சென்னை, கூவம் ஆற்றங்கரையில் தனது அம்மா (சரிதா), மற்றும் தங்கை (மோனிஷா), ஆகியோருடன் வசித்து வருபவர், பயந்த சுபாவம் கொண்ட ‘ஓவியர்’ சத்யா (சிவகார்த்திகேயன்). இவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, ‘மக்கள் மாளிகை’ என்ற அரசு கட்டிய அடுக்குமாடி குடியிருப்பில் அமர்த்தப்படுகிறார்கள்.
அங்கு குடியேறிய சில நாட்களிலேயே, முற்றிலும் தரமற்று கட்டப்பட்ட ‘மக்கள் மாளிகை’ கட்டடத்தால், மக்கள் பெரிதும் அவதியுறுகின்றனர். சத்யாவின் குடும்பத்தினரும் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதனால் கோபமடையும் சத்யாவின் அம்மா, கட்டிடத்தின் எஞ்சினியர், அமைச்சரின் (மிஷ்கின்) அடியாளுடன் (அருவி மதன்) மோதுகிறார்.
இந்நிலையில், கட்டிடத்தின் எஞ்சினியர், சத்யாவின் (மோனிஷா பிளஸ்ஸி) தங்கை குளிப்பதை பார்த்து கலாட்டா செய்கிறார். தட்டி கேட்கும் அவரது அம்மாவையும் அடித்து விரட்டுகிறார். அதோடு இது குறித்து கேட்கப்போன சத்யாவையும் அடித்து விரட்டுகிறார்.
சத்யா, இதன் காரணமாக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்கிறார். ஆனால், சில காயங்களுடன் உயிர் பிழைக்கிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது காதில் (விஜய் சேதுபதி) ஒருவரின் குரல் தொடர்ச்சியாக கேட்கிறது. அதோடு அந்தக்குரல் சொல்வது எல்லாம் நடந்தும் வருகிறது. இதனால் அந்தக்குரல் சொல்வதை கேட்டு அதன்படி நடக்கிறார். பயந்த சுபாவம் கொண்ட சத்யாவை அந்தக்குரல் வீரனாக்குகிறது. இதனால், ‘மக்கள் மாளிகை’ யை கட்டிய ஊழல் அமைச்சருடன் (மிஷ்கின்) நேரடி மோதல் ஏற்படுகிறது.
இதன் பிறகு என்ன நடந்தது. என்பதை, இயக்குநர் மடோன் அஷ்வின், காமெடி கலந்த திரைக்கதையில், ஊழல் அரசியல்வாதிகளை நிர்வாண படுத்துகிறார்.
பயந்த சுபாவம் கொண்ட இளைஞராக சிவகார்த்திகேயன், தனது வழக்கமான கவுன்டர்களை தவிர்த்து, குழப்பம், பயம், நடுக்கம் என கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். அதேபோல் ஆக்ஷன் காட்சிகளில், அட்டகாசப் படுத்துகிறார். அதிதி ஷங்கருக்கும் இவருக்குமான காதல் காட்சிகள் குறைவு. ரொமான்ஸ் ஏரியாவே இல்லை!? இதுக்கு, எதுக்கு ஹீரோயின்?
அதிதி ஷங்கர், முதல் பாதியில் அங்கும் இங்குமாக தலை காட்டுபவர், பின்னர் காணாமல் போகிறார். அவரைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை!
சரிதா, நீண்ட காலங்களுக்கு பிறகு அம்மாவாக நடித்து இருக்கிறார். சென்னை பாஷை பேசி கவனம் ஈர்க்கிறார்.
அமைச்சர் ஜெயக்கொடி கதாபாத்திரத்தில், வில்லனாக மிரட்டுகிறார் மிஷ்கின். அவரது தோற்றம் கிலி ஏற்படுத்துகிறது. இயக்குநர்கள் சரியாக பயன்படுத்தினால் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத வில்லனாக இருப்பார். இன்னொருவரின் துணையுடன் இருக்கும் அரசியல்வாதி கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பினை கொடுத்து இருக்கிறார். இவரை வழி நடத்தும் நண்பராக சுனில் அளவான நடிப்பு.
யோகி பாபு, நீண்ட நாட்கள் கழித்து எல்லாக் காட்சிகளிலுமே சிரிக்க வைக்கிறார். அவருடைய ‘பேட்ச் ஒர்க்’ கதாபாத்திரம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
அன்மையில் சென்னையில் விஸ்வரூபம் எடுத்து பின்னர் நீர்த்துப்போன, குடிசை மாற்று வாரியத்தின் தரமற்ற குடியிருப்புகளின் அவலநிலையை, பிரச்சனையை மக்களுக்கு எளிதில் புரியும் படி எடுத்து சொல்லி இருக்கிறார், இயக்குநர், மடோன் அஸ்வின்.
விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு, பரத் சங்கரின் இசை ஆகியன படத்தின் பலமாக இருக்கிறது.
முதல் பாதியில் விறுவிறுப்புடன் செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் விறுவிறுப்பின்றி, சற்றே குழப்பத்துடன் பயனிக்கிறது.
வில்லனாக மிஷ்கின் மிரட்டினாலும், இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நடக்கும் மோதலில் சுவாரசியம் போதவில்லை.
சிவகார்த்திகேயன், சிறுமியை காப்பாற்றும் க்ளைமாக்ஸ் காட்சியில், இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். நம்பகத்தன்மை இன்றி இருப்பதால், பதட்டமோ, பரபரப்போ ஏற்படவில்லை.
இப்படியான சில குறைகளைக் கடந்து, மக்கள் பிரச்சனையை கமர்ஷியலாக சொன்ன விதத்தில், `மாவீரன்’னுக்கு வெற்றி!