செல்வராகவன், குஷி ரவி, கௌசல்யா, ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி , ஆர் எஸ் சதீஷ், சிறுமி லிர்த்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட பலரது நடிப்பினில், வெளியாகியிருக்கும் திரைப்படம், ‘மனிதன் தெய்வமாகலாம்’. இத்திரைப்படத்தை விஜயா சதீஷ் தயாரித்துள்ளார். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியிருக்கிறார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்க, ஏ. கே.ப்ரியன் இசை அமைத்துள்ளார்.
வசதிகளற்ற ஒரு மலைக் கிராமம். வசதிகள் வேண்டி, அரசிடம் மனுக்கள் அளித்து வந்த போதும் கண்டு கொள்ளப்படாத அந்தக் கிராமத்தில் உள்ள எளிய மனிதன் செல்வராகவன், நுங்கு வியாபாரம் செய்து வருகிறார். கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கும் செல்வராகவனை, குஷி ரவி அவரது குணத்தைக் கண்டு மணம் முடித்துக்கொள்கிறார். செல்வராகவனின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மனைவியே சகலமும் என எண்ணுபவர், நெடுஞ்சாலயின் ஓரத்தில் தாபா ஒன்றை நடத்துகிறார். ஊரார் வியக்கும் வண்ணம் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், திடீரென ஒரு நாள் குஷி ரவி தற்கொலை செய்து கொள்கிறார். இது, மனைவியே உலகம் என வாழ்ந்த செல்வராகவனை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து, அந்த ஊராருக்கு தெய்வமாக மாறுகிறார். இதுவே ‘மனிதன் தெய்வமாகலாம்’.
கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி செல்வராகவன் பொருந்தியிருந்தாலும், அவரது நடிப்பில் செயற்கைத்தனம் இருப்பதால் ரசிக்கமுடியவில்லை. நாயகி கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் அறிமுக நடிகை குஷி ரவி, அழகாக தோன்றவும் செய்கிறார், நடிக்கவும் செய்கிறார். அறிமுக நடிகை போல் காட்சி தரவில்லை. செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கிறார், முன்னாள் கதாநாயகி கெளசல்யா. பெரிதாக ஈர்க்கவில்லை. மற்றபடி ஆர்.எஸ்.சதீஷ், மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன், சிறுமி லிர்த்திகா, சேலம் தீபக் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரவி வர்மாவின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசை இரண்டும் படத்தின் பலம்.எழுதி இயக்கியிருக்கும் டென்னிஸ் மஞ்சுநாத், அடிப்படை வசதியற்ற, கந்துவட்டி கொடுமைகளை எதிர்கொள்ளும் எளிய கிராம மக்களின் வாழ்க்கையை பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார். அது திரைக்கதையாக்கத்தில் தோற்றுப்போயிருக்கிறது. காட்சிகள் பார்வையாளர்களுக்கு எந்த தாக்கத்தினையும் அளிக்கவில்லை. மாறாக கடும் அயற்சியைத்தருகிறது!
‘மனிதன் தெய்வமாகலாம்’ – ஈர்க்கவில்லை!