கவின், அம்ரிதா, கிரண் கொண்டா, காயத்ரி ரெட்டி மற்றும் பாலாஜி வேணுகோபால் ஆகியோர் நடித்துள்ள படம், ‘லிஃப்ட்’. ஹெப்சி தயாரித்துள்ள இந்தப்படத்தை, அறிமுக இயக்குனர் வினீத் வரப்பிரசாத், கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் ‘ஒடிடி’ யில் வெளியாகியுள்ள ‘லிஃப்ட்’ எப்படியிருக்கிறது?
ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் கவின் டீம் லீடராகவும், அம்ரிதா ஹெச்சாராகவும் சேருகின்றனர். இவர்களுடைய மேனேஜர் பாலாஜி வேணுகோபால், கவினுக்கு ஒரு முக்கியமான வேலையை கொடுத்து எவ்வளவு நேரமானாலும் முடித்துவிட்டுச் செல்லுமாறு கூறுகிறார்.
கவின் மும்மரமாக வேலை செய்து கொண்டிருக்கும்போது, சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. இன்னொரு பூட்டிய அறைக்குள் அம்ரிதா மாட்டிக்கொள்கிறார். இவர்கள் இருவரையும் பலி கொள்ள ஒரு அமானுஷ்ய சக்தி துரத்துகிறது. ஏன்? எதற்கு? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் விவரித்திருக்கிறார்கள்.
சில சில லாஜிக் மிஸ்டேக்குகளுடன், படம் தொடங்கியது முதல் இறுதிவரை திகிலோ திகில்.
யுவாவின் ஒளிப்பதிவும், பிரிட்டோ மைக்கேல்லின் இசையும் ‘லிஃப்ட்’ படத்தை அலேக்கா லிஃப்ட் செய்துள்ளது, படத்திற்கு சிறப்பு. லிஃப்ட்டுக்குள்ளும், கட்டிடத்திற்குள்ளும் நடக்கும் சம்பவங்கள் தரமானவை.
கவின் கொடுக்கும் ரியாக்ஷன் எல்லாமே அளவோடு இருப்பதால் ரசிக்க முடிகிறது. அதேபோல் அம்ரிதாவும் குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளார்.
கிரண் கொண்டா, காயத்ரி ரெட்டி இருவரும் ஐடி நிறுவன இளைஞர்களின் இன்றைய சூழலை கண்முன்னே நிறுத்துகின்றனர். ஒரு பக்கா கார்ப்பரேட் க்ரிமினலை ஜெராக்ஸ் செய்திருக்கிறார் பாலாஜி வேணுகோபால்.
வழக்கமான பேய் படங்களில் பார்த்து அலுத்துப் போன காட்சிகள் இல்லாமலிருப்பது வரவேற்கதக்கது.
நைட் எஃபெக்ட்ஸில், ஒரே லொக்கேஷன் ரெண்டே கேரக்டர்களை வைத்துக்கொண்டு படமெடுக்க தனி திறமை வேண்டும். இதற்காக இயக்குனர் வினீத் வரப்பிரசாத்தை பாராட்டலாம்.
ஐடி நிறுவன ஊழியர்களின் நிலையை நன்கறிந்த அந்த பேய்கள் அப்பாவிகளான கவினையும், அம்ரிதாவையும் கொல்லத் துடிப்பது, அப்பட்டமான முரண்.
எந்த ஐடி நிறுவனத்திலும் நைட் ஷிஃப்ட்டில் இரண்டு பேர் மட்டுமே இருக்க வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு ஃப்ளோரிலும் குரூப். குரூப்பாக இருப்பார்கள். இது மன்னிக்க முடியாத லாஜிக் மிஸ்டேக்!
ஒடிடி யில் வெளியான அனைத்து படங்களும் மரண மொக்கைகள் என்றிருந்த நிலையில், இந்தப்படம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.