சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் “மாண்புமிகு பறை “. பறை இசையின் பெருமை சொல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படம்,வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா அரசியல் ஆளுமைகள், திரை பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
இயக்குநர் விஜய் சுகுமார் பேசியதாவது..,
எங்களை வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. மாண்புமிகு பறை எங்கள் தயாரிப்பாளர் சுபா & சுரேஷ் ராம் தான் எழுதியுள்ளார்கள். பறையிசை ஒரு பொதுவான இசை அதை எப்படி திரையில் கொண்டுவந்துள்ளோம் என டிரெய்லரில் பார்த்தீர்கள். இரண்டு பாகங்களாக இப்படத்தைத் திட்டமிட்டுள்ளோம், முதல் பாகத்தில் பறை இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும், இரண்டாம் பாகத்தில் பறை இசை எத்தனை வகைப்படும் என்பதையும் சொல்லத் திட்டமிட்டுள்ளோம். உள்ளூர் பறை இசையை உலகம் முழுக்க கொண்டு செல்லும் நோக்கத்தில் தான் இப்படத்தை எங்கள் தயாரிப்பாளர்கள் தயாரித்தனர். இப்போது உலகம் முழுக்க பல விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு விருது வாங்கியுள்ளது. எங்கள் நோக்கம் நிறைவேறியுள்ளது. தேவா சார் அற்புதமான இசையைத் தந்துள்ளார். சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.
இணை தயாரிப்பாளர் நக்கீரன் பேசியதாவது..,
இவ்விழாவைச் சிறப்பிக்க வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. இது திரையிசை வெளியீட்டு நிகழ்வல்ல, நம் பாரம்பரிய இசையின் கொண்டாட்டம். இந்த பறை இசை இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் இந்த இசை வளர்ந்து வருகிறது. கலையைத் தாண்டி இந்த இசை ஒரு அடையாளச் சின்னம். ஆதி பறை என்பதை நாங்கள் நம்புகிறோம் இதை அனைவரும் கொண்டாடுவோம். இப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.
ஆழி பறையிசை கலைஞர் எழில் பேசியதாவது…,
இயக்குநர் இப்படத்தில் எங்களை அழைத்துப் பறை இசையில் பயன்படுத்தினார். பறை இசை இசைப்பதால் எங்களைப் பல இடங்களில் தொட்டுக்கூடப் பேச மாட்டார்கள். இன்று பலர் நன்றாகப் படித்தும் இந்த மனநிலை மாறவில்லை. இந்த நிலை மாற வேண்டும் எனக் குழந்தைகளிடம் பறை இசையைக் கொண்டு சென்று பரப்பி வருகிறோம். எங்களை வாழ்த்தியதற்கு நன்றி.
பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் பேசியதாவது..,
பறை இசை தான் எனக்குத் தெரியும், பேசத் தெரியாது. மனிதன் பேசுவதற்கு முன் ஆரம்பித்த இசை பறை இசை. மனிதனின் அனைத்து விஷேசங்களிலும் இசைக்கப்படுவது பறை தான். மனிதனின் சந்தோசத்துக்கு இசைக்கும் இசை தான் பறை. பறை இசையை பெருமைப்படுத்தியதற்கு நன்றி.

இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசியதாவது..,
இயக்குநருக்காகத் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இயக்குநர் மிகக் கடினமான உழைப்பாளி. படத்தை அருமையாக எடுத்துள்ளார், அப்பாவின் விழாவிற்கு நான் வந்ததது மகிழ்ச்சியாக உள்ளது. பறை இசை இப்போது டிஜிட்டலிலும் வந்துவிட்டது. இந்த இசையை உலகம் முழுக்க வாசிக்கிறார்கள். பறை இசை நம் பெருமை. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி..
இசையமைப்பாளர் சபேஷ் முரளி பேசியதாவது..,
பறை இசைக்கு ரிதம் மிக முக்கியம், இந்த படத்திற்கு அண்ணனால் மட்டும் தான் இசை அமைக்க முடியும். அண்ணன் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றி.
லியோ சிவக்குமார் பேசியதாவது..,
நான் திண்டுக்கல்லில் பிறந்து முதன் முதலில் கேட்ட இசை பறை இசை. இன்று நான் பறை இசை கலைஞனாக நடித்திருப்பது பெருமை. இந்த கதையை இயக்குநர் சொன்ன போதே இதன் பெருமை புரிந்தது, இதில் நடிக்கக் கண்டிப்பாகப் பறை கற்றுக்கொள்ள வேண்டுமென, சக்தி கலைக்குழுவில் பறை கற்றுக்கொண்டு இப்படத்தில் நடித்தேன். இணை தயாரிப்பாளர் முரளி இல்லாமல் இப்படம் இல்லை. இப்படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முனுசாமி அண்ணன் இசை கேட்டு நாடி நரம்பெல்லாம் துடித்தது விருதுக்குத் தகுதியானவர் அவர். இயக்குநருக்கு என் நன்றி. இசையமைப்பாளர் தேவா இசை கேட்டுத் தான் வளர்ந்துள்ளேன். அவர் இசையில் நடித்தது எனக்குப் பெருமை. இந்த விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய ஆளுமைகளுக்கு நன்றி. டிசம்பர் 12 படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது..,
அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறக்கிறது என்பார்கள் இங்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். ஶ்ரீகாந்த்தேவா தேசிய விருது வாங்கி தேவாவைக் கௌரவப்படுத்தியுள்ளார். அதே போல நாயகன் லியோ அவர் அப்பா லியோனி போல அருமையாகப் பேசினார். பறை இசை நான் சின்ன வயதில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தினமும் கேட்டுள்ளேன். அது சாவுக்காக அடிக்கும் பறை இல்லை, சாமிக்காக அடிக்கும் பறை. சாமியிடம் செல்வதால் அதை அடித்து வழியனுப்புகிறார்கள். ஆதி தமிழனின் முதல் இசை பறை. ஃபாரினில் போய் நம் பாரம்பரியத்தைப் போற்றும் கதை எழுதி, அதைப் படமாக எடுத்துள்ள தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். லியோனி அனைவரையும் சிரிக்க வைக்கும் ஆளுமை, அவர் பேச்சை நான் விரும்பிக் கேட்பேன். ஆணவக்கொலை என்பது எனக்கு விபரம் தெரிந்த வயதிலிருந்தே நடந்து வருகிறது. இன்னும் மாறவில்லை. அதனால் தான் ஆதரவு தரும் வகையில் திருமாவளவன் இந்த விழாவிற்கு வந்துள்ளார். எல்லோரும் மிகவும் கஷ்பட்டு இப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.