சதீஷ் , சுரேஷ் ரவி, மோனிகா , மானசா சவுத்ரி, லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் சுப்பிரமணி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், முஸ்தபா முஸ்தபா. பிரவீன் சரவணன் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு, கே எஸ் விஷ்ணு ஸ்ரீ. இசை, எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்.
நாயகன் சதீஷ், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, ஒரு சில தினங்களில் காதலி மோனிகாவுடன் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இவர் நடித்த ஒரு படத்திலிருந்து பெண்ணுடன் இருக்கும் படுக்கையறை காட்சி இணையத்தில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து அந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டுமானால் பணம் கொடுக்குமாறு நிர்பந்தம் செய்கிறார், ஒரு மர்ம மனிதர். என்ன செய்தார், சதீஷ்? என்பது தான் ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் சதீஷ், கதையையும் உணரவில்லை. கதாபாத்திரத்தையும் உணரவில்லை. காமெடி என்ற பெயரில் கண்டபடி நடித்துள்ளார். காமெடி சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. நாயகி மோனிகா, கவர்ச்சிக்காக! இரண்டாவது நாயகனாக சுரேஷ் ரவி, வி ஜே பார்வதியின் கெஞ்சலுக்காக பிட்டுக்கதைகளை சொல்லி அவரையும், அவரது தோழிகளையும் பரவசப்படுத்துகிறார். இன்னொரு நாயகி ஐஸ்வர்யா, சதீஷூடன் இணைந்து தாராள கவர்ச்சி காட்டியிருக்கிறார். சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் வந்து போகின்றனர்.
ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையும் ஓகே! எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் சரவணன், பெண்களை எவ்வளவு இழிவு படுத்தமுடியுமோ, அதை வி ஜே பார்வதியின் துணை கொண்டு நடத்தி முடித்திருக்கிறார். கலகலப்பாக சொல்ல வேண்டிய கதையை, காமத்துடுன் கூடிய காமடியில் சொல்ல முயற்சித்து தடுமாறியிருக்கிறார். சுவாரசியமே இல்லாத திரைக்கதை படத்தின் பலவீனம்!