விஜயகாந்த் ரசிகரான ‘அட்ட கத்தி’ தினேஷ், ஸ்வாசிகா தம்பதியினரின் ஒரே மகள் சஞ்சனா. தினேஷூக்கு கிரிக்கெட் விளையாட்டின் மேல் அலாதி மோகம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். சிறந்த பேட்ஸ்மேன். சஞ்சனா, விஜய் ரசிகரான ஹரீஷ் கல்யாணை காதலித்து வருகிறார். ஹரீஷ் கல்யாணும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ளவர். ஸ்போர்ட்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.
‘அட்ட கத்தி’ தினேஷ், ஹரீஷ் கலயாண் இருவருக்கும் ஒரு கிரிக்கெட் போட்டியின் போது மோதல் ஏற்படுகிறது. இதனால் சஞ்சனா, ஹரீஷ் கல்யாண் இருவருக்குமிடையே பிளவு ஏற்படுகிறது. தன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ‘லப்பர் பந்து’ படத்தின் சுவாரசியமான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
கிரிக்கெட், அதை சுற்றி நடக்கும் சாதிய பாகுபாடு, ஈகோ இவைகளை ஒரு காதலின் ஊடாக எந்த திணிப்பும் இன்றி, கலகலப்பான படமாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. படத்தின் மிகப்பெரும் பலம் திரைக்கதையும், கதாபாத்திர வடிவமைப்புமே. மேலும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருப்பது படத்தின் இன்னொரு பலம்.
படம் ஆரம்பம் முதல் கடைசி வரை சின்ன.. சின்ன.. எமோஷன், கலகலப்பு! என, போரடிக்காமல் போகிறது. கதையை யூகிக்க முடிந்தாலும் சுவாரசியம் கெடவில்லை. இறுதி வரை! பாலசரவணன் மற்றும் ஆதித்யா கதிர் பேசும் வசனங்கள் நச்சுன்னு இருக்கிறது. இருவரும் சிரிக்கவும் வைக்கிறார்கள்.
காட்சிகளுக்கேற்றபடி, விஜயகாந்த் பாடல்கள் படம் முழுவது இடம் பெறுவது சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலின் போது தியேட்டர் மொத்தமும் ரகளையாகிறது.
விஜயகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களும் படத்தினை ரசிப்பது போல் செய்திருப்பது இயக்குநரின் சாமார்த்தியமும் பலமும்.
குடும்ப உறவு, பாசம், காதல், சாதிய பாகுபாடு என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால், கிரிக்கெட் விளையாட்டு பிடிக்காதவர்களுக்கு கூட இந்தப்படம் பிடித்துவிடும். இப்படி, எந்தவிதமான திணிப்புமின்றி அனைத்து தரப்பினரையும் ரசிக்கவைக்கும் படமாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
‘அட்ட கத்தி’ தினேஷ், ஸ்வாசிகா, ஹரிஷ் கல்யாண், சஞ்சனா, பாலசரவணன், ஆதித்யா கதிர், காளி வெங்கெட், ஜென்சன் திவாகர், கீதா கைலாசம், தேவதர்ஷினி என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
இவர்களில் தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்வாசிகாவின் நடிப்பும், உடல்மொழியும், வசனமும் அனைத்து நடிகர்களிடமிருந்து தனித்து தெரிகிறார். அதோடு ரசிகர்களை எளிதாக கவர்ந்தும் விடுகிறார்.
‘அட்ட கத்தி’ தினேஷ், மனைவியை பிரிந்து வாடும் கணவனாக, அப்பாவாக என வெகு இயல்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ஸ்வாசிகாவுக்குமான ரொமான்ஸ் காட்சிகள் அல்டிமேட்.
ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்திருப்பது சிறப்பு. இவர் பேசும் வசனங்கள் கைதட்டல்களை பெறுகிறது.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை இரண்டும் படத்தின் பலம். ஷான் ரோல்டனின் இசை, காட்சிகளை மேம்படுத்துகிறது. படத்தொகுப்பாளர் மதன்.ஜி யின் படத்தொகுப்பு சிறப்பு!
லப்பர் பந்து – சிரிப்பதற்கும் சிந்திப்பதற்குமான எதார்த்த படம்!