‘மார்க்’ – (விமர்சனம்) ஆந்திர, ஸ்பெஷல் மசாலா!

கிச்சா சுதீப், நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம், யோகி பாபு, ரோஷ்னி பிரகாஷ், தீபிக்‌ஷா, ட்ராகன் மஞ்சு, கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி மற்றும் பலரது நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம், மார்க். எழுதி இயக்கியிருக்கிறார், விஜய் கார்த்திகேயா. ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ சார்பில், டிஜி தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

சுதீப்பிற்கு இருக்கும் பெருவாரியான ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில், தூக்கலான மசாலாவில் உருவாக்கப்பட்டிருப்பது தான், மார்க் திரைப்படம்.

பணி இடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை உயரதிகாரி கிச்சா சுதீப். அவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில், காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுகிறார். அந்த காவல் நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் இருக்கிறது. இந்த போதை பொருளை கைப்பற்றுவதற்காக, நிழல் உலக தாதா நவீன் சந்திராவின் கும்பல் காவல் நிலையத்தை கைப்பற்ற முயற்சிக்கிறது. அந்த கும்பலை காற்றில் பறக்கவிட்டு துவம்சம் செய்கிறார், கிச்சா சுதீப். அதன் பிறகு 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார்.

கிச்சா சுதீப்பின் அம்மாவிடம் அன்பு செலுத்தும் ஒரு குழந்தையுடன் சேர்த்து பல குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அந்த குழந்தைகளை மீட்க களமிறங்குகிறார். கிச்சா சுதீப். கடத்தப்பட்ட ஒரு குழந்தையின் மொபைல் போனில், முதலமைச்சர் கொலை செய்யப்படும் வீடியோ பதிவை கைப்பற்ற இன்னொரு கும்பல் முயற்சிக்கிறது. இது கிச்சா சுதீப்பிற்கு தெரிய வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? தான் இப்படத்தின் கதை.

வில்லனையும், அவனது கும்பலையும் அடித்து காற்றில் பறக்கவிடுவது, அயிட்டம் சாங், அம்மா சென்டிமென்ட் என அனைத்தும் கமர்ஷியல் ரசிகர்களுக்காக, லாஜிக்கை பற்றி கவலைப்படாமல்  உருவாக்கப்பட்டிருக்கிறது.

கிச்சா சுதீப் வில்லன்களை அடித்து பறக்கவிடும் காட்சிகள் நம்பும் படியாக அமைந்திருக்கிறது. அது அவரது ரசிகர்களையும், அடிதடி ரசிகர்களையும் திருப்தி படுத்துகிறது. ‘மத்ஸு மலைக்கா’ அயிட்டம் சாங் அனைவரையும் ஆட வைக்கிறது.  முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார், கிச்சா சுதீப்.

கொடூர வில்லனாக நடித்திருக்கிறார், நவீ சந்திரா. வில்லத்தனம் மிரட்டல்.

காமெடி வில்லனாக குரு சோமசுந்தரம். காட்சிகள் அதிகம் இல்லை. இருந்தாலும் ஓகே!

காதலுக்காக வன்முறையில் இறங்கும் விக்ராந்த். கிடைத்த சில காட்சிகளிலேயே கவனம் பெற்றுவிடுகிறார்.

ரோஷ்னி பிரகாஷ், தீபிக்‌ஷா, ட்ராகன் மஞ்சு, கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி ஆகியோரும் கதைக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.

யோகி பாபுவின் காமெடிகாட்சிகள் எடுபடவில்லை!

‘மத்ஸு மைக்கா’ குத்து பாடலுக்கு நடனமாடி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறார், நிஷ்விகா.

ஆரம்பம் முதல் இறுதி வரை,  ஒரு சில திருப்பங்களுடன் விறுவிறுப்பாகவே செல்கிறது. அடிதடி ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் காட்சிகள் அமைத்து இயக்கியிருக்கிறார், இயக்குநர் விஜய் கார்த்திகேயா.

‘மார்க்’ –  ஆந்திர, ஸ்பெஷல் மசாலா!