‘லீடர்’ –  விமர்சனம்!

லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா ஜெர்மையா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட், லால், பாகுபலி பிரபாகரன், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், இயல், ஐஸ்வர்யா பாஸ்கரன் , ஜார்ஜ் மரியான், அறந்தாங்கி நிஷா, படவா கோபி, ஆதித்யா கதிர், ஜெயஸ்மித்ரா, ஷர்மிதா சாம், யோகிராம், ஓஏகே சுந்தர், மகாநதி சங்கர் , வேல் அருணாச்சலம், நிரஞ்சன் மோசஸ் , ஷோபன் பாபு , அசோக் பாண்டியன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், லீடர். ஆர். எஸ். துரை செந்தில் குமார் எழுதி இயக்கியுள்ளார். வெங்கடேஷ். எஸ் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

அரசியல், அதிகார பலமிக்க பாகுபலி பிரபாகரன்,  தூத்துக்குடி ஹார்பரை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு சட்டவிரோதமான செயல்களை செய்து வருகிறார். இதை கவனித்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா, ஆதரங்களுடன் கைது செய்ய முயற்சித்து வருகிறார். பாகுபலி பிரபாகரன் கட்டுப்பாட்டிற்குள் அந்தப்பகுதிக்குள் எளிதில் யாரும் செல்லமுடியாத அளவில் பலத்த பாதுகாப்பில் இருந்து வருகிறது. பாகுபலி பிரபாகரனின் கார்களை சர்வீஸ் செய்து கொடுக்கும் லெஜண்ட் சரவணன், எளிதில் சென்று வருகிறார். இதை அறிந்து கொள்ளும் ஆண்ட்ரியா, லெஜண்ட் சரவணனின் மூலம் ஹார்பரில் இருக்கும் சட்டவிரோதமான வெடிப்பொருட்களை கைப்பற்றுகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு டிஎஸ்பி சாம், லெஜண்ட் சரவணனின் நடவடிக்கைகளை கவனிக்கும் போது அவர் மறைமுகமாக ஏதோ செய்து வருவது தெரிகிறது. தொடர்ந்து அவரை கவனிக்கும் போது லெஜண்ட் சரவணனின் இன்னொரு முகத்தை கண்டு அதிர்ச்சியாகிறார், அது என்ன? என்பது தான், ‘லீடர்’ திரைப்படத்தின் விறுவிறுப்பான, அதிரடி ஆக்‌ஷன் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

முதல் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் காட்சி வரை, ஒவ்வொரு காட்சியும் சஸ்பென்ஸாக, யூகிக்க முடியாதபடி செல்கிறது. அதேபோல் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் நன்றாக இருக்கிறது. இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில் குமாரின் புத்திசாலித்தனமான திரைக்கதை, ரசிகர்களை படத்துடன் ஒன்றினைய வைத்துவிடுகிறது. முதல் பாதி அப்பா – மகள் சென்டிமென்ட், அதன் பிறகு அதிரடி ஆக்‌ஷன் என செல்கிறது. லெஜண்ட் சரவணன், லால், சந்தோஷ் பிரதாப் ஆகிய கதாபாத்திரங்களுக்கு இன்னொரு முகம் இருப்பது தெரிய வரும்போது படம் பார்ப்பவர்களுக்கு கூடுதல் சுவாரசியம் ஏற்படுகிறது. இயக்குநர் வெகு சிரத்தை எடுத்து இந்தப்படத்தை உருவாக்கியிருப்பது நன்கு தெரிகிறது. ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற  உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தால், மிகப்பெரிய வெற்றி நிச்சயம்!

நாயகனாக நடித்திருக்கும் லெஜண்ட் சரவணனின் நடிப்பில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அப்பாவி சக்திவேலாகவும், அதிரடி காட்டும் பொன்மாறனாகவும் அதகளம் செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, ட்ரெயினில் நடைபெறும் சண்டைக்காட்சியில் ஆச்சர்யப்படுத்துகிறார். மனைவி, குழந்தை சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகளில், பெண்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராஜ்புத், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆண்ட்ரியா ஜெர்மையா, போலீஸ் டிஎஸ்பி யாகநடித்திருக்கும் ஷாம், லால், முதன்மை வில்லனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், பாகுபலி பிரபாகரன்,  விடிவி கணேஷ், அமிர்தா ஐயர், சிறுமி இயல் என அனைவரது கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கு பலமாக இருக்கிறது. சில கதாபாத்திரத்திற்குள் ஒளிந்திருக்கும் மர்மம், கூடுதல் சுவாரசியத்தைக் கொடுக்கிறது.

ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.எஸ், படத்திற்கு மிகப்பெரிய பலம். ட்ரெயினில் நடைபெறும் சண்டைக்காட்சி உலகத்தரத்தில் அமைந்திருக்கிறது. குழந்தையின் கையில் மாட்டப்பட்டிருக்கும் வெடிகுண்டை, வில்லனுக்கு மாட்டிவிடும் காட்சியில், ஒளிப்பதிவும், எடிட்டர் பிரதீப் ஈ.ராகவின் எடிட்டிங்கும் சூப்பர்.

ஜிப்ரானின் பின்னணி இசையும், பாடல்களும் தரமாக இருக்கிறது. பாடல்கள் திரும்ப கேட்கும் வகையில் அமைந்திருக்கிறது. இரைச்சலில்லா இசை, காதுகளுகு இதம்.

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில் குமார், ஒரு  ஆக்‌ஷன் ஹீரோவை திரையில் எப்படி காட்ட வேண்டுமோ அப்படி காட்டியிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை, ரசிக்கும்படியான டிவிஸ்ட்டுகள் படத்தை போரடிக்காமல் இருக்கச்செய்கிறது. அனைவரும் பார்க்கும்படியான ஒரு ஆக்‌ஷன் படத்தில், காதல், அப்பா மகள் பாசத்தை சரியாக பொருத்தி அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருப்பது படத்தின் வெற்றியை உறுதி செய்கிறது.

‘லீடர்’  –  வெற்றியாளர்!