JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”. வரும் பிப்ரவரி 20-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா படக் குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
இயக்குநர் சரண் பேசியதாவது..,
இந்தப் படத்தில் எனக்கு ஒரு பாடலாசிரியராக (Lyric Writer) பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு முன், என் இயக்கத்தில் உருவான வட்டாரம் படத்தில் இடம் பெற்ற “யார் தருவார் இந்த அரியாசனம்” என்ற பாடலை நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு அமையவில்லை. காரணம், என் படங்களில் பெரும்பாலும் வைரமுத்து அவர்களே பாடல்களை எழுதுவார்.
இந்தப் படத்தின் இயக்குநரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் மிகுந்த சுறுசுறுப்பும், தெளிவான சிந்தனையும் கொண்ட இளம் படைப்பாளி. இசை மற்றும் சினிமா உலகின் பல முக்கிய ஆளுமைகளுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. அதனால் அவரிடம் ஒரு தெளிவான கலை நோக்கு(Vision) இருக்கிறது. ஒரு கட்டத்தில், அவர் என்னிடம் “இன்றைய காலத்திற்கேற்ற, ஒரு பாடல் வேண்டும்” என்று கேட்டார். அதனை நான் ஒரு சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு இந்தப் பாடலை எழுதினேன்.
இந்தப் பாடல், இன்றைய சமூகச் சூழ்நிலையை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் ஒரு வரலாற்றுச் சாயலையும் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக, 1900-களில் சென்னை உருவாகிய காலகட்டத்தில், குறிப்பாக பிளாக் டவுன் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள், அவற்றின் அர்த்தங்கள் மற்றும் அகராதி குறிப்புகளை ஆராய்ச்சி செய்தேன்.அந்த காலத்துச் சொற்களைப் பாடலின் பின்னணியில் இணைத்தால் தனித்துவமான அழகு கிடைக்கும் என்பதால், அந்த ஆய்வின் அடிப்படையில் இந்தப் பாடலை உருவாக்கினேன்.
இந்தப் பாடல் ஒரு ப்ரமோஷனல் சாங்காக இருந்தாலும், அதை மனதார ஏற்றுக் கொண்டு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, அகத் மகேந்திரன் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். குறிப்பாக இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநருக்கு என் சிறப்பு நன்றி.
புதிய நாயகி சிம்ரன் அத்வானி படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். அவரது கண்கள் நிறையப் பேசுகின்றன. அவர் இன்னும் பல சிறந்த படங்களில் நடிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நாயகன் ஆதவ் கிருஷ்ணா அவர்களுக்கும் என் வாழ்த்துகள். அவரது முகத்தில் ஒரு இயல்பான குறும்பும், தனித்துவமும் தெரிகிறது. Next-door boy கதாபாத்திரங்களுக்கு அவர் மிகவும் பொருத்தமானவர். வருங்காலத்தில் அவர் மேலும் பல படங்களில் நடித்து உயர்ந்த இடத்தை அடைவார் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி.

நாயகி சிம்ரன் அத்வானி பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். முதலில் இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். என் தயாரிப்பாளர்கள் பாலகோபி சார், ரகு சார், என் இயக்குநர் முருகன் சார், என்னுடன் பணியாற்றிய சக நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் இங்கு வந்திருக்கும் அனைத்து மூத்த கலைஞர்களுக்கும் என் நன்றி. படம் நன்றாக இருக்கிறது என்று அனைவரும் சொல்கிறார்கள். அதைக் கேட்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
நடிகர் ஆதவ் கிருஷ்ணா பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள தயாரிப்பாளர்கள், மேலாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்த அப்பாவிற்கும் மற்றும் ரகு சார் ஆகியோருக்கு என் முதல் நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததால்தான் இன்று நான் இங்கு நிற்க முடிகிறது. என் இயக்குநர் முருகன் சார் ஒரு மிகப் பெரிய உழைப்பாளி . கதை விவாதம் முதல் பாடல்கள்வரை ஒவ்வொரு விஷயத்திலும் அவர் எனக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதலை அளித்தார். அந்த ஆதரவு எனக்குப் பெரிய பலம்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, நடன இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் மிக அருமையாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளன.
இது என் முதல் படம் என்றாலும், அனைவரின் உழைப்பும் ஆதரவும் காரணமாக ஒரு நல்ல முயற்சியாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஊடகங்களின் ஆதரவும், ரசிகர்களின் அன்பும் மிக அவசியம். அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி.

இயக்குநர் முருகன் மாகாலட்சுமி பேசியதாவது..,
இந்த மேடையில் நிற்கும்போது, என்னுடைய சினிமா பயணத்திற்குத் துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா மேடம் இருவரும் தான் நான் இந்த நிலைக்கு வர காரணமாக இருந்தவர்கள். அவர்கள் இல்லையெனில் இன்று நான் இங்கு நிற்பது சாத்தியமில்லை.
சின்ன வயதில் ஊரில் டெய்லர் வேலை பார்த்துக் கொண்டே நாடகங்கள், கதைகள் எழுதத் தொடங்கினேன். அந்த கனவுக்குத் தைரியம் கொடுத்து என்னைச் சென்னைக்கு அனுப்பிய என் தந்தைக்கு நான் என்றும் கடமைப்பட்டவன். கேப்டன் ஆபிஸிலிருந்துதான் என் திரைப் பயணம் தொடங்கியது. வழிகாட்டி, ஊக்கம் கொடுத்த பல மூத்த கலைஞர்களுக்கும் என் நன்றி.
இந்த படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் குழு, நண்பர்கள், குறிப்பாக நாயகன் ஆதவ் கிருஷ்ணா உள்ளிட்ட அனைவரும் முழு மனதுடன் உழைத்திருக்கிறார்கள். ஒரு நண்பராகவும், ஒரு குழுவாகவும் இணைந்து வேலை செய்ததே இந்த படத்தின் பெரிய பலம். லவ்வர்ஸ் டே-யை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. புதிய இயக்குநர்களுக்கும், புதிய முயற்சிகளுக்கும் ஊடகங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும். நல்ல கதைகள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும். மிக்க நன்றி. என்றார்.
இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் வெளியாகி, குறுகிய நேரத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிரெய்லரில் இடம் பெறும் காட்சிகள், கதாபாத்திர அறிமுகங்கள், பரபரப்பான எடிட்டிங் மற்றும் இசை இணைந்து, கல்லூரிப் பின்னணியில் ஒரு அழகான காதல் கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
இந்தப் படத்தில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தர், ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.