மாயக் கூத்து திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தினை கொடுக்கும். அனுபவம் கொண்ட சில கலைஞர்களுடன் இணைந்து, புதிய குழுவால் உருவாக்கப்பட்டுள்ள சிறந்த படம். எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அது சமூகத்திற்கு நலன் தரும் விதத்தில் இருக்க வேண்டும். என்பதை வலியுறுத்தியிருக்கிறது.
ராகுல் மூவி மேக்கர்ஸ் & அபிமன்யு கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நாகராஜன் கண்ணன், டெல்லி கணேஷ், மு. ராமசாமி, காயத்ரி, சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் ஏ. ஆர். ராகவேந்திரா. ஒளிப்பதிவு செய்திருக்கிறார், சுந்தர் ராமகிருஷ்ணன். இசையமைத்திருக்கிறார், அஞ்சனா ராஜகோபாலன். படத்தொகுப்பு நாகூரான்.
பிரபல எழுத்தாளர் (நாகராஜன் கண்ணன்) வாசன், தொடர் கதைகள் எழுதுவதில் வல்லவர், கர்வம் கொண்டவர். அவர் எழுதிய கதையில், பல கொலைகளை செய்த (சாய் தீனா) தனபால் எனும் ரவுடி அடுத்தாக ஒரு கொலையுடன் ரவுடித்தொழிலை கைவிட விரும்புகிறார். மற்றொரு கதாபாத்திரமான (ஐஸ்வர்யா ரகுபதி) செல்வி மீது திருட்டுப்பழி விழுகிறது. மற்றொரு கதாபாத்திரமான (மிருதுளா) ராஜி மருத்துவராக விரும்பி, அது நடக்காமல் போவதால் தற்கொலை செய்ய முடிவு செய்கிறது. இந்த 3 கதாபாத்திரங்களும், வாசனிடம் நேரில் தோன்றி, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கூறுவதுடன், வாசனை கொலை செய்ய முயற்சிக்கின்றன. வாசன் என்ன ஆனார்? என்பதே ‘மாயக் கூத்து’.
படத்தின் முதல் பகுதி சற்றே குழப்பத்துடன் செல்லும். அதன் பிறகு காட்சிகள் செல்லச்செல்ல சுவாரசியமாக செல்ல ஆரம்பித்து விடுகிறது. ஒரு நீதி போதனை போல் இருந்தாலும், அதை ஜனரஞ்சகமாக சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது. கதைக்கேற்றபடி தலைப்பு அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் சுந்தர் ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், படத்தொகுப்பாளர் நாகூரான் போன்ற தொழில் நுட்பக்கலைஞர்களின் தரமான பங்களிப்பு, கதை சொல்லும் பாணிக்கு பெரிதும் உதவியிருக்கிறது.
அறிமுக நடிகர் நாகராஜ் கண்ணன், எழுத்தாளர் வாசனாக சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். கதைக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள், அவரை கொலை செய்ய முயற்சிக்கும் காட்சிகளில், குழப்பமாகவும் மிரட்சியுடனும் நடித்து அந்தக் கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
அவரின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி, ரவுடியாக நடித்திருக்கும் சாய் தீனா, செல்வியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ரகுபதி, ராஜியாக நடித்திருக்கும் மிருதுளா, டெல்லி கணேஷ் , மு. ராமசாமி, ஆகியோரும், சிறப்பாக தங்களது நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படைப்பாளிகள் உருவாக்கும் படைப்பு எதுவாக இருந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் அது சமூகத்தை நல்வழி படுத்துவதாக இருக்க வேண்டும். என்ற கருத்தை எளிதாகவும், வலிமையாகவும், புதிய வடிவில் சொல்லியிருக்கும் இயக்குநர் ஏ. ஆர். ராகவேந்திரா பாராட்டுக்குரியவர்.
மாயக்கூத்து - புதிய வடிவத்தில் சிறந்த படம்!