தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் படத்தொகுப்பாளர் ரோஹித் பேசும் போது,
“இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்-க்கு இந்த மேடையில் வைத்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் நாங்கள் மேடையேறுவதற்கு காரணம் தயாரிப்பாளர் பிரபாகரன் தான். அவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பாருங்கள். நிச்சயம் இந்தப் படம் உங்களை திருப்திப்படுத்தும் என்று நம்புகிறோம். இயக்குநர் தனக்கு என்ன தேவை என்பதில் மிகவும் கவனமாகவும், தெளிவாகவும் இருந்துள்ளார். இதற்காக கடின உழைப்பை வழங்கியிருக்கிறார். இந்தப் படம் எங்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் என்றும் உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்றும் நம்புகிறோம்,” என்று கூறினார்.
படத்தின் ஒலி வடிவமைப்பாளர் கெவின் பேசும் போது,
“இந்தப் படத்தின் இயக்குநரை முதலில் சந்தித்த போது, படத்தில் இசை இல்லை என்று கூறிவிட்டார். அது பெரிய சவாலாக இருந்தது. எல்லா படங்களும் இசையை சார்ந்து உருவாக்கப்படுகிறது. ஆனால், ஹாரர் திரைப்படத்தில் இசை இல்லாமல் எப்படி பணியாற்ற போகிறோம் என்று ஆலோசனை செய்தோம். அந்த வகையில், இந்தப் படம் வித்தியாசமாக உருவாகி இருக்கிறது. இவை அனைத்தும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன். நன்றி,” என்று கூறினார்.
கலை மற்றும் புரொடக்ஷன் இயக்குநர் ஹாசினி பேசும் போது,
“இந்தப் படம் மிகவும் வித்தியாசமான ஒன்று என்பதை டிரெய்லரில் இருந்தே தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஹாரர், திரில்லர், பழிவாங்கல் என பலவிதமான கதைகளை நாம் திரையில் பார்த்திருப்போம். ஆனால் ஃபவுண்ட் ஃபூட்டேஜில் இப்படியொரு கதையை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. இயக்குநரை பற்றி ஒருவிஷயம் மட்டும் சொல்ல வேண்டும். இந்தப் படம் ரிலீசுக்கு பிறகு இயக்குநரை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரியும். அவருக்கு நல்ல பெயரெடுத்துக் கொடுக்கும். அனைவருக்கும் நன்றி,” என்றார்.
மர்மர் படத்தின் சிறப்பு ஒப்பனையாளர் செல்டன் பேசும் போது,
” இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் உண்மை கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பிறகு திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, அங்கு எனக்கு சுத்திப் போட்டார்கள். அதன்பிறகு வந்துதான் இந்தப் படத்தில் பணியாற்றினேன். ஆனால் நான் அதை அவர்களிடம் கூறவேயில்லை. படம் முடிந்த பிறகு இதை சொன்னதும் எல்லோரும் அலறினார்கள். இந்தப் படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. என்னைப் போல் மேலும், பல இளைஞர்கள் இந்த துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பளித்து, ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி,” என்று தெரிவித்தார்.
மர்மர் பட விநியோகஸ்தர் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது,
“இந்தப் படத்தின் கதை ஜவ்வாது மலையில் நடக்கும் சம்பவத்தை தொடர்ந்து ஒரு குழு அங்கு செல்கிறது. அவர்களுக்கு என்ன ஆனது என்பதே இந்தப் படத்தின் கதை. மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இதன் ஒலி வடிவமைப்பு அருமையாக இருக்கிறது. நீங்கள் அனைத்து படங்களுக்கும் நல்ல வரவேற்பை கொடுக்கின்றீர்கள். அதேபோல் இந்த இளம் குழுவினருக்கும் நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். இந்தப் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் விநியோகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மார்ச் 7-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகிளில் வெளியாகிறது. இத்தகைய குழுவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. புதிய ஜானர், ஹாலிவுட் தரத்தில் திரைப்பட அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதை இந்த இளம் குழு எண்ணமாக கொண்டிருக்கிறது. படத்தின் போஸ்டர் முதற்கொண்டு வித்தியாசமாக இருக்க வேண்டும் என பணியாற்றி உள்ளனர். இது சுவாரஸ்ய அனுபவத்தை ஏற்படுத்தும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும். வாய்ப்புக்கு நன்றி,” என்றார்.
விழாவில் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசியதாவது,
“பல இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். நிறைய பத்திரிகையாளர் சந்திப்புகளை கடந்து வந்திருக்கிறேன். அங்கிருந்து பார்த்து கைத்தட்டி இருக்கிறேன். அந்த வகையில், இங்கிருந்து பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முதலில் அனைவருக்கும் வணக்கம். ஊடகம் இன்றி இங்கு எதுவும் இல்லை. அரசியல், நடிகர், இயக்குநர் என யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு முதலில் வெளிக்கொண்டு வரும். அந்த வகையில், முதலில் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதை பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன். உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதை படமாக காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தை தான் நாங்கள் படமாக காண்பிக்கிறோம். அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித்திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணாமல் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம்.
