‘மாயன்’ – விமர்சனம்!

‘ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ்’ சார்பில், ஜே. ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம், மாயன். இதில், வினோத் மோகன், பிந்து மாதவி, ஆடுகளம் நரேன், ஜான் விஜய், கஞ்சா கருப்பு , சாய் தீனா, ராஜ சிம்மன், ஸ்ரீரஞ்சனி, ரஞ்சனா நாச்சியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இணை தயாரிப்பு டத்தோ கணேஷ் மோகனசுந்தரம். ஒளிப்பதிவு கே.அருண் பிரசாந்த். இசை எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்.

யுகங்கள் பல கடந்தும் நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் நடந்து வரும் ஆன்மீக மோதல் போராட்டமே, மாயன்.

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தான் மெக்ஸிக்கோவில் வாந்து வருவதாகவும் மாயன்கள் யார் என்பதை பற்றிய முன்னுரையுடன் படம் துவங்குகிறது.

உலகம் 13 நாட்களில் அழியப்போகிறது. என ஒரு அசரீரி, ‘ஆடுகளம்’ நரேன் நடத்தும் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும், கதாநாயகன் வினோத் மோகனிடம் கூறுகிறது. முதலில் கண்டு கொள்ளாத அவர், பின்வரும் நாட்களில் நம்பத் துவங்குகிறார். அதன் பிறகு அவர் எடுக்கும் முடிவுகள் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், மாயன் படத்தின் கதை.

கதையின் நாயகனாக

நடித்திருக்கும் புதுமுக நடிகர் வினோத் மோகன், ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் கொண்டவராக இருப்பதுடன் நன்றாகவும் நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கிறார் பிந்து மாதவி. குறைவான காட்சிகளில் வந்து போகிறார். ஆனாலும் பெரிதாக மனம் கவரவில்லை!

வழக்கமான கதாபாத்திரங்களில் போலீஸ் அதிகாரியாக ஜான் விஜய். வில்லனாக சாய் தீனா, ராஜ சிம்மன் ஆகியோர். சில பில்டப் வசனங்களோடு வந்து போகிறார், ரஞ்சனா நாச்சியார். கஞ்சா கருப்பு, மரியா, பியா பாஜ்பாயி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். ஆனால் எதற்கு என்று தெரியவில்லை!

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் திரைக்கதைக்கு ஏற்ப பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கே.அருண் பிரசாத் ஒளிப்பதிவு, ஓகே!

எழுதி இயக்கியிருக்கும் ஜெ.ராஜேஷ் கண்ணா, லெமூரியா – மெக்ஸிகோ தொடர்பு, மாயன்கள் வரலாறு என பல விஷயங்களை, தெளிவில்லாமல் கொடுத்திருப்பது படத்தின் பலவீனம். ஆரம்பக்கட்ட காட்சிகள் சுவாசியத்தை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்த காட்சிகள் ஏமாற்றுகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேமினை நினைவூட்டுகிறது.

மொத்தத்தில், மாயன், புதிய கோணத்தில் ஹீரோ வில்லன் மோதல்!