இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி எந்த பணிகளுமே நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். அனைவருடைய வாழ்க்கையிலும் இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது. இதுவொரு திருப்புமுனை. இதை வரும் தலைமுறைகளுக்காக நாம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது அனைவருடைய மனதிலே இருந்தது. அதை இயக்குநர் பரத்பாலா செயல்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் எல்லா தலைமுறைக்காகவும் இந்தியாவை புதிய கோணத்தில் காட்சியமைத்து பதிவு செய்யும் இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ‘வந்தே மாதரம்’, ‘ஜன கன மன’, மேலும் ஜியோ உடோ படோ ஜீதோ, காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ காணொலி என அனைத்துமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இந்தக் காணொலிகள் அனைத்துமே தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படக் கூடியவை. தற்போது இந்த கொரோனா ஊரடங்கை ‘மீண்டும் எழுவோம்’ என்ற பெயரில் ஆவணப்படுத்தியுள்ளார்..
தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து இதனை சாத்தியப்படுத்தியுள்ளார். வரும் தலைமுறைகளுக்காக இயக்குநர் பரத்பாலாவும், அவருடைய 117 பேர் கொண்ட 15 குழுக்களும் இதுவரை பார்த்திராத தேசிய ஊரடங்கை தங்கள் கேமராக்களில் காட்சிகளாகச் சிறை பிடித்துள்ளனர். கண்டிப்பாக வரும் தலைமுறையினர் கண்ணுக்குத் தெரியாத ஒரு நோய் தொற்றால் இந்தியா எப்படி முழுமையாக ஸ்தம்பித்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
இந்தப் படப்பிடிப்புக்கான தலைமை கட்டுப்பாட்டு அறையை மும்பையில் அமைத்து அங்கு ஒரு குழு வாரத்தின் அனைத்து நாட்களும் பூட்டப்பட்டே இருந்தனர். 14 மாநிலங்களில் பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து படம்பிடித்த காட்சிகள் அனைத்தையுமே இந்த குழுவினர் ஒருங்கிணைத்தனர். களத்திலிருக்கும் குழுக்கள் வாட்ஸ்-அப் வீடியோ கால், ஜும் செயலி உள்ளிட்ட தொழில்நுட்ப வாயிலாக பரத்பாலாவை தொடர்பு கொண்டு இதனை படமாக்கினர். தேவைப்படும் காட்சிகளை இங்கிருந்து கூற அதனைப் படக்குழுவினர் முழுக்க தொழில்நுட்ப வாயிலாகவே இந்தியா முழுக்கவே காட்சிப்படுத்தி சாதனை புரிந்துள்ளனர்.
4 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப் படம் கண்டிப்பாக இந்தியாவின் கொரோனா ஊரடங்கைப் பார்ப்பவர்களுக்கு எடுத்துரைக்கும் இப்படத்திற்கு ‘மீண்டும் எழுவோம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.இப்படிப்பட்ட ஊரடங்கிலிருந்து, பொருளாதார இழப்பிலிருந்து எப்படி மீண்டு வந்துள்ளோம் என்பதை வரும் தலைமுறையினர் கண்டிப்பாக உணரும் வகையில் இருக்கும்.
வரும் 6ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது இப்படத்தின் 4 நிமிட தொகுப்பினை அனைத்து ஊடகங்களும் வரும் 13ம் தேதி வரை நேரடியாக முழுவதும் எடிட் செய்யாமலும் அளிக்கப்படும் லிங்கினை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது