யூடியூபராக விஜயலக்‌ஷ்மி – முனீஷ்காந்த் நடிக்கும், ‘மிடில் கிளாஸ்’ 21 ஆம் தேதி வெளியாகிறது!

‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி,’  ‘குட் ஷோ’ நிறுவனங்களின் சார்பில், தேவ் மற்றும் கே.வி.துரை இணைந்து தயாரித்துள்ள திரைப்படம், மிடில் கிளாஸ். கதை எழுதி, இயக்கியிருக்கிறார், கிஷோர் முத்துராமலிங்கம். இதில் முனீஸ்காந்த், விஜயலக்‌ஷ்மி இருவரும் கண்வன், மனைவியாக முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க, அவர்களுடன் குரைஷி, காளி வெங்கெட், ராதாரவி, ‘கோடங்கி’ வடிவேலு, மாளவிகா அவினாஷ், வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘மிடில் கிளாஸ்’ திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படம் குறித்து இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் கூறியதாவது..,

‘மிடில் கிளாஸ் திரைப்படம், ஃபேமிலி ஆடியன்ஸை குறிவைத்து, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கொரு யுடியூப் சேனல் இருப்பது போல், கணவன், மனைவியாக வாழ்ந்து வரும் முனீஸ்காந்த், விஜயலக்‌ஷ்மி தம்பதிக்கும் ஒரு யுடியூப் சேனல் இருக்கிறது. இது ஒரு பக்கா டிராமன்னு நினைக்கும் போது படம், வேறு வேறு ஜானர்களை நோக்கி நகரும். ஒரு கட்டத்தில் ஒரு த்ரில்லர் படத்தை பார்க்கும் அனுபவம் கிடைக்கும். கலகலப்பான காமெடிக்கும் பஞ்சம் இருக்காது.  பொதுவா ஒரு வட்டத்துகுள்ள அடங்கி விடாத நல்ல மெஸேஜூம் சேர்த்து சொல்லும்.

முனீஷ் காந்த்துக்கு அமைதியான கிராமத்தில் செட்டிலாக ஆசை. விஜயலக்‌ஷ்மிக்கு நகரத்தின் வசதியுடன், பரபரப்பாக வாழ்வதற்கு ஆசை. இதனால் இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சனை தான், படம். கணவன், மனைவியாக இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். விஜயலக்‌ஷ்மிக்கு சொந்தமாக ஒரு யுடியூப் சேனல் இருக்கிறது. அதுனாலேயே இந்தப்படத்தில் மிகவும் ஒன்றிப்போய் நடித்திருக்கிறார். அவரது ‘அன்பு ராணி’ கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்படும். முனீஷ்காந்த், விஜலக்‌ஷ்மியிடம் பாத்திரங்களால் அடிவாங்குவது மாதிரியான கதாபாத்திரம். மனைவி இடும் கட்டளைகளுக்கு, அடிபணிந்து போகும் கணவன். இந்த இருவரது கதாபாத்திரங்களும் வெகுவாக அனைவரிடமும் பொருந்திப்போகும்.

ராதாரவி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகவும், குரைஷி ஆட்டோ டிரைவராகவும், காளி வெங்கெட், ‘கோடங்கி’ வடிவேலு, மாளவிகா அவினாஷ், வேல. ராமமூர்த்தி உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பினை வழங்கியிருக்கிறார்கள். நிச்சயம், அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக மிடில் கிளாஸ் இருக்கும். வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.’ என்றார்.