கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் கே கஃபூர், சந்து சலீம்குமார், அருண் குரியன், சாண்டி உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘லோகா’ – அத்தியாயம் 1 சந்திரா. இப்படத்தினை, ‘வேஃபேரர் பிலிம்ஸ்’ சார்பில், துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’ தமிழகத்தில் வெளியிட்டுள்ளது. டோமினிக் அருண் எழுதி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு, நிமிஷ் ரவி. இசை, ஜேக்ஸ் பிஜாய்.
இளம் பெண்ணான நாயகி கல்யாணி பிரியதர்ஷன், பெங்களூரில் உள்ள ஒரு சிறிய ரெஸ்ட்டாரண்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் எதிரில், நஸ்லென் கே கஃபூர் வசித்து வருகிறார். கல்யாணி மீது நஸ்லென்க்கு காதல் பிறக்கிறது. தினமும் அவரை பின் தொடர்கிறார். அப்போது ஒரு சட்ட விரோத கும்பலால் கல்யாணி கடத்தப்படுகிறார். நஸ்லெனலவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். அங்கு நடக்கும் சண்டையில், கல்யாணி ‘காட்டேரி’யாக உருவெடுத்து அனைவரையும் கொடூரமாக கொல்கிறார். இதைக்கண்டு கடும் அதிர்ச்சியடைகிறார், நஸ்லென். சட்டவிரோத கும்பலுக்கு ஆதரவு தரும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான சாண்டி கல்யாணியைத்தேடி வருகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘லோகா’ – அத்தியாயம் 1 சந்திரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
‘கள்ளியங்காட்டு நீலி’ சந்திரா கதாபாத்திரத்தில் அமானுஷ்ய சக்தி படைத்த பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன், அளவான வசனங்கள் பேசி, அட்டகாசமான நடிப்பினை கொடுத்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் பெரும் கவனம் ஈர்க்கிறார். காதல் காட்சிகளில் கண்களினாலேயே ஏக்கத்தையும், சந்தோஷத்தையும் வெளிப்படுத்துகிறார்.
சந்திரா மீது காதல் கொண்ட சன்னி கதாபாத்திரத்தில் நஸ்லென் கே கஃபூர், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடன் நடித்திருக்கும் சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகிய இருவரும் திரைக்கதையை சோர்வில்லாமல் நகர்த்துவதற்கு உதவியிருக்கிறார்கள். குறிப்பாக வேணு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்து சலிம் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா, கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் சாண்டி, மிரட்டியிருக்கிறார். காட்டேரியாக உருமாறும் காட்சியில் பீதியை கிளப்புகிறார்.
டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக இருக்கின்றன.
சண்டைப்பயிற்சியாளர் யானிக் பென்னின் சண்டைக்காட்சிகள், ரசிக்கும்படி இருக்கிறது.
எஸ்.எஃப்.எக்ஸ், வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் குறை சொல்லும்படி இல்லை.
கள்ளியங்காட்டு நீலியின் கட்டுக்கதையையும், சமகால அறிவியலையும் இணைத்து ரசிக்கும்படியான ஒரு படத்தினை கொடுத்திருக்கிறார், இயக்குநர் டோமினிக் அருண்.