு இருக்கும் போது திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சித் தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்?
  6. கொடூர காவல் அதிகாரியாக நடித்திருப்பவர் வீட்டில் தொலைபேசும் காட்சியில் வன்னியர்களின் புனிதச் சின்னமான அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி வைக்கப்பட்டிருந்தது ஏன்?
  7. படைப்பாளிகளில் இருவகை உண்டு. ஒரு தரப்பினர் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இரண்டாவது தரப்பினர் திரைப்படத்தில் ஏதேனும் சர்ச்சையை (Controversy) எழுப்பி, அதைப் பேசு பொருளாக்கி, அந்த விளம்பரத்தில் திரைப்படத்தை ஓட வைக்க முயல்பவர்கள். இவற்றில் எந்த வகையில் உங்களைச் சேர்ப்பது?
  8. ஜெய்பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி…. அம்பேத்கரியத்துக்கு வெற்றி என்று பொருள். அம்பேத்கர் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்று கற்பிக்கவில்லை. ஆனால், ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து நடித்துள்ள நீங்களும், உங்கள் குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதை விட, வன்னியர்களை இழிவுபடுத்துவதில் தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். இது தான் ஜெய்பீம் என்பதற்கு நீங்கள் அறிந்து கொண்ட பொருளா?
  9. இராஜாக்கண்ணுவின் படுகொலை குறித்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தங்களுக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால், இராஜாக்கண்ணுவின் படுகொலைக்காக மற்ற கட்சிகளை இணைத்து முதலில் போராட்டம் நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 42 ஆண்டுகளாக சாதி, மதம் பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி, உரிமைகளை வென்றெடுத்துத் தந்திருக்கிறார். அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியாதா?

கலைகள் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். கலைகளின் சிறந்த வடிவங்களில் ஒன்றான திரைப்படம் மக்களின் மனங்களை பண்படுத்த வேண்டும்…. மாறாக, வன்மத்தை விதைக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக திரைப்படங்கள் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தக் கூடாது. நீங்கள் விரும்பினால் பெருமைமிக்க உங்களின் கவுண்டர் சமுதாயத்தை போற்றும் வகையில் திரைப்படம் தயாரித்து வெளியிட்டுக் கொள்ளலாம். மாறாக இன்னொரு சமுதாயத்தை, படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை. இதை உங்களுக்கு மட்டுமல்ல…. இன்னொரு சமுதாயத்தை இழிவுபடுத்தி தங்களின் சாதிவெறிக்கு தீனி போட நினைக்கும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அண்மைக்காலமாகவே தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயத்தை கொச்சைப் படுத்தும் வகையில் திரைப்படங்களை உருவாக்குவது வாடிக்கையாகி விட்டது. இது படைப்பு சுதந்திரம் அல்ல…. வெறுப்பு மனப்பான்மை. படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடாத முதல் குணம் இது தான்.

தமிழ்த்திரையுலகில் தனி மனிதர்களைத் தாக்கியும், சமூகங்களை இழிவுபடுத்தியும் பல நேரங்களில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன் அல்லது அவர்களின் தவறு சுட்டிக்காட்டப்பட்டவுடன் அவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டிருக்கின்றனர். இது தான் அடிப்படை மனித குணம். மனிதர்கள் தங்களின் தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயங்க மாட்டார்கள்.

ஆனால், ஜெய்பீம் திரைப்படம் உங்களை புனிதராகக் காட்டும் நோக்குடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தை உருவாக்கியவர்களுக்கு எதிராக பொதுமக்களும், இளைஞர்களும் கொந்தளித்த பிறகும், படக்குழுவினரின் தவறுகளை நடுநிலையாளர்கள் சுட்டிக்காட்டிய பிறகும் கூட, தங்களின் தவறுகளை ஒப்புக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது. ஜெய்பீம் திரைப்படத்தின் வில்லன்கள் செய்த பாவத்தை விட, அந்தப் படக்குழுவினர் செய்துள்ள பாவம் மிகவும் கொடியது. இவை அனைத்தையும் தெரிந்து கொண்டு ஒரு வாரமாக நீங்கள் கடைபிடித்து வரும் அமைதி ஆபத்தானது.

படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்க்கை அளிக்கும் ரசிகர்கள் தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும். இவை எதுவுமே தேவையில்லை.

கலைக்கும், உங்களின் படைப்புக்கும் நீங்கள் நேர்மையானவராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால், உங்களை நோக்கி மேலே எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கு நீங்கள் விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன். அது தான் மக்களின் கோபத்தை தணிக்கும். மிக்க நன்றி!

தங்கள் ,

(மருத்துவர் அன்புமணி இராமதாஸ்)

Continue Reading

Cinema News

கன்னட ‘சூப்பர் ஸ்டார்’ புனித் ராஜ்குமார் காலமானார்!

Published

on

By

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர், புனித் ராஜ்குமார்.  இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன். தினந்தோறும் உடற்பயிற்சி செய்யும் பழக்கமுடையவர். இன்று காலை வழக்கம் போல் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

இன்று காலை 11 மணியளவில் உடற் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்த நிலையில், பெங்களூரூவில் உள்ள ‘விக்ரம்’ தனியார் மருத்துவமனையில்  உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், புனித் ராஜ்குமாருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில், புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி காலமானார்.

முன்னதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மருத்துவமனைக்கு நேரில் சென்று புனித் ராஜ்குமாரின் உடல்நிலை குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

மறைந்த புனித் ராஜ்குமாருக்கு வயது 46. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,பின்னர் கதாநாயகனாக உயர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்.

புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பல தரப்புகளிலிருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.