‘த ஷோ மஸ்ட் கோ ஆன்’ & ‘பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்களது தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம், மாஸ்க். இதில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா, பவன், சார்லி, ரமேஷ் திலக், ‘கல்லூரி’ வினோத், ரெடின் கிங்ஸ்லி , ‘ஆடுகளம்’ நரேன், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆதரவற்றோருக்கான, தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் (ஆண்ட்ரியா) பூமி. தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருபவர் (கவின்) வேலு. தனி கட்சி தொடங்கும் (பவன்) அமைச்சர் மணிவண்ணன் ஆட்சியைக் கைப்பற்ற நினைப்பவர். இவர் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, பூமியிடம் சுமார் 400 கோடியை கொடுத்து விநியோகம் செய்யச்சொல்கிறார். அந்தப்பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடிக்கிறது. அதை கண்டுபிடித்து தருமாறு, வேலுவிடம் கேட்கிறார். வேலு அதை கண்டுபிடிக்கும் போது ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதோடு பூமியால் வேலுவின் மகள் கடத்தப்படுகிறாள். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ‘மாஸ்க்’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
எதைப்பற்றியும் கவலைப்படாத, எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கதாபாத்திரத்தில் கவின். அதை, தனது இயல்பான நடிப்பின் மூலம் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த படங்களை விட இந்தப்படத்தில் ரசிகர்களை எளிதாக கவர்கிறார். ருஹானி ஷர்மாவுடனான காட்சிகள் கிளுகிளுப்பாக இருக்கின்றன. அவருக்கும் ஆண்ட்ரியாவிற்குமான காட்சிகளும் ரசிக்கும்படியே இருக்கிறது.
ஆண்ட்ரியா, தனது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார். வில்லத்தனம் காட்டும் காட்சிகளில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். கவினின் மகளை கடத்தி வைத்து கெத்து காட்டும் காட்சி நன்றாக இருக்கிறது. ஜெயில் கைதியாக பூமி கதாபாத்திரத்தில் அசால்ட்டாக நடித்திருக்கிறார்.
ருஹானி ஷர்மா, கவர்ச்சி காட்டியிருப்பதுடன், நன்றாகவும் நடித்திருக்கிறார். கணவன் மனைவியான அச்யுத்குமார், ருஹானி ஷர்மா ஆகியோருக்கிடையே அவர்களது வீட்டில் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சி வெடிச்சிரிப்பினை ஏற்படுத்துகிறது.
அமைச்சராக பவன், சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோ, அர்ச்சனா சந்தோக், அச்யுத் குமார், சுப்ரமணிய சிவா ஆகியோரது நடிப்பும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. இவர்களில் அர்ச்சனா சந்தோக் நடிப்பு தனித்து நிற்கிறது. பேராசை பிடித்த, திடீர் பண்க்காரியாக அவரது நடிப்பு சூப்பர். முதல்பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும், இரண்டாவது பாதியில் இல்லாதது ஏமாற்றம். G.V.பிரகாஷ் குமார் இசையமைப்பில், ‘கண்ணுமுழி.. காக்கா முள்ளா’ பாடல் தாளம் போட வைக்கிறது. நடனமும் சிறப்பாக இருக்கிறது.
G.V.பிரகாஷ் குமார் இசையமைப்பில் வசனங்களை பின்னணி இசை கேட்கவிடாமல் செய்கிறது. தில் கவனம் செலுத்தியிருக்கலாம். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவை குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை. கதைகுறித்த நெல்சனின் வாய்ஸ் ஓவர், பல இடங்களில் வருவதை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில், ‘மாஸ்க்’ ஒரு ஓக்கேவான படம்!