‘விஸ்வராகம்’ என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட (M. S. Viswanathan) எம். எஸ். விஸ்வநாதன் அவர்களுக்குச் செலுத்தப்படும் ஒரு ஆன்மார்த்தமான இசைத் துதியாகும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த இசை யாத்திரை, தமிழர்களின் பாரம்பரியமும் குடும்ப உறவுகளும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் – 2026 ஜனவரி 14 அன்று ஒரு முழுமையான ஆல்பமாக வெளியிடப்பட்டது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞரும் பன்முகக் கலைஞருமான சுமதி ராம், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து தனது கவிதைத் தொகுப்பை மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் சமர்ப்பித்தார். அந்த சந்திப்பு, ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், ஒரு வாழ்நாள் இசைப் பயணத்தின் தொடக்கமாக மாறியது. அந்த ஜாம்பவான் விதைத்த இசை விதை, இன்று இசையின் மீதான தூய காதலாக மலர்ந்து ‘விஸ்வராகம்’ என்ற ஆல்பமாக உருவெடுத்துள்ளது. இது MSV – சுமதி ராம் கூட்டுப்பணியின் சின்னமாகவும், அவரது ஒப்பற்ற கலைப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் சமர்ப்பணமாகவும் திகழ்கிறது.
தற்போது, கவிதாயினி சுமதிராம் விஸ்வதுளசியின் கதையை தமிழ் கலாச்சார அம்சங்களுடன் காவிய சாயலில் ஆங்கில நாவலாக உருவாக்கும் முயற்சியில் உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்ற “லஜ்ஜாவதி” என்ற ஆங்கில இசைத் திரைப்படத்தையும், ஒரு முக்கியமான அமெரிக்க நிகழ்வை மையமாகக் கொண்டு ஆவணப்படத்தையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இத்திரைப்படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக சுமதி ராம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது .
ஆங்கில இலக்கியம் பயின்ற சுமதி ராமின் 22 தமிழ் கவிதைகள், எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் இசைக்கோவைகளாக மாற்றப்பட்டுள்ளன. இது வெறும் இசை முயற்சி அல்ல – ஒரு குருவிற்கான மரியாதை, ஒரு மாணவியின் நன்றிக்கடன், இந்திய இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்.
எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள், தனது நீண்ட இசைப் பயணத்தில் ஒரு பெண் பாடலாசிரியருடன் இணைந்து பணியாற்றிய முதல் தருணம் இதுவாகும். இது இசைத்துறையில் பெண்களுக்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைந்தது.

விஸ்வராகம் – பகுதி 1 (Part I) பாடல்கள்
Audioverse Music (ஆடியோவெர்ஸ் மியூசிக்) லேபிள் மூலம் வெளியிடப்படும் இந்த ஆல்பத்தின் முதல் பகுதியில் இடம்பெறும் பாடல்கள்:
வீணா பிட் –
ராஜேஷ் வைத்யா & எம். எஸ். விஸ்வநாதன்
ஓம்… காற்றைப் போல –
ஹரிஹரன்,
சங்கர் மகாதேவன்,
உன்னிகிருஷ்ணன்,
ஸ்ரீநிவாஸ்,
அனந்த நாராயணன்,
பாம்பே ஜெயஸ்ரீ,
சுஜாதா,
ஹரிணி,
கல்பனா
மனசு கொஞ்சம் –
எம். எஸ். விஸ்வநாதன் & பாம்பே ஜெயஸ்ரீ
விஸ்வராகம் –
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பகுதி 2 – இன்னொரு இசை அஞ்சலி
இதனைத் தொடர்ந்து, எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெயராம் ஆகியோருக்கான சமர்ப்பண ஆல்பம் – பகுதி 2 வெளியாகவுள்ளது. மீதமுள்ள பாடல்கள் மாதந்தோறும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட உள்ளன.
சுமதி ராம் – ஒரு பன்முகக் கலைஞர்
சுமதி ராமின் இயக்கத்தில் வெளியான ‘விஸ்வ துளசி’ திரைப்படம், தமிழ் சினிமாவின் ஒரு உன்னத படைப்பாக இன்றும் போற்றப்படுகிறது. இந்தப்படத்தின் இசை படைப்பிற்காக ரெமி விருதை, இசையமைப்பாளர்கள் எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் இளையராஜா பெற்றது சிறப்பிற்குரியது.
தற்போது அவர், சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளருடன் இணைந்து மேற்கத்திய மற்றும் பாரம்பரிய இசை கலந்த புதிய ஆல்பத்தை உருவாக்கி வருகிறார்.
மேலும், ‘காந்தி – கருணை மந்திரங்கள்’ (GANDHI – Mantras of Compassion) ஆல்பத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இளையராஜா, மூன்று முறை கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம், அவரது கலைப் பயணத்தின் உயரத்தை வெளிப்படுத்துகிறது.
2028 ஜூன் 14 அன்று, எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சென்னையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதே நாளில், மலைவாழ் மக்களுக்காக ‘எம். எஸ். வி. மருத்துவமனை’ திறந்து வைக்கப்பட்டது. இந்த முயற்சியின் பின்னணியைக் கொண்ட ‘ஜெவி’ (GEVI) திரைப்படம், 2026 ஆஸ்கார் விருதுப் போட்டியில் இடம்பெற்றிருப்பதும், இந்த படத்தில் சுமதிராம் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.
ஒரு இசை நன்றி – ஒரு அன்பின் வெளிப்பாடு ‘விஸ்வராகம்’ ஒரு ஆல்பம் மட்டுமல்ல. இது ஒரு மகா இசை அரசருக்கான நன்றிக் கடன், ஒரு மாணவியின் அன்பின் வெளிப்பாடு, ஒரு இசை யுகத்திற்கு செலுத்தப்படும் மரியாதை. ஒரு கவிதாயினியின் ஆழ்ந்த மரியாதையும் கலைப்பணிவும் இதில் வெளிப்படுகின்றன.