லியோ – விமர்சனம்!

விக்ரம் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ள படம், லியோ. இப்படம், ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியிருந்தது. அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திருக்கிறதா? பார்க்கலாம்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில் காஃபி ஷாப் நடத்தி வருகிறார், விஜய். மனைவி த்ரிஷா, மகன், மகள் ஆகியோருடன் அவரது வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாள், மிஷ்கின் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் கும்பல், விஜய்யின் காஃபி ஷாப்பில் புகுந்து அட்டகாசம் செய்கிறது. அப்போது நடக்கும் பயங்கரமான சண்டையில், விஜய் எல்லோரையும் கொன்று குவிக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு கேங்ஸ்டர் சஞ்சய் தத், விஜய்யை தன்னுடைய மகன் என்று கூறுவதோடு, அவரை கொல்லவும் துடிக்கிறார். ஏன்? எதற்கு? என்பதே ‘லியோ’ படத்தின் கதை.

அர்ஜுன், ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, டான்ஸ் மாஸ்டர் தினேஷ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள் நடித்திருந்தாலும், இது முழுக்க முழுக்க விஜய் படமாகவே இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளை விட சென்டிமென்ட் காட்சிகளில் விஜய் நடிப்பினில் மிளிர்கிறார். வித்தியாசமான விஜய்யை படம் முழுவதும் காண்பதே அவரது ரசிகர்களுக்கு ஆனந்தம் தான்.

த்ரிஷா, அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ற படி நடித்திருக்கிறார். அதிலும் சென்டிமென்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். விஜய் த்ரிஷா ‘லிப்லாக்’ சீனில் தியேட்டரில் விசில் பறக்கிறது. த்ரிஷா அதே இளமையுடன் இருப்பதால் ரசிகர்களை அவர் வெகுவாக கவர்ந்து விடுகிறார்.

டான்ஸ் மாஸ்டர் சாண்டி டெரர் வில்லனாக வருகிறார். தன்னுடைய நடிப்பின் மூலம் தனது இருப்பினை உறுதி படுத்தி விடுகிறார்.

பிரதான வில்லன்களான சஞ்சய் தத், அர்ஜூன் இருவருக்கும் இன்னும் மிரட்டும் காட்சிகளை வைத்திருக்கலாம். ஏனோ தானோ என அமைந்து விட்டது.

படத்தின் முதல் பாதி தொய்வில்லாமல், செல்கிறது. இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தொய்வினை சரிப் படுத்தியிருக்கலாம். ‘லியோ’ வின் கதாபாத்திரம் இன்னும் வலுவானதாக சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

லியோ படத்தினை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக கொடுக்க முயற்சித்த இயக்குனர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உணர்வு பூர்வமான சென்டிமென்ட் காட்சிகளை அமைத்து, பெண் ரசிகர்களின் எதிர்பார்ப்பினையும் பூர்த்தி செய்திருக்கிறார்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. விஜய், கழுதைப் புலியை வேட்டையாடும் காட்சியில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிகச் சிறப்பாக இருக்கிறது.

அனிருத் இசையில், பாடல்களை விட பின்னணி இசை, ஒரு படி மேல் இருக்கிறது. எடிட்டர் பிலோமின் ராஜ் காட்சிகளில் இன்னும் கவனமாக இருந்திருந்தால், தேவையற்ற காட்சிகளை நீக்கியிருக்கலாம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் ரசிகர்களுக்கு என்ன தேவையோ, அதை உணர்ந்து, விஜய் ரசிகர்களை மட்டும், திருப்தி படுத்தியிருக்கிறார்.

லியோ – விஜய் ரசிகர்களுக்கானது!