மஹாவீர்யர் – விமர்சனம்!

சிற்றின்பத்தில் திளைத்து வரும் மன்னன் லால். சகலவிதமான சுகபோகங்களை அனுபவித்து வரும் அவரது வாழ்க்கையில் தீர்வு காணமுடியாத சிக்கல் வருகிறது. அது என்ன என்றால், தொடர் விக்கல். எல்லாவிதமுமான சிகிச்சை அளித்தும் அவரது விக்கல் நிற்கவில்லை. இறுதியாக பிரபஞ்சத்தின் பேரழகி ஒருத்தியை தேடிப்பிடித்து கொண்டுவர தன்னுடைய மந்திரி ஆசிஃப் அலிக்கு உத்தரவிடுகிறார். மன்னரின் கட்டளையை அவர் நிறைவேற்றினாரா? தடைகள் எதுவும் இருந்ததா? என்பது ஒரு கதை.

சமகால சாமியார் நிவின்பாலி, சுற்றுப்பயணம் செய்துவரும் வழியில் ஒரு இடத்தில் தங்குகிறார். அந்த இடத்தின் அருகே இருக்கும் கோவிலின் சிலையை திருடியதாக அவர் மீது ஊர் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். உண்மையிலேயே அவர் சிலை திருடினாரா.. இல்லையா? என்பது ஒரு கதை.

இந்த இரண்டு சம்பவங்களும் சமகால நீதிமன்றத்திற்கு வருகிறது. அங்கு என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது. என்பது தான் ‘மஹாவீர்யர்’ என்ற ஃபேண்டஸி படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

மலையாளத்தில் குறிப்பிட்ட ஜானரில் மட்டுமே படங்கள் வந்து கொண்டிருந்தது. கடந்த சில வருடங்களாக மலையாளப்படங்கள் உலக சினிமாவை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் ஒன்று தான் இந்த மஹாவீர்யர் பேண்டஸி படம்.

மன்னராக நடித்திருக்கும் லால், தன்னுடைய தனிப்பட்ட நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார். அவருடைய அமைச்சராக நடித்திருக்கும் ஆஷிப் அலி, நீதிபதியாக நடித்திருக்கும் சித்திக் உள்ளிட்டோரும் நேர்த்தியாகவே நடித்துள்ளனர்.

படம் முழுவதும் தனக்கான காட்சிகள் இருக்காது என்பதை தெரிந்தும் சாமியார் வேடத்தில் நடித்திருக்கும் நிவின் பாலியின் நடிப்பும் படத்தில் அவரது பங்கும் பாராட்டத்தக்கது. மேலும் இந்தப்படத்தினை அவரே தயாரித்திருப்பது, மலையாள சினிமாவின் வித்தியாச முயற்சிக்கு முன்னேற்றத்தினை கொடுத்திருக்கிறது.

ஷான்விஸ்ரீவத்சவா, மன்னரின் சிகிச்சைக்காக இழுத்துவரப்படும் பெண்ணாக வந்து அனைவரின் கவனத்தையும், பரிதாபத்தையும் பெறுகிறார். கோர்ட்டில் அரை நிர்வாணமாக நடித்தும் துணிச்சல் காட்டியிருக்கிறார். ஷான்விஸ்ரீவத்சவாவின் கண்ணீரை பெற நீதிபதி சித்திக் நடித்துக்காட்டும் போது தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது.

அதேபோல் டைவர்ஸுக்காக வரும் தம்பதிகள் அடிக்கும் அரட்டையும் தியேட்டரில் சிரிப்பலைகளை நீண்ட நேரம் வைத்திருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.

இயக்குனர் அப்ரித் ஷைனுக்கு பாராட்டுக்கள்!

பார்க்கலாம்!