12 நிமிடங்கள் ஒரே ஷாட் காட்சி. அதை படமாக்கும் போது பயிற்சி செய்தோம். எல்லா படங்களிலும் காட்சியை படமாக்கும் முன் நடிகர்கள் பயிற்சி எடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளரும் பயிற்சி எடுத்துக் கொண்டார். டிரெய்லரில் நடிகர்கள் கேமராவை அவர்களாகவே பிடித்து இயக்கிய படி பார்த்திருப்பீர்கள். உண்மையில், அவற்றை படம்பிடித்தது ஒளிப்பதிவாளர் தான். அவர்களின் கை அசைவுகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் கேமராவை இயக்க வேண்டும். இந்த ஒரே ஷாட் காட்சி எடுப்பதற்காக ஒருநாள் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தினோம்.
கதைகளை எழுதிக் கொண்டு இருந்தேன். நான் எடுத்த குறும்படங்களில் எனக்கு பிடிக்காதவற்றை நானே ஓரம்கட்டி விடுவேன். சில கதைகளை படமாக்க தயாரிப்பாளர்களை தேடி வந்தேன். மருத்துவராக கிடைக்கும் மரியாதை, இயக்குநருக்கு கிடைக்காது என்பதை புரிந்து கொண்டேன். அதன்பிறகு மேல்படிப்பு படித்தேன். மேல்படிப்பு முடித்ததும், எந்த மருத்துவமனையில் பணியாற்ற போகிறாய் என வீட்டில் கேட்டார்கள். நான் படமெடுக்க போகிறேன் என்று கூறினேன். அந்தப் படத்தின் டிரெய்லரை தான் தற்போது நீங்கள் பார்த்தீர்கள். குறும்படம் போன்றே, இந்தப் படத்தைய எடுக்கும் போதும் பிடிக்கவில்லை என்றால் ஓரம்கட்டிவிடலாம் என்றே நினைத்திருந்தேன். முதலில் வரும் போது சிறப்பாக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகவும் கடின உழைப்பை கொடுத்தார்கள். பலர் இங்கு வாங்கிய சம்பளத்தில் பெரும் பகுதியை மருத்துவத்திற்கே செலவு செய்திருப்பார்கள். நிறைய காட்சிகள் அங்கிருந்த இயற்கை வெளிச்சம் கொண்டே படமாக்கினோம். சில காட்சிகளில் தீ மூட்டி அதில் இருந்து கிடைத்த வெளிச்சம் கொண்டு படமாக்கினோம். அப்போது காட்சிக்கு பின்னணியில் இருப்பவர்கள் காட்சிக்கு ஏற்ப ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சூழலில் எத்தனை முறை கேட்டாலும், ஒளிப்பதிவாளர் சிரமம் பார்க்காமல் படமாக்கி கொடுத்தார். மிக்க நன்றி ஜேசன்.
அடுத்து படத்தொகுப்பாளர், இந்தப் படத்தில் அவர் படத்தொகுப்பு மட்டுமின்றி துணை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். எந்த பணியாக இருந்தாலும், எத்தனை முறை கேட்டாலும் செய்து கொடுத்தார். இந்தப் படத்தை கிட்டத்தட்ட 50 முறை எடிட் செய்திருக்கிறார். உங்களுக்கும் மிக்க நன்றி ரோஹித். ஒருமுறை எடுப்பதை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு ஒற்றை காரணம். படத்தின் சென்சார் வரை படம் எங்களிடம் இருக்கும். சமயங்களில் சென்சாருக்கு பிறகும் படம் எங்களிடம் இருக்கும். அந்த மாதிரி சூழ்நிலைகளில் நான் இல்லை என்றாலும், படத்தின் இறுதிக்கட்ட பணிகளை செய்து கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் கடைசியாக இணைந்தவர் ஒலி வடிவமைப்பாளர் கெவின், ஆனால் அவர் சிறப்பாக பணியாற்றிக் கொடுத்தார். இந்தப் படத்திற்காக ஒலி வடிவமைப்பாளரை தேடுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த வகையில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பரிந்துரையில் எங்களுக்கு கிடைத்தவர் கெவின். நான் கூறும் விஷயங்களை சரியாக புரிந்து கொண்டு பணியாற்றிக் கொடுத்தார். இதற்காக கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வரை ஆனது. எல்லாவற்றுக்கும் நன்றி கெவின்.
புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும். கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். இந்தப் படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.