வரலட்சுமி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ்,சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலரது நடிப்பில் ஆஹா ஒடிடி யில் வெளியாகியிருக்கும் திரைப்படம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன். இப்படத்தினை ‘D PICTURES’ சார்பில் தயாள் பத்மநாபன், தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார்.
போலீஸ் எஸ்.ஐ, வரலட்சுமி சரத்குமாரும், மஹத் ராகவேந்திராவும் காதலர்கள். ஒரு நாள் இரவினில் மஹத் ராகவேந்திரா, ஒரு கும்பலிடம் சிக்கிய சிறுமியை காப்பாற்றுவதற்காக அருகில் உள்ள காவல் நிலையத்தின், போலீஸ் இன்ஸ்பெக்டர் அமித் பார்கவிடம் புகார் செய்கிறார். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்காமல் அந்த கும்பலுக்கு உதவி செய்வதுடன், மஹத் ராகவேந்திராவையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். அவர்களிடமிருந்து தப்பிக்கும் மஹத் ராகவேந்திரா, தன்னுடைய காதலி வரலட்சுமி சரத்குமாருக்கும், நண்பர்களுக்கும் மொபைல் போன் மூலம் ஒரு வீடியோவையும், ஒரு வாய்சையும் அனுப்பிவிட்டு மறைந்து விடுகிறார். வரலட்சுமி சரத்குமாரும் அவரது நண்பர்களும் அவரைத்தேடி வருகின்றனர். அவர் கிடைத்தாரா, இல்லையா? என்பது தான் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை, ஒரு மர்ம நாவலை படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. விறுவிறுப்பான திரைக்கதை சுவாரஷ்யத்தினை ஏற்படுத்துகிறது. லாஜிக் மீறல்களை மட்டும் சரியாக கையாண்டிருந்தால், அட்டகாசமான ஒரு படமாக அமைந்திருக்கும்.
காட்சியமைப்புகள் சரியாக அமைக்கப்படவில்லை! இடைவேளை வரை சுமாராக பயணிக்கும் திரைக்கதை, போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் இரட்டை கொலைக்கு பிறகு, அத்தனை லாஜிக் மீறல்களையும் தாண்டி, படம் பார்ப்பவர்களை பரபரப்பாக்கி விடுகிறது! நேர்த்தியான க்ளைமாக்ஸ்!
போலீஸ் எஸ்.ஐ கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார், குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.
மஹத் ராகவேந்திரா க்ளைமாக்ஸ் காட்சிகளில் கண்கலங்க வைத்து விடுகிறார். அவரது நடிப்பினை பாராட்டலாம்.
போலீஸ் ஏசிபி கதாபாத்திரத்தில் ஆரவ் சிறப்பாக நடித்திருக்கிறார். கொலைகள் குறித்து அவர் விசாரிக்கும் தோரணையும், கம்பீரமான தோற்றமும் , அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. சின்ன சின்ன முக பாவனைகளிலேயே மிரட்டியிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கிறார், இயக்குநர் சுப்ரமணியம் சிவா. படத்துக்கு படம் நடிப்பில் மிரட்டும் அவரது நடிப்பு, இந்தப்படத்தில் எடுபடவில்லை!
இசையமைப்பாளார் மணிக்காந்த் கத்ரியின் இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஷேகர் சந்த்ராவின் ஒளிப்பதிவு பரவாயில்லை!
மர்ம நாவல்களை விரும்பி படிப்பவர்களுக்கு, மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் பிடிக்கும்!
ரேட்டிங் 2.5/5