விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப், கவின் பாபு, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், ராதிகா ஆப்தே, ராஜேஷ், காயத்ரி சங்கர் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். ‘அந்தாதூன்’ படத்திற்கு பிறகு இப்படத்தினை இயக்கியிருக்கிறார், இயக்குநர் ஶ்ரீராம் ராகவன்.
‘மெரி கிறிஸ்துமஸ்’ எப்படி இருக்கிறது?
மும்பைக்கு முந்தைய, 1980 களின் பம்பாய் நகரத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு, நீண்ட வருடங்கள் கழித்து வருகிறார், விஜய் சேது பதி. விடிந்தால் கிறிஸ்மஸ். அதை கொண்டாட தயாரகி வருகிறது, ஒரு பகுதி மக்கள் கூட்டம்.
விஜய் சேதுபதி ஒரு ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கே தனது மகளுடன் வந்த கத்ரீனா கைஃப் உடன் நட்பு ஏற்படுகிறது. சில மணி நேரங்களிலேயே இருவருக்குமான நட்பு அதிகரிக்க, தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார், கத்ரீனா கைஃப். இருவரும் சேர்ந்து மது அருந்துகின்றனர். இருவரும் தங்களது அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இருவரும் மீண்டும் வெளியே சென்று விட்டு, திரும்ப வீட்டுக்கு வருகின்றனர். அங்கே கத்ரீனா கைஃபின் கணவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், பிணமாக கிடக்கிறார். இருவருக்கும் அதிர்ச்சி! இதன் பின்னர் நடக்கிறது? என்பதே, மெரி கிறிஸ்துமஸ் படத்தின் யூகிக்க முடியாத கதை, திரைக்கதை, மற்றும் க்ளைமாக்ஸ்!
ஒரு நல்ல சஸ்பென்ஸ், க்ரைம் ‘டிராமா’ த்ரில்லருக்கான அனைத்து அம்சங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது, படத்தின் முதல் வெற்றி. முதலில் மிக மெதுவாக நகரும் திரைக்கதை, அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சி, முற்றுப் பெறாமல் இருப்பது ஏமாற்றம்!
ஆல்பர்ட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, இயல்பாக நடித்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் க்ளைமாக்ஸ் காட்சியில், கொலைக்கு முக்கிய தடயமாக இருக்கும் பர்ஸை கொடுத்து விட்டு, அமைதியாக பெஞ்சில் அமரும் காட்சியில் அவரது ட்ரேட் மார்க் நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்துள்ளார், கதாநாயகியாக நடித்திருக்கும் கத்ரினா கைஃப். எக்கச் சக்கமாக கிளாமர் காட்டத் தயங்காதவர் கத்ரீனா கைஃப். திரைக்கதையினில் கிளாமர் காட்ட காட்சிகள் இருந்தும், அதை இயக்குநர் தவிர்த்துள்ளார். இது கத்ரீனா கைஃப் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!?
கவின் பாபு, ராதிகா சரத்குமார், சண்முகராஜா, ராதிகா ஆப்தே, ராஜேஷ், குழந்தை நட்சத்திரம் பரி மகேஷ்வரி ஷர்மா உள்ளிட்டோரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.
மது நீலகண்டனின் ஒளிப்பதிவும், டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசையும் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. இரண்டுமே திரைக்கதைக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.
மொத்தத்தில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ சஸ்பென்ஸ், க்ரைம் ‘டிராமா’ பிரியர்களுக்கான ஸ்பெஷல்!