‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் கதை, 2040 ஆம் ஆண்டு சென்னையில் நடப்பது போல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது, ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ போன்ற தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த நாயகன் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படம். எழுதி இயக்கியிருக்கிறார், விக்னேஷ் சிவன்.
திருமண உறவில் மனைவியை விட்டுப்பிரிந்த எஸ்.ஜே.சூர்யா, திருமணத்திற்கு முன்னரே ஆண் – பெண் இருவரிடையே, அவர்களின் நெருக்கத்தை கணிப்பதற்கு ‘LIK’ என்ற பெயரில் ஒரு செயலியை உருவாக்குகிறார்னது காதலர்களுக்கான சிறந்த செயலியாக இருக்கிறது. இந்த செயலியின் மூலம் காதலர்கள் கலா வரையரையின்றி எப்போது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். இந்த செயலியின் ஹைலைட்டாக, ஒருவர் இருக்கும் இடத்தை, இன்னொருவர் தெரிந்து கொள்ள முடியும். பிரதீப் ரங்கநாதனின் அப்பாவான சீமான், இந்த தொலை தொடர்பு சாதனங்களை பயன்படுத்தாமல், இயற்கையோடு இசைந்து வாழ்ந்து வருகிறார்.
எப்போதும் போனும் கையுமாக இருக்கும் கீர்த்தி ஷெட்டியை பார்த்தவுடன் காதலில் விழுகிறார், பிரதீப். தனது அப்பாவின் கொள்கைகளை மீறி, ‘LIK’ செயலியின் மூலம் காதலை வளர்க்கிறார். காதல் திருமணத்தை நோக்கி நகரும் தருவாயில், கீர்த்தியும், பிரதீப்பும் தங்களது காதல் நெருக்கத்தை, ‘LIK’ செயலியின் மூலம் அளவிடுகிறார்கள். அந்த செயலி அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தினை மிகக்குறைவாக மதிப்பிடுகிறது. இதனால், கீர்த்தி பிரேக் அப் செய்து கொள்ள விரும்புகிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பிரதீப் என்ன செய்தார்? என்பது தான், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’.
பிரதீப் ரங்கநாதன், தனது வழக்கமான ஸ்டைலில் நடித்திருக்கிறார். ஆனால், முந்தையப் படங்களைப்போல், இந்தப்படத்தில் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.
படத்தின் ஆகப்பெரும் பலம், கீர்த்தி ஷெட்டி தான். இளைஞர்களை தனது வசீகர அழகாலும், நடனத்தாலும் வெகுவாக ஈர்க்கிறார். ஒன்றிரண்டு காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். இவரும், பிரதீப்பும் ஒரு பாடல் காட்சியில் பங்கு பெற்றது ரசிக்கும்படி இருக்கிறது.
கௌரி கிஷன் துணை நடிகையைப்போல், நாயகனின் நண்பனாக வந்து போகிறார். குட்டை டவுசருடன் குறையில்லாத கவர்ச்சியையும், நடிப்பினையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சீமான் நடித்த சில காட்சிகளில் சிரிப்பும் வருகிறது.
சுவாரசியமற்ற திரைக்கதை, வளவள வசனங்களுக்கிடையே, படத்தின் பெரும் பலமாக இருந்து, ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார், வில்லனாக நடித்திருக்கும் எஸ்ஜே.சூர்யா. ஒரு பெண் ரோபோவுடன் வலம் வரும், அவர் நடித்த ஒவ்வொரு காட்சியுமே சிறப்பு. படத்தின் ஒரே ஆறுதல் இவர் தான்.
யோகி பாபு, மிஷ்கின், ஆனந்த் ராஜ், சுனில் ரெட்டி, சா ரா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ரவி வர்மனின் ஒளிப்பதிவில், படம் கலர்ஃபுல்லாக இருக்கிறது. அனிருத்தின் இசையிலும் குறையில்லை.
மொத்தக்குறையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மட்டுமே. சுவாரசியமற்ற , உணர்ச்சியற்ற திரைக்கதையால், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ யை ரசிக்க முடியவில்லை.
ஹாட்ரிக் கொடுத்த நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு, இந்தப்படம் பெரும் பின்னடைவு!