தமிழில் திரைப்படங்களை தயாரிக்க விரும்புகிறார், நடிகை மேகா ஷெட்டி!

நேர்த்தியான வசீகரத்தாலும் பன்முகத் திறனாலும் பார்வையாளர்களைக் கவரும் திறன் கொண்ட நடிகைகள் மிகக் குறைவு. அப்படியான நடிகைகள் திரையில் பார்வையாளர்கள் எளிதில் தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ளும்படியான பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரங்களை சிரமமின்றி நடிப்பார்கள். தமிழ் மொழியின் மீதான அவர்களின் தேர்ச்சி ரசிகர்களுக்குப் பிடித்திருப்பது மட்டுமல்லாமல், அவர்களது தொடர் முயற்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. தமிழ் அல்லாது வேறு மொழிகளில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த ஜோதிகா, நஸ்ரியா மற்றும் பலர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்திருக்கிறார்கள். இந்த வரிசையில் தமிழ் சினிமாவுக்கான புதுவரவாக நடிகை மேகா ஷெட்டி இணைந்துள்ளார்.

கன்னட சினிமாவில் இருந்து வந்த மேகா ஷெட்டி, சினிமா கலையின் மீதான தனது அசைக்க முடியாத ஆர்வத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தொலைக்காட்சி சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் மேலும் ஒரு தொலைக்காட்சி சீரிஸையும் இணைத்தயாரிப்பு செய்துள்ளார். தனது அபாரமான நடிப்புத் திறனை வெள்ளித்திரையிலும்  அவர் வெளிப்படுத்தியுள்ளார். சந்தேகத்திற்கு இடமின்றி, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் சக நடிகர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியவராக இருக்கிறார். மேகாவின் அபாரமான நடனத் திறன்  அவரது புகழை இன்னும் அதிகமாக்கி நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியுள்ளது.

மேகா ஷெட்டிக்குப் பிடித்த ஜானர் மற்றும் அவர் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் பற்றி கேட்டபோது,

​​”எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் விரும்புகிறேன். தமிழ் படங்கள் கதாநாயகிகளுக்கு அப்படியான கதாபாத்திரங்களை கொடுத்து வருகிறது. நானும் அதைப்போன்ற கதாபாத்திரங்களை ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்த்துள்ளேன். நடிப்புத் தவிர, திரைப்படங்களைத் தயாரிக்கவும், எதிர்காலத்தில் திரைப்பட ஆர்வலர்களுக்கு தரமான கதைகளை கொடுக்கவும் விரும்புகிறேன். இது எனது குடும்பத் தொழில். தொழில் என்பதையும் தாண்டி இது என்னுடைய காதல்” என்றார்.