‘மெட்ராஸ்காரன்’ –  விமர்சனம்!

சென்னையில் வேலை பார்த்து வரும் நாயகன் ஷேன் நிகம், நாயகி நிஹாரிகா இருவரும் காதலர்கள். இவர்களின் திருமணம் நாயகனின் சொந்த கிராமத்தில் நடத்த திட்டமிடப்படுகிறது. திருமணத்திற்கான அனைத்து வேலைகளும் ஜரூராக நடந்து வரும் நிலையில், கலையரசனின் மனைவி, நிறைமாத கர்ப்பினியான ஐஸ்வர்யா தத்தாவின் மீது ஷேன் நிகம் கார் மோதுகிறது. இந்த விபத்தில் சீரியசான நிலைக்கு செல்கிறார், ஐஸ்வர்யா தத்தா. இதன்பிறகு, என்ன நடக்கிறது? என்பது தான் சஸ்பென்ஸ் மற்றும் டிவிஸ்ட் நிறைந்த ‘மெட்ராஸ்காரன்’.

மலையாள நடிகர் ஷேன் நிகம், தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படமாக இருந்தாலும், குறை சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார். நாயகனுக்கான தோற்றத்தில் அடிதடி காட்சிகளிலும், பாடல்காட்சிகளிலும் குறிப்பிடத்தக்க கவனம் பெறுகிறார். ‘மெட்ராஸ்காரன்’ என்ற தலைப்புக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவரது வசன உச்சரிப்பு, படத்தின் பெரிய மைனஸ்!

நாயகியாக நடித்திருக்கும் நிஹாரிகாவிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு!

கலையரசனின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் தன்னுடைய திரையிருப்பினை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

புதிரான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ரசிகர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார்.

ஷேன் நிகமிற்கு மாமாவாக நடித்திருக்கும் கருணாஸ், அப்பாவாக நடித்திருக்கும் பாண்டியராஜன், அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அத்தையாக நடித்திருக்கும் தீபா, நண்பராக நடித்திருக்கும் லல்லு உள்ளிட்டவர்கள் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசை பரவாயில்லை. பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு ஓகே!

ஒரு விபத்து, அதை சுற்றி நடக்கும் எமோஷனல் பழி வாங்கும் படலம் என, எழுதி இயக்கியிருக்கும் வாலி மோகன் தாஸ், சுமாரான, பரபரப்பான சஸ்பென்ஸ் படத்தை கொடுத்துள்ளார்.