இயக்குநர் சுசீந்திரனின் ‘வெண்ணிலா புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின், மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா, இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
இதில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா பங்கு பெறும் ஒரு படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் திரையுலகினை சேர்ந்த சிவகுமார், சீமான், ஆர் வி உதயகுமார், ஆர் கே செல்வமணி, கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மார்கழித் திங்கள் படத்தின் இயக்குநர், மனோஜ் பாரதிராஜா பேசியதாவது…
18 வருட போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குநராக வந்திருக்கிறேன். சுசீந்திரன் சாரிடம் நான் நிறைய கதைய சொல்லியிருந்தேன். திடீர் என்று ஒரு நாள் கூப்பிட்டு ‘நீங்க படம் பண்ணுங்க’ என்று கூறிவிட்டார். அதன் பின்னர் 15 நாட்களில் ஷூட்டிங் தொடங்கியது. என்னுடைய முதல் படத்தில் இளையராஜா மற்றும் பாரதிராஜா இணைந்திருப்பது எனக்கு பெருமை. கதாநாயகன் ஷியாம் நன்றாக நடித்துள்ளார். ரக்ஷனா மற்றும் அனைவரும் அருமையான பங்களிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக அனைவரும் பாருங்கள். என் கஷ்டங்களில் உடனிருந்த மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி. பத்திரிகையாளர்கள் என்றால் ஒரு குடும்பம் என்று சொல்லலாம். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். என்றார்.