காமெடி நடிகராக தமிழ் சினிமாவில், கொடிகட்டி பறந்து வரும் நடிகர் யோகிபாபுவின் வித்தியாசமான நடிப்பில் வெளிவரவுள்ள ஆந்தாலஜி படம் “நவரசா” . Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக Netflix தளத்தில் வெளியாகிறது.
படம் குறித்து யோகிபாபு கூறியதாவது…
‘சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாப்பாத்திரங்கள் மிக வலிமையானது. அத்தனை எளிதில் அனைவரும் செய்துவிட முடியாதது. ஆனாலும் பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் அனைத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் குணச்சித்திர பாத்திரங்களில், நடிப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன்.
நகைச்சுவையில் சாதனை படைத்த , தமிழ்சினிமாவின் மூத்த ஆளுமைகளான நடிகர் நாகேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் காமெடியில் மட்டுமல்லாமல், பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து, நம் மனைதை கவர்ந்துள்ளனர்.
“ஒண்ணா இருக்க கத்துக்கணும்” படத்தில் கவுண்டமணி அவர்களும், “நீர்க்குமிழி” படத்தில் நாகேஷ் அவர்களும் நகைச்சுவைக்கு எதிரான குணச்சித்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார்கள். அப்படங்களும் மிகப்பெரும் வெற்றியை பெற்றன.
அதே போல் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன். “நவரசா” ஆந்தாலஜி திரைப்படமே, மனிதனின் உணர்வுகளை மையப்படுத்தி ஒன்பது கதைகளை சொல்லும் திரைப்படம். அப்படியான ஒரு படத்தில் ஒரு கனமான பாத்திரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி, நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.
மேலும் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.