‘மகா சேனா’ – விமர்சனம்!

விமல், ஸ்ருஷ்டி டாங்கே, மஹிமா குப்தா , யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவகிருஷ்ணா, இலக்கியா, சுபாங்கி ஜா, விஜய் சேயோன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், மகா சேனா.இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார், தினேஷ் கலைசெல்வன். ‘மருதம் புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ளது.

ஒளிப்பதிவாளர் – மனாஸ் பாபு D R , இசை – A.பிரவீன் குமார் , பின்னணி இசை – உதய் பிரகாஷ் U P R, கலை இயக்குனர் – V S தினேஷ் குமார், படத்தொகுப்பாளர் – நாகூரான் ராமச்சந்திரன் , சண்டைக்காட்சி – ராம்குமார் , பாடல் வரிகள் – தினேஷ் கலைச்செல்வன், பாபு வசிகர்மன் , உடை – ஹேமா , ஒப்பனை – ஆர்.கே , நடன இயக்குனர் – அமீர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, குரங்கணி மலைப்பகுதியின் மேல் மற்றும் அடிவாரத்தில் வசிப்பவர்களுக்கிடையே, ஒரு சிலை தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. யாளீஸ்வரன் என்றழைக்கப்படும் சிலை, பௌர்ணமி நாளில் மட்டுமே புலப்படும். மற்ற நாட்களில் தொட்டு மட்டுமே உணரமுடியும். இந்த சிலைக்காக இரு தரப்பிலுமே உயிர் சேதம் ஏற்படுகிறது. வனத்துறை அதிகாரி ஜான் விஜய் மூலம், அந்த சிலையை கபீர் துஹான் சிங் கைப்பற்ற முயற்சிக்கிறார். இந்த மூன்று தரப்பினரில் யார் அந்த சிலையை கைப்பற்றினார்கள். என்பது தான், ‘மகாசேனா’ படத்தின் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் விமலுக்கு, இடைவேளை முன்பு வரை பெரிதாக காட்சிகள் இல்லை. 5 அல்லது 6 காட்சிகள் மட்டுமே. அவருடைய கதாபாத்திர வடிவமைப்பும், அவரது நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் அளவில் இல்லை. கதாநாயகியாக நடித்திருக்கிறார், ஸ்ருஷ்டி டாங்கே. அவருக்கும் சிறப்பாக நடிப்பதற்கு காட்சிகள் அமைக்கப்படவில்லை. பொதுவாகவே இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை.

காமெடிக்காக யோகி பாபு. ஆனால், காமெடி தான் இல்லை. அப்படியே இருந்தாலும், அது ரசிக்கும்படி இல்லை. வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், நடிப்பதற்கு பதிலாக எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறார். க்ளைமாக்ஸில், வில்லனாக வரும் கபிர் துஹான் சிங், நடிப்பும் ரசிக்கும்படி இல்லை.

மல அடிவாரத்தின் மக்கள் தலைவியாக நடித்திருக்கும் மஹிமா குப்தா, விஜய் சேயோன், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவ கிருஷ்ணா, சுபாங்கி , சிறுமி இலக்கியா ஆகியோரும் இயக்குநர் விருப்பத்தின் பேரில் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபுவின், ஒளிப்பதிவில்  காடுகள், மலைகளின் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. யானை வரும் காட்சிகளில் பிரம்மாண்டம். அந்தக்காட்சிகளை கூடுதலாக வைத்திருக்கலாம். திரைக்கதையின் சோர்வை, காடுகளின் அழகான பின்புலம் நீக்குகிறது. இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. உதய் பிரகாஷ் U P R-ன் பின்னணி இசை நன்றாக இருக்கிறது.

எழுதி, இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன், கதையோட்டத்திற்கு தேவையில்லாத காட்சிகளை நீக்கிவிட்டு, திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில், ‘மகாசேனா’  –  காடுகளின் அழகு!