வனிதா விஜயகுமார், ராபர்ட், செஃப் தாமு, மாஸ்டர் கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீமன், அனுமோகன் வாசுகி, ஸ்வேதா பாரதி, சௌமியா ஜெயராம், கிரண், ஷகிலா, கும்தாஜ், சார்மிளா, காயத்ரி ரெமோ, நாஞ்சில் விஜயன், பாலசுப்பிரமணி, மகேந்திர குமார், தங்கம் , ஓட்டேரி சிவா, மாஸ்டர் ஹிருத்திக் பாரதி, மாஸ்டர் ஸ்ரீனிக் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள படம், மிஸ்ஸஸ் & மிஸ்டர். எழுதி இயக்கியிருக்கிறார், வனிதா விஜயகுமார். அவரது மகள் ஜோவிகா தயாரித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
கணவன் மனைவியான வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் பாங்காக்கில் வாழ்ந்து வருகின்றனர். வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். ராபர்ட்டுக்கு உடன்பாடில்லை. இப்படியான சூழலில், பலவந்தமான முறையில், குழந்தை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார். திட்டமிட்டபடி, வனிதா கர்ப்பமாகி விடுகிறார். இருவருக்கும் மோதல் முற்றுகிறது. எனவே வனிதா, இந்தியாவிலிருக்கும் அவரது அம்மா ஷகிலாவின் வீட்டிற்கு வந்து விடுகிறார். கணவர் ராபர்ட்டும் அவரை பின் தொடர்ந்து வருகிறார். இதன் பிறகு நடக்கும் ஆபாச கூத்துக்களே மிஸ்ஸஸ் & மிஸ்டர்.
வனிதா விஜயகுமார், 40 வயதை கடந்த பெண்மணியாக அந்த கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தியிருக்கிறார். ராபர்ட்டை பலவந்தப்படுத்தி, குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அவர் செய்யும் வேலைகள் அனைத்தும், அய்யே ரகமாக இருக்கிறது. வயதுக்கு மீறி கவர்ச்சி காட்டியிருப்பது சுத்தமாக எடுபடவில்லை!
தெலுங்கு பேசியபடி, வனிதாவின் அம்மாவாக நடித்திருக்கும் ஷகிலா வரும் காட்சிகள் எரிச்சலடைய வைக்கின்றன.
பவர் ஸ்டார் சீனிவாசன், ஃபாத்திமா பாபு, கும்தாஜ், ஸ்ரீமன், ஆர்த்தி கணேஷ், கணேஷ்குமார், ரவிகாந்த், அனுமோகன், வாசுகி, ஸ்வேதா பாரதி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் மற்றும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கும் கிரண் என பலர் நடித்திருந்தாலும், எந்தக்காட்சிகளும் எடுபடவில்லை.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை ஓகே.
ஒளிப்பதிவாளர்கள் ராஜபாண்டி.டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், டிஜி கபில் ஆகியோரது ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென இருக்கிறது. பாங்காக் காட்சிகள் சிறப்பு.
40 வயதை கடந்த பெண்மணியாக நடித்திருப்பதோடு எழுதி இயக்கியிருக்கும் வனிதா விஜயகுமார், கவர்ச்சி காட்டுவதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, முழுக்க முழுக்க கமர்ஷியலான ஒரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ – முகம் சுளிக்கச் செய்யும் ஆபாசக் கூத்து!