ஏமாத்திட்டீங்களே ‘மகாராஜா’ – விமர்சனம்!

விதார்த் நடிப்பினில் வெளிவந்த ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர், இயக்குநர் நித்திலன் சாமிநாதன். இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் என்பதாலும், விஜய் சேதுபதியின் 50 வது படம் என்பதாலும், ‘மகாராஜா’ படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பாப்பினை, வன்முறை நிறைந்த இந்தத் திரைப்படம் பூர்த்தி செய்ததா, இல்லையா? பார்க்கலாம்.

தனது ஒரே மகளுடன் வசித்து வரும் விஜய் சேதுபதி, முடிதிருத்தும் கடையில் வேலை செய்பவர். அவரது மகள் ஊருக்கு சென்றிருந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் விஜய் சேதுபதியை தாக்கிவிட்டு, ஒரு பொருளை தூக்கி சென்று விடுகின்றனர். கொள்ளையர்கள் தாக்கியதால், சில மணி நேரம் கழித்து சுய நினைவு பெறும் விஜய் சேதுபதி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? இது ஒரு வித கோணத்தில் சொல்லப்படும் கதை.

கொடூரகுணம் படைத்தவர் அனுராக் காஷ்யப். தனது மனைவி அபிராமி மற்றும் மகளுடன் வசித்து வரும் இவர், தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். இதற்கு நேரெதிர் குணம் படைத்தவர் விஜய்சேதுபதி. நேர்மையான வழியில் தன்னால் முடிந்த அனைத்தையும் நேர்மையாக தனது மகளுக்கு செய்து வருபவர். காலமும், சூழலும் இவர்களுக்குள் ஒரு தீராப்பகையை ஏற்படுத்துகிறது. அந்த பகையின் காரணமாக இருவருடைய வாழ்க்கையும் சின்னாபின்னமாகிறது. இது ஒரு வித கோணத்தில் சொல்லப்படும் கதை.

இந்த இரண்டுவிதமான கதை போக்குகளையும், முன்னுக்கும் பின்னுக்கும் நகர்த்தி (non linear narrative) சொல்வது  தான், மகாராஜா படத்தின் லாஜிக்கில்லாத குழப்பமான திரைக்கதையும், எதிர்பார்க்காத க்ளைமாக்ஸூம்!

மகாராஜாவாக விஜய் சேதுபதி, ஒருசில இடங்களைத்தவிர, வழக்கம் போல் இயல்பாக நடித்திருக்கிறார்.

அனுராக் காஷ்யப், தனது பங்களிப்பினை நிறைவாக செய்திருக்கிறார். வெறுக்கப் படவேண்டிய இவரது கதாபாத்திரத்தினை புனிதப்படுத்தியிருப்பது முரண்!

காவல் நிலைய சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளுமே சிறுபிள்ளைத் தனமான படமாக்கல்! பேத்தல். அதிலும், கல்கி நடித்திருக்கும் ‘போலீஸ்’ கதாபாத்திரம், இயக்குநர் நித்திலன் சாமிநாதனின் மகா மட்டமான ரசனை.

போலீஸ் இன்ஃபார்மராக நடித்திருக்கிறார் சிங்கம் புலி. இவரது கதாபாத்திரம் மிரள வைக்கிறது.  அதற்கான அவரது நடிப்பும் பாராட்டும்படி இருக்கிறது. இன்ஸ்பெக்டர் நட்டி நடராஜின் முன்பு, விஜய்சேதுபதியின் நெஞ்சில் தன்னுடைய விரலை வைத்து, சிங்கம் புலி மிரட்டும் இடம் சபாஷ் போட வைக்கிறது.

நடிப்பை பொறுத்தவரை, முதலில் சிங்கம் புலி. அடுத்ததாக அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ் பிறகு அபிராமி. படத்தில் நடித்த மற்றவர்கள் பெரிதாக மனம் கவரவில்லை.

நான் லீனியர் பாணியில் கதை சொல்லப்பட்டதால், படம் பார்ப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இயக்குநரும், படத்தொகுப்பாளரும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனும், இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத்தும் படத்திற்கான பலமாக இருக்கிறார்கள்.

முதல் பாதி திரைக்கதை எதை நோக்கி செல்கிறது, என்பதே புரியாத நிலை ஏற்படுகிறது.

இரண்டாம் பாதியில், எதிர்பாராத திருப்பங்கள் இருந்தபோதும், பல இடங்களில் தொய்வு. க்ளைமாக்ஸ் முன்னர் இடம்பெறும் 25 நிமிட காட்சிகளே சிறப்பு!

‘மகாராஜா’ –  ராஜ்ஜியம் இல்லாத ஒரு ‘ராஜா’