ரஜினி ரசிகரின் அதிரடி ஆக்‌ஷன் படம் ‘முடக்கறுத்தான்’

‘வயல் மூவிஸ்’ நிறுவனம் சார்பில், சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம், ‘முடக்கறுத்தான்’. இவருக்கு ஜோடியாக கோயமுத்தூரைச் சேர்ந்த மஹானா நடித்துள்ளார்.

பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இசையமைப்பாளர் சிற்பியும் பாடலாசிரியர் பழனிபாரதியும் இணைந்துள்ளது, குறிப்பிடதக்கது.

ரஜினிகாந்தின் அதி தீவிர ரசிகரான வீரபாபு ‘முடக்கறுத்தான்’ படம் குறித்து கூறியதாவது…

எனக்கு சிறுவயதிலிருந்தே சினிமா மீது அதிக ஆர்வம் இருந்தது. அதற்கான சரியான தருணம் இப்போது தான் கிடைத்திருக்கிறது. சித்த மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க நிலையை அடைந்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

நான் நடத்திவரும் ஓட்டல் மூலம் என்னால் முடிந்தவரை 10 ரூபாய்க்கு சாப்பாடு தந்து வருகிறேன். அதை பலர் பயன்படுத்தி வருவது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது. இதைபோல் இன்னும் பல நல்ல விஷயங்களை செய்ய நினைத்திருக்கிறேன்.

குழந்தைகள் கடத்தல், அது தொடர்பான திடுக்கிடும் சம்பவங்கள் தான் முடக்கறுத்தான் படத்தின் கதை. திரைக்கதையில் ஆக்‌ஷன், அதிரடி என விறுவிறுப்பாக இருக்கும்.

இன்றைய சூழலில் குழந்தைகள் பல்வேறு சூழ்நிலை காரணமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்காக முழுமையான ஒரு அமைப்பு, திட்டம்  உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது பெரிய ஆசை.

குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது. அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்.

விரைவில் வெளியாகவுள்ள ‘முடக்கறுத்தான்’ படத்தை பார்த்துவிட்டேன். ஒரு சாதாரண பார்வையாளனாக சொல்கிறேன், இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும். என்றார் மிகுந்த உற்சாகத்துடன்.

ஹீரோவாக உருவாகியுள்ள சித்த மருத்துவர் வீரபாபு கொரொனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 6000 திற்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.