இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி திருமதி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான ‘டோனி என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல். ஜி. எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட வேகமாக நடைபெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸின் வணிகப் பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா பேசுகையில்,
‘எல். ஜி. எம்’ திரைப்படத்தின் பணிகள் நடைபெற்று வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழில் தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் இது. மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்குவோம் என நம்புகிறோம். அனைத்து தரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள இந்திய பார்வையாளர்களையும் சென்றடைவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். இதற்கேற்ப ‘எல் ஜி எம்’ படம் அமைந்துள்ளது.” என்றார்.
தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸின் படைப்புத்திறன் பிரிவின் தலைவர் பிரியன்ஷூ சோப்ரா பேசுகையில்,
‘எல்.ஜி.எம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகம் மற்றும் படம் தயாராகும் பாணி ஆகிய இரண்டிலும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். திருமதி சாக்ஷி தோனியின் கருத்தாக்கத்தை ரமேஷ் தமிழ்மணி நேரடியான பொழுதுபோக்கு அம்சமுள்ள திரைக்கதையாக மாற்றினார். இந்த திரைக்கதை கவர்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு படைப்பாக மாற்றம் பெறுவதை உடனிருந்து காண்கிறேன். இதனால் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இந்த திரைப்படம் திட்டமிட்டபடி.., சரியான நேரத்தில் சிறப்பாக நிறைவடையும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.” என்றார்