‘மிஸ் யூ’  – விமர்சனம்!

“Miss You’ –  Movie Review

‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரித்து, சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம், மிஸ் யூ.

‘மிஸ் யூ’ திரைப்படத்தை, ‘மாப்ள சிங்கம்’,  ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய கமர்ஷியல் படங்களை இயக்கிய N.ராஜசேகர் இயக்கியுள்ளார். நாயகன் நாயகியாக சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் இருவரும் நடித்திருக்க, அவர்களுடன் ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா சரத் லோகிதஸ்வா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘மிஸ் யூ’ திரைப்படம் போதை பொருட்கள் கடத்தல், பயன்படுத்துதல், வெட்டு, குத்து, ஆபாச அருவருப்பு இல்லாத, ஒரு பாசிட்டிவான, கலர்ஃபுல்லான ஃபீல் குட் படம்.

திரைப்படம் இயக்குவதை லட்சியமாக கொண்ட சித்தார்த், அவருடைய அம்மா, அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் ஆஷிகா ரங்கநாத்தை திருமணம் செய்து கொள்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக விவாகரத்தும் செய்கிறார். இந்நிலையில் சித்தார்த், விவாகரத்து செய்தது நினைவில்லாமலேயே, ஆஷிகா ரங்கநாத்தை காதலிப்பதாக அவரிடம் கூறுகிறார். இதன் பின்னர் என்ன நடந்தது? என்பது தான், மிஸ் யூ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

‘மிஸ் யூ’  திரைப்படத்தின் தலைப்பு கதைக்கு வெகு பொருத்தமாக இருக்கிறது. அடுத்தது என்ன, என்ன நடந்தது? என்பதை யூகிக்க முடியாத சுவாரசியமான திரைக்கதை, படத்தின் பலமாக இருக்கிறது.

படம் ஆரம்பித்த உடனேயே சரத் லோகிதஸ்வா, சித்தார்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் வேகமாக நகர்கின்றன. அதன் பிறகு கொஞ்சம் வேகம் குறைகிறது. ஆனால், க்ளைமாக்ஸ் வரை போரடிக்காமல் செல்கிறது.

சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் இருவருமே அலட்டலில்லாத நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள். அதிலும் சித்தார்த் இளமையான தோற்றத்தில் அவரது ரசிகர்களை எளிதில் ஈர்க்கிறார்.

சித்தார்த்தின் நண்பர்களாக ‘லொள்ளு சபா’ மாறன், பால சரவணன், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் படத்தின் நகர்வுக்கு பயன்பட்டிருப்பதோடு ரசிக்கவும் வைக்கிறார்கள். இவர்களில் படம் முழுவதும் சித்தார்த்துடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் கருணாகரன். காதலி விட்டுச்சென்ற சோகத்தில் ரயிவே ஸ்டேஷனில் காத்திருக்கும் அப்பாவி காதலான் கதாபாத்திரத்தில் நடித்து பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார்.  படம் முழுவதும் அவருடைய டைமிங்க் டைலாக் ரசிக்க வைக்கிறது.

சித்தார்த்தின் அப்பாவாக ஜே.பி, அம்மாவாக அனுபமா குமார், ஆஷிகா ரங்கநாத் அப்பாவாக பொன்வண்ணன், நரேன், ரமா, சஸ்டிகா, சரத் லோகிதஸ்வா ஆகியோர் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.

கே ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவு, காட்சிகளை கலர்ஃபுல்லாக படமாக்கியிருக்கிறது. ஜிப்ரானின் இசையில் பாடல்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆடிப்பாட திரைக்கதையில் இடமிருந்தும், அழகான கதாநாயகன், கதாநாயகி இருந்தும், அவர்களுக்கேற்ற பாடல்கள் இல்லாதது குறையே!

சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து போன தம்பதியினரை, உதவி இயக்குநரின் கதை ஒன்று சேர்க்கிறது.

“மிஸ் யூ’’ – பிரிவின் வலியை உணர்த்தும் காதல் திரைப்படம்!