நந்தா, மௌனம் பேசியதே தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்ட படம்!

Mounam Pesiyathe Producer Next Mega Project

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ‘நந்தா’ மற்றும் ‘மௌனம் பேசியதே’ போன்ற வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த முன்னணி நிறுவனம் ‘அபராஜீத் பிலிம்ஸ்’ (Aparajeeth Films). அமெரிக்காவில் வசிக்கும் இதன் தயாரிப்பாளர் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் பேனரில் மிகுந்த பொருட்செலவில் தயாரித்த ‘நந்தா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் அழுத்தமாகத் தடம் பதித்தார். அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பாலாவின் உதவி இயக்குநராக இருந்த அமீரை இயக்குநராக அறிமுகப்படுத்தி, அவர் இயக்கத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தைத் தயாரித்தார். அந்தத் திரைப்படமும் மிகப்பெரிய வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது. தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர்கள் மற்றும் சிறந்த கலைஞர்களை அடையாளப்படுத்தி ஊக்குவித்து வரும் தனது திரைப் பயணத்தின் அடுத்த முக்கியக் கட்டமாக, தயாரிப்பாளர் கணேஷ் ரகு தற்போது ஒரு புதிய திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளார்.

இயக்குநர் அமீரின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இராம்.நா இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு, சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இத் தொடக்க விழா நிகழ்வில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களும் பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக, இயக்குநர் சேரன் முதல் காட்சிக்கான ‘கிளாப்-இன்’ (Clap-in) சொல்ல, இயக்குநர் சசிக்குமார் கேமராவை ஆன் (Camera ON) செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இயக்குநர் அமீர் கிளாப் அடிக்க, இயக்குநர் பாலா ‘ஆக்ஷன்’ (Action) சொல்லி திரைப்படத்தின் முதல் காட்சியை படமாக்கினார். இவர்களுடன் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், பழம்பெரும் நடிகர் சிவக்குமார், அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் இயக்குநர் கரு பழனியப்பன் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்வில் நேரில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

அபராஜீத் பிலிம்ஸ் தயாரித்த முந்தைய படங்களான நந்தா மற்றும் மௌனம் பேசியதே ஆகிய இரு திரைப்படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், இந்நிறுவனத்தின் புதிய திரைப்படத்திற்கு முதன்முறையாக ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்திற்கு வாஞ்சி முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, பரதன் வசனங்களை எழுதுகிறார். பாலுமகேந்திரா கலை இயக்கத்தைக் கவனிக்க, பூபதி வேதகிரி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மேலும், மீரா ஆடை வடிவமைப்பாளராகவும், பாலு ஸ்டில்ஸ் (Stills) புகைப்படக் கலைஞராகவும், பழநி அமாவாசை ஆடை வடிவமைப்புப் பிரிவிலும், ஹரிஷ் ஒலிக்கலவை (Sound Mixing) பிரிவிலும் பணியாற்றுகின்றனர். கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்புகளை மேற்கொள்ள, மக்கள் தொடர்புப் பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார். இத்திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக விஜயகுமார் R.S மற்றும் காசி வர்மன் ஆகியோர் செயல்படுகின்றனர். சென்னையில் பூஜா நிகழ்வுகளுடன் தொடங்கியுள்ள இப்படத்தின் அடுத்தகட்ட தொடர் படப்பிடிப்புகள் வரும் நவம்பர் மாதம் முதல் கோவையில் முழுவீச்சில் நடைபெற உள்ளன. இத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.