காதலனுடன் கொரியாவுக்குச் செல்லும் ஷென்பாவின் கனவு துரோகத்தில் சிதையும்போது, அவள் சியோலில் தனிமையை உணர்கிறாள். அந்தத் தனிமையுடனும் புதிய இடத்தில் உள்ள கலாச்சார சவால்களுடன் போராடுகிறாள். வாழ்வின் சவால்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் ஷென்பா மெல்ல தன்னை மீட்டெட்டுக்கும்போது, புதிய நண்பர்களுடன் வாழ்க்கைக்கான பிணைப்பை உருவாக்குகிறாள். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் கதையாக உருவாகி இருக்கிறது ‘மேட் இன் கொரியா’. பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தக் கதையை கார்த்திக் இயக்கியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் ஆர். ஏ. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது,
“கொரிய கலாச்சாரம் கடந்த பத்தாண்டுகளில் இந்திய கலாச்சாரத்தை கணிசமாக பாதித்துள்ளது. ‘மேட் இன் கொரியா’ கதையில் பணிபுரியத் தொடங்கும் வரை நான் கே-டிராமாவை பார்த்ததும் இல்லை, கே-பாப் இசையை கேட்டதும் இல்லை. இந்தக் கதைக்காக சில விஷயங்கள் ரிசர்ச் செய்தபோது, கொரியா மற்றும் தமிழ் பாரம்பரியத்திற்கு இடையிலான ஆழமான கலாச்சார தொடர்புகள் மற்றும் வரலாற்று ஒற்றுமைகளைக் கண்டறிய ஆர்வமாக இருந்தேன். என்னுடைய இந்த ஆர்வம் ஆழமான ஒரு கதையைச் சொல்ல தூண்டியது. ‘மேட் இன் கொரியா’ கதை நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியுடன் தனித்துவமான கலாச்சார பின்னணியை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்து கொண்டதாவது,
“இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான். கதை கேட்டவுடனே பிடித்துவிட்டது. கே-டிராமாஸை எப்போதும் விரும்பி பார்ப்பேன். அப்படி இருக்கையில், இந்திய-கொரிய கூட்டு முயற்சியான இந்தக் கதையின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு எனக்கு உற்சாகமூட்டுவதாக இருந்தது. நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்துடன் எனக்கு ஆழமான தனிப்பட்ட தொடர்பு இருந்தது. கார்த்திக் சார் கதை சொன்னபோதே எனக்கு உடனே பிடித்துவிட்டது. நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்ஸின் இந்தப் பயணத்தில் நான் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது” என்றார்